SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெல்த் காலண்டர் 2018

2018-03-14@ 14:04:43

நன்றி குங்குமம் டாக்டர்

சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

ஹெல்த் காலண்டர்


எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் தேதி சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயானது, மனித நோய்த்தடுப்பு குறைபாட்டு வைரஸால்(Human Immunodeficiency Virus- HIV) உண்டாகிறது. இந்த எச்.ஐ.வி. கிருமி நமது உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தை படிப்படியாக சிதைத்து, அழித்து இறுதியில் எய்ட்ஸ் நோயை உண்டாக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறையும்போது, பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து இறுதியில் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படுகிறது. விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எச்.ஐ.வி. உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்னையாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2015-ம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரப்படி உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.5 கோடி பேராகவும், எய்ட்ஸால் மரணமடைந்தவர்கள்
11 லட்சம் பேராகவும் இருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறிகள்

காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாய் அல்லது பிறப்புறுப்புப் புண், மூட்டு வலி, தொடர் களைப்பு, திடீர் எடை இழப்பு, தொற்று எளிதில் பரவுதல், வயிற்றுப்போக்கு, இருமலும் மூச்சடைப்பும், நாக்கு அல்லது வாயில் நீடித்த வெண்புள்ளி அல்லது அசாதாரண புண், நனைக்கும் இரவு வியர்வை, தோல் அரிப்பு, மங்கலான பார்வை போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.

 எச்.ஐ.வி. பரவும் வழிகள்


* எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் உறவு கொள்ளும்போது விந்து மற்றும் பெண்ணுறுப்புத் திரவத்தின் மூலம்தான் இந்த நோய்க்கிருமி பெரும்பாலும் பரவுகிறது.

* தொற்றுள்ள ரத்தத்தால் அசுத்தமடைந்த ஊசியையோ, சிரிஞ்சையோ மறுபடியும் பயன்படுத்துவதால் பரவுகிறது.

*  தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவர் உடலுக்கு ரத்தம் செலுத்தும் போது பரவுகிறது.

* HIV  தொற்றுள்ள தாயின் ரத்தத்தின் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் பரவுகிறது.

* மூளை அல்லது முதுகுத்தண்டைச் சுற்றி இருக்கும் மூளைத்தண்டு வடத் திரவம், எலும்பு மூட்டுகளைச் சூழ்ந்திருக்கும் திரவம், கருவைச் சூழ்ந்து இருக்கும் பனிக்குட நீர் போன்ற திரவங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பரவுகிறது.

* பச்சை அல்லது காது குத்தும்போது எச்.ஐ.வி. பரவும் ஆபத்து உள்ளது. எனவே பச்சைகுத்தல், காதுகுத்தல், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவத்தின்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Antiretroviral Therapy (ARV)எச்.ஐ.வி. தொற்றுக்கு கொடுக்கப்படும் இந்த சிகிச்சையின் மூலம் அந்த கிருமியைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும்.

இந்தத் தொற்று உடையவர்களும், தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களும் ஆரோக்கியமான, நீண்ட, பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும். சரியான நேரத்தில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் இந்த வைரஸ் பெருகுவதைத் தடுக்க முடியும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களில் எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் நோயோடு வாழ்பவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியமான இந்த சிகிச்சை தற்போது இலவசமாகவே கிடைக்கிறது. எச்.ஐ.வி. தொற்று கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையளிப்பது வலியுறுத்தப்படுகிறது.

நோய்த்தடுப்பு முறை

எய்ட்ஸைத் தவிர்க்க ABC என்கிற ஓர் எளிய முறையைப் பின்பற்றலாம். அதாவது A-Abstain (தவிர்த்தல்), B-Be faithful (உண்மையாய் இருத்தல்), C-Condomise (காப்புறை பயன்படுத்துதல்) என்பதுதான் அந்த முறை. இதோடு பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்வது அவசியம்.

* எச்.ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
* இந்த நோய் ஆபத்தைக் குறைக்க, உடலுறவில் ஈடுபடும்போது காப்புறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை
அதிகரிக்க வேண்டும்.
* ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசி, சிரிஞ்சுகளை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இத்தொற்றைத் தடுக்கலாம்.
* ஆணுறுப்பின் நுனித்தோலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.
* அதிகாரபூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் மூலம் மட்டுமே ரத்த மாற்றம் செய்ய வேண்டும்.
* பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.
* பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களுடைய இணையர்கள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற நபர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனை செய்வது நல்லது.

எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் ஏற்படும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இந்தத் தொற்று படிப்படியாக வளர்ந்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை முடக்கி இறுதியில் எய்ட்ஸ் நோயை உண்டாக்குகிறது. எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது,  அவர்களைத் தொடுதல், கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்புகளால் எச்.ஐ.வி. பரவுவதில்லை.

