SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

SECOND OPINION அவசியமா அதிகப்பிரசங்கித்தனமா?

2018-05-16@ 12:35:10

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக ஒரு மருத்துவரோ அல்லது மருத்துவமனையோ சொல்லும் கருத்தை பொதுமக்கள் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொள்வதில்லை. அது சரியா... தவறா... என்று சிந்திக்கிறார்கள்; விவாதிக்கிறார்கள். குழப்பம் தீராதபட்சத்தில் இரண்டாவது மருத்துவமனையையோ, இரண்டாவது மருத்துவரையோ நாடுவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த விழிப்புணர்வு காரணமாக Second opinion என்ற வார்த்தையும் பிரபலமாகி இருக்கிறது. இப்படி இரண்டாவது மருத்துவ விசாரணை மேற்கொள்வது தேவைதானா என்று பொது நல மருத்துவர் சேகரிடம் கேட்டோம்...

‘‘முதலில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சையில் நம்பிக்கை ஏற்படாத பட்சத்தில், மற்றொரு மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ள அவரை அணுகி ஆலோசனை பெறுவதை அல்லது சிகிச்சை தொடர்பாக இரண்டாவதாக கருத்து பெறுவதை Second Opinion என்று சொல்கிறோம்.

குழப்பமான, அதிர்ச்சியான, வித்தியாசமான நோய்களுக்கு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்கிறபோது அதில் சந்தேகங்களும், மாற்றுக் கருத்தும் இருக்கும் பட்சத்தில் அதற்குரிய மற்றொரு சிறப்பு மருத்துவரிடம் சென்று இரண்டாவது கருத்து கேட்பதற்கும், தான் விரும்பியவாறு சிகிச்சை பெறுவதற்கு நோயாளிக்கு உரிமை உள்ளது.

எல்லோரையும் போல சாதாரணமாக இருந்த ஒரு நபர் பெரிய அளவிலான உடல் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு உள்ளாகும்போது, ஒரு மருத்துவரிடம் மட்டும் பார்ப்பதைக் காட்டிலும், அதற்குரிய மற்றொரு சிறப்பு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் பெறுவதில் எந்தத் தவறுமில்லை.

இருமல், சளி, வாந்தி, பேதி, காய்ச்சல், குளிர்காய்ச்சல், சாதாரண நிலையிலுள்ள டைபாய்டு, மலேரியா, டெங்கு போன்ற கொசுவால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற 70 சதவிகித நோய்களை வெளிப்படையாகவும், மருத்துவ நெறிமுறைப்படியும் சிகிச்சையளித்து மருத்துவர்கள் சரிசெய்து விடுகிறார்கள். எனவே, எல்லா விஷயங்களுக்கும் செகண்ட் ஒப்பீனியன் தேவையில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள
வேண்டும்.’’

செகண்ட் ஒப்பீனியன் யாருக்கு தேவை?

‘‘சிலரை வெளித்தோற்றத்தின் அடிப்படையில் பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போல் தெரியலாம். ஆனால், அவருக்கு இன்னும் 10 நிமிடத்தில் குடல்வால் வெடித்துவிடும் அபாயநிலை உடலுக்குள் இருக்கலாம். அவரை பரிசோதனை செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் பெரிய அளவிலான உடல் நல பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இதுபோன்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பிரச்னை அல்லது அதிர்ச்சியளிக்கும் ஒரு நோயின் தன்மைகளைக் கண்டறிந்த பிறகு அந்த நோயாளியின் உடல்நலம், மனநலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர் செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறபோது அவர் அந்த நோயை எதிர்கொள்வதற்கான மன உறுதி பெறுவதற்கு செகண்ட் ஒப்பீனியன் தேவைப்படுகிறது.
 
புற்றுநோய்க் கிருமி, காசநோய் மற்றும் HIV போன்றவற்றால் தாக்கப்பட்டிருப்பது, நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னை, வலிப்பு நோய், மூளையில் கட்டி, ஹைபர்டென்ஷனால் சிறுநீரக பிரச்னை ஏற்படுவது, நீரிழிவு நோயால் சிறுநீரகப் பிரச்னை, கண் பிரச்னை ஏற்படுவது, தசை, கை, கால் வீங்கியிருப்பது, மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு, மூளையில் ரத்தக்குழாய் வெடித்திருப்பது, குழந்தைகளுக்கு ஏற்படுகிற வலிப்பு நோய், சிறு
நீரகப் பிரச்னைகள் மற்றும் அவர்களுக்கு நீண்டகால சிகிச்சை எடுக்க வேண்டிய பிரச்னைகள் ஏற்படுவது போன்ற வித்தியாசமான நோய்களுக்கும், சரிசெய்யவே முடியாது என்று மருத்துவர் பரிந்துரைக்கும் பிரச்னைகளுக்கும், நிரந்தரத் தீர்வே கிடையாது என்கிற நோய்களுக்கும் செகண்ட் ஒப்பீனியன் தேவைப்படுகிறது.’’

செகண்ட ஒப்பீனியன் எப்போது தேவை?

‘‘HIV அல்லது புற்றுநோய் போன்ற ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கேட்டவுடன் ஒருவருக்கு மனதளவில் ஓர் அதிர்ச்சி உண்டாகிறது. இதனால் சரியாக சாப்பிட முடியாமல், யாரிடமும் பேச முடியாமல் போவதோடு மன அழுத்தமும் ஏற்படுகிறது.

