SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடற்பயிற்சிக்கு முன் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளலாமா?!

2018-05-30@ 15:03:48

நன்றி குங்குமம் டாக்டர்

தேவை அதிக கவனம்


உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இன்றைய இளைஞர்கள் ஜிம்மில் சுறுசுறுப்பாக இயங்கவும், வெகுவிரைவில் தங்களின் லட்சியமான சிக்ஸ்பேக் உடலை அடையவும் கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்படும் சில எனர்ஜி டிரிங்ஸ் மற்றும் துணை ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. சில உடற்பயிற்சி நிலையங்களில் இவற்றை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதும் நடக்கிறது. இது சரியா, தவறா என்பதுதான் தற்போதைய விவாதமாக இருக்கிறது.

உடற்பயிற்சிக்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் இந்த Pre-Workout Supplements பற்றிய ஆராய்ச்சியில், ‘உடற்பயிற்சியின்போது தசைகளை மேலும் உறுதியாக்கவும், எனர்ஜி லெவலை அதிகரிக்கவும் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

ஓட்டப்பந்தயம், தடகளம் போன்ற கடினமான விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியின் மீதான கவனத்தை ஒருமுகப்படுத்தவும், விளையாட்டில் புது உத்வேகத்தை கூட்டவும் சில நேரங்களில் ஒரு சிலிர்ப்புணர்வை தூண்டுவதற்காகவும் துணை ஊட்டச்சத்துக்களை(Supplements)
எடுத்துக் கொள்கிறார்கள்.

துணை ஊட்டச்சத்துக்களில் இருக்கும் சில உட்பொருட்கள் ரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்பவை என்றாலும், அவற்றின் அளவு மீறினால் அபரிமிதமான உடல் வளர்ச்சி, அளவுக்குமீறிய வேகம் போன்ற ஆபத்தான பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம்.

இவற்றை எடுத்துக் கொள்வதாலேயே ஒருவர் கட்டுடல் கொண்டவராகவோ, வலிமையானவராகவோ மாறிவிட முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில சட்ட விரோதமான ஊக்க மருந்துகளும் துணை ஊட்டச்சத்துக்கள் பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

அவை உடலில் எதிர்வினை புரிவதோடு, அவற்றுக்கு அடிமையாகும் நிலையும் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை’’ என்கிறார் அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியனான டாக்டர் ஜோர்டன் மூன்.

உடற்பயிற்சிக்கு முன்னால் எடுத்துக்கொள்ளும் இந்த ஊட்டச்சத்து மாத்திரைகள் உண்மையிலேயே பலனளிப்பவையா? ஊட்டச்சத்துக்களின் அவசியம் மற்றும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜிடம்
பேசினோம்...

‘‘வெறும் வயிற்றிலோ அல்லது க்ரீன் டீ போன்றவற்றை மட்டுமே அருந்திவிட்டு உடற்பயிற்சி செய்யக் கூடாது. க்ரீன் டீயில் ஆற்றல் கொடுக்கக்கூடிய எந்த ஒரு சத்துப்பொருளும் இல்லை. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தாலும், ஏதேனும் உணவு உட்கொண்டுவிட்டு உடற்பயிற்சி செய்தாலும் ஒரே அளவு கொழுப்பைத்தான் எரிக்க முடியும் என்று பல ஆய்வுகள் சொல்லியிருக்கிறது. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் தசைகள் சேதமடைய வாய்ப்பிருக்கிறது.’’

என்ன காரணம்?

‘‘நீங்கள் பசியாக இருக்கும்போது உடலுக்குத் தேவையான புரதச்சத்தை சிறுநீரகங்கள், கல்லீரலுக்கு பதிலாக தசைகளிலிருந்து தானாகவே எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறது. இது நடக்கும்போது தன்னிச்சையாக தசை எடையை உடல் இழக்க ஆரம்பிக்கிறது. இறுதியில் வளர்சிதைமாற்ற விகிதம் குறையத்தொடங்கி, உடல் எடை குறைப்பது கடினமாகும். அத்துடன் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்காமல் போகும்.

எனவே, உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதற்குமுன் மிதமாக ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொண்டால்தான் கூடுதல் ஆற்றலோடு செயல்பட முடியும்.ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் விரைவில் களைப்படையாதவாறு ஜிங்க், கார்போஹைட்ரேட், புரோட்டீன், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் சம அளவு இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சிகளில் முழுமையான கவனத்தோடு செய்ய முடியும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சர்க்கரை இருப்பதால் நல்ல ஆற்றல் கிடைக்கும். வேக வைத்த முட்டை ஒன்றை சாப்பிடலாம்.

சிலருக்கு பழங்கள் சாப்பிடப் பிடிக்கும். இன்னும் சிலர் திட உணவாக இல்லாமல் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் பாதாம், பழங்கள் கலந்த புரோட்டீன் மில்க் ஷேக் அருந்துவது நல்லது. பால் கலந்த காஃபியும் அருந்தலாம். ஏனெனில், கஃபைன் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான உடல் தேவைகள் இருப்பதால் அதற்கேற்ற ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடலாம்.  எல்லோரும் ஒரே மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், அவரவரின் தேவைக்கேற்ப வைட்டமின் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆற்றலை அதிகரிக்கும் மாத்திரைகள் சாப்பிடுவது தவறு.

வைட்டமின் சத்து மாத்திரைகளும் தேவைப்படும் அளவில், குறிப்பிட்ட காலத்துக்குத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே முடிவு செய்து சாப்பிடுவது தவறு. சில வீரியம் மிக்க வைட்டமின் சத்து மாத்திரைகள் தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது அதில் உள்ள சில உட்பொருட்கள் கல்லீரலில் தங்கி பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடும். அதனால் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்வதே நல்லது.

தசை வலிமைக்கு புரோட்டீன் உணவுகளும், எலும்பு வலிமைக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் உணவுகளும், ஃப்ளேக்ஸ் சீட்ஸும் சிறந்தவை. ஒமேகா 3 ஆசிட் உள்ள ஃப்ளேக் சீட்ஸ் எலும்பு இணைப்புகளின் உராய்வுத்தன்மையை குறைக்கும் இலகுப்பொருளாக செயல்படுகிறது. எப்போதும் இயற்கையான பொருட்களில் கிடைக்கும் ஊட்டச்சத்தே பாதுகாப்பானது. இதற்காக எனர்ஜி டிரிங்ஸ், எனர்ஜி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார்.

- உஷா நாராயணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்