 இந்த வைரஸ் உடலுறவு அல்லது உடல் திரவங்கள் மூலமே பரவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். AIDS நோய் குறித்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு அரசின் இலவச உதவி எண் - 1097 ஐ தொலைபேசியில் அழைத்து உரிய உதவியைப் பெறலாம்.

தேசிய மாசு தடுப்பு தினம் (National Pollution Prevention Day)


1984-ஆம் ஆண்டு 2-ம் தேதி இரவு மற்றும் 3-ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு விபத்தால் 2,500 பேர் உயிரிழந்தனர்.

இந்த நச்சு வாயுவால் கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் கண்பார்வையை இழந்தனர். இந்த விபத்து உலகளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ஆம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைக் கழிவுகளாலும், மனித அலட்சியத்தாலும் உருவாகும் மாசுகளைத் தடுத்தல். தொழிற்சாலைப் பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை சரியான முறையில் கையாளுவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச்செய்வது, சட்டரீதியிலான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடமும், தொழிற்சாலை நிர்வாகத்திடமும் ஏற்படுத்துதல் போன்ற அனைத்தும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கங்கள்.

மனித நடவடிக்கைகளால் உண்டாகும் பலவிதமான மாசுகளால் நீர், நிலம், காற்று, காடு போன்ற இயற்கை வளங்கள் தற்போது பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஆகவே நாம் இந்த விதிகளையும் அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளையும் சரியாக நடைமுறைப்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.

நோயாளிகள் பாதுகாப்பு தினம் (World Patient Safety Day)

நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இடமே மருத்துவமனை.

இருப்பினும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளும் இங்கு ஏற்படுவதுண்டு. நோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் ஏற்படும் தவறுகளால் நோயாளியின் பாதுகாப்பில் பிரச்னைகள் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளைக் குறைத்து நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் நோக்கமாகும்.

அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி சுகாதாரப் பராமரிப்பை சிக்கலான ஓர் அமைப்பாக மாற்றியுள்ளது. இதனால் நோயாளியை பாதுகாப்பாக பராமரிக்கப் பணியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஏராளமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதனால் நாம் அனைவரும் மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்த சரியான புரிதலைப் பெற வேண்டியது அவசியம்.

நோயாளியின் பாதுகாப்புப் பிரச்னைகள்


* தவறுதலான, தவறவிட்ட அல்லது அறியாமல் ஏற்படும் தாமதமான     நோய்கண்டறிதல்.
* நோயாளிக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப்     பராமரிப்பின்போது உண்டாகும் தொற்றுகள்.
* நோயாளிகள் தவறான மருந்துகளைப் பெறுதல் அல்லது சரியான மருந்துகளைத் தவறான அளவுகளில் பெறுதல்.
* உள்நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுதல்.
* தவறான உடல் பகுதியில் அல்லது தவறான நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுதல்.
* மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத நிலை. இத்தகைய
காரணங்களால் நோயாளியின் பாதுகாப்பில் பிரச்னைகள் உண்டாகிறது.

நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு...

* ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான அடையாளம் மற்றும் குறியீட்டை உறுதிசெய்வது நல்லது.
*  மருந்துச்சீட்டில் சுருக்கமான குறியீட்டைத் தவிர்த்து, கூடியவரையில் பெரிய எழுத்தில் எழுதினால் நோயாளியும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
* சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சியளிப்பதும், அவர்களை குழுவாக இணைத்து பணியாற்றச் செய்வதும் தவறுகளைக் குறைக்க உதவும்.
* பணி மாற்றங்களின்போது சரியான பணி ஒப்படைப்பும், பணி ஏற்பும் இருக்க வேண்டும். குறிப்பாக நோயாளி ஒப்படைப்பின்போது அதை பின்பற்றுவது அவசியம்.
* நோயாளியை அவருடைய குடும்பத்தார் கவனித்துக் கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டும்.

நோயாளிகள் தங்கள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை

* உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை உட்பட அனைத்து சுய விவரங்களையும் அளித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவ வேண்டும்.
* உங்களுக்கு ஏதாவது சந்தேகமோ அல்லது நோய் கண்டறிதலில் நம்பிக்கை இல்லாமலோ இருந்தால், அதற்குரிய பதிலை உடனடியாக கேட்டுப்பெற வேண்டும். அதன்பிறகும் சந்தேகம் இருந்தால் இரண்டாவது மருத்துவரின் கருத்தைப் பெறலாம்.
* உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைமுறை பற்றிய அனைத்து தகவலையும் மருத்துவரிடம் கேட்க வேண்டும். பக்க விளைவு ஏதாவது இருக்குமா என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: க.கதிரவன்


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்