இதுபோன்ற நிலைகளில் இப்படிப்பட்ட நோயோடு நாம் வாழ்வதே வீண், யாருக்கும் பாரமில்லாமல் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நோய் சார்ந்த பயம் நோயாளிகளுடைய வாழ்க்கைப் பயமாகவே மாறி அவர்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

இதுபோன்ற சமயங்களில்தான் செகண்ட் ஒப்பீனியன் மிகவும் அவசியமாகிறது. சிக்கலான ஒரு நோய் இருப்பதை மருத்துவர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்த பின்பு, நோயாளியிடம் அந்நோயின் தன்மைகள், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி சொல்கிறபோது அது அவருடைய வாழ்நாள் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இதுபோன்ற நபர்கள் அந்நோய் குறித்த சிறப்பு மருத்து
வரிடம் இரண்டாவது கருத்து கேட்கலாம். அது நோயாளியின் மன உறுதி மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.

மருத்துவர்களில் சிலர் அன்புடனும், அக்கறையுடனும் பேசும் விதத்திலேயே அந்த நோய் குறித்த அச்சத்தைப் பாதியாகக் குறைத்து விடுவார்கள். அதன்
பிறகு உரிய சிகிச்சைகள் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைப்பதோடு நோயாளி அந்த நோயை எதிர்த்து, தன்வாழ்நாளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திவிடுவார்கள்.

நோய் குறித்த முதல் மற்றும் இரண்டாம் கருத்து கேட்பது, மருத்துவ சிகிச்சை மற்றும் செலவு போன்றவற்றை தேர்வு செய்வது போன்றவற்றில் நோயாளிக்கு உரிமை உள்ளது. ஒரு நோயாளி தனக்கான மருத்துவ சிகிச்சையை தான் விரும்புகிற இடத்தில், விரும்பும் விதத்தில் பெறுவதற்கும் உரிமையுள்ளது.

குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்று யாராக இருந்தாலும் முதலில் ஒரு மருத்துவரிடம் காண்பிக்கிறபோது, சிக்கல் ஏற்படுத்தக்கூடிய பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குரிய சிறப்பு மருத்துவரை அணுகி அந்நோயின் நிலை குறித்து இரண்டாவது கருத்து கேட்டு அதை உறுதி செய்து கொள்வது நல்லது.’’

செகண்ட் ஒப்பீனியன் கேட்கும் முறை என்ன?

‘‘மருத்துவரீதியாக குழப்பங்கள் ஏற்படக்கூடிய, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய்கள் இருப்பதைக் கண்டுபிடித்த சூழ்நிலையிலும், ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்படும்போதும், அமைதியாக வெளிப்படாமல் இருக்கும் நோய்கள் பின்னர் பெரிய அளவில் பிரச்னைகளை உண்டாக்குமென்று மருத்துவர் பரிசோதித்து சொல்கிறபோதும், தீர்வில்லாத பல நோய்கள் கண்டுபிடிக்கப்படுகிற சூழலிலும், ஒரு நோயின் நோய் கண்டறிதல் முறை குழப்பமானதாக இருக்கும்போதும் செகண்ட் ஒப்பீனியன் தேவைப்படுகிறது.

இதுபோன்ற சில பிரச்னைகளுக்கு நாம் யாரிடம் வேண்டுமானாலும் First Opinion (முதல் கருத்து) கேட்கலாம். ஆனால், Second Opinion (இரண்டாவது கருத்து) கேட்பதற்காக நாம் அணுகக்கூடிய மருத்துவர்கள் மிக முக்கியமானவர்களாகவும், குறிப்பிட்ட நோய்ப்பிரிவு சார்ந்த சிறப்பு நிபுணர்களாகவும் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.’’

எல்லோராலும் சிறப்பு மருத்துவர்களை அணுக முடியுமா?

‘‘இன்றைய நவீன உலகில் நமது தவறான வாழ்வியல் முறைகளால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதோடு, நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக ஆபத்தான நோய்களையும் எளிதாக எதிர்கொண்டு சந்தோஷமாக வாழ்வதற்கான நவீன சிகிச்சை முறைகளும் அதிகரித்து வருகிறது. அதேபோல இந்த நவீன சிகிச்சைகளுக்கான செலவுகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நோய்கள் மற்றும் அதற்குரிய நவீன சிகிச்சை முறைகள் குறித்த சரியான புரிதலும், விழிப்புணர்வும் எல்லோரிடமும் இருப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் பல நோய்களுக்கு நவீன முறையிலான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருவதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பண வசதியின்றி வறுமையில் இருப்பவர்கள் முதலில் அணுகுவது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களாக இருக்கிறது. அங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்கும்.

கூடுதல் மருத்துவ வசதிகளோடு, நவீன மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் அதற்கேற்ற அடுத்தடுத்த நிலையிலுள்ள தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் மூலம் அவர்கள் பரிந்துரைக்கப்படலாம்.

அரசு மருத்துவமனைகள் அடிப்படை மற்றும் நவீன மருத்துவ வசதிகள், மருத்துவமனை நிலைகள் அடிப்படையில் Primary, Secondary, Tertiary என்று மேற்சொன்னவாறு மூன்று வகை Health Care Centre-களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சை பெற முடியும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடிப்படையான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடிய சாதாரண நிலையிலுள்ள நோய்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். ஆனால், அதிக குழப்பங்களோடு, அசாதாரண நிலையில் உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற நோய்களுக்கு Tertiary Health Care Centres என்று அழைக்கப்படுகிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதே சரியானதா இருக்கும்.

நோயாளிக்கு நோய் குறித்த அச்சம், நோயின் பாதிப்புகள், தன் வாழ்நாள் குறித்த மனதளவிலான அச்சம் இருக்கிற பட்சத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுகி, அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது நல்லது!’’

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்