SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

2018-01-05@ 13:47:40

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின ஈர்ப்பின் விதிகள் உங்களுக்குள் ஆடும் விளையாட்டை உங்களால் புரிந்து கொள்ளவும், விளக்கிச் சொல்லவும் முடியாது.

அவனைப் பார்க்காவிட்டால் ஏன் பைத்தியம் பிடிக்கிறது. அவள் பக்கத்தில் இருக்கும்போது ஏன் இதயம் எகிறிக் குதிக்கிறது என்கிற கேள்விகளுக்கான விடை உங்களது உடலியல்பில், பரிணாம வளர்ச்சியில் புதைந்து கிடக்கிறது. உங்கள் ஹார்மோன்கள் காலம் தோறும் பருவ வயதில் நடத்தும் அந்தப் புதிர் விளையாட்டின் அடியும், நுனியும் அறிவது அவசியம்’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பாபு ரங்கராஜன்.

என்னுடைய உடலில் என்னதான் நடக்கிறது?

‘‘ஆண் - பெண் இருவருக்குள்ளும் பருவ வயதில் மூளையில் ரசாயன மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களும் உடல் தோற்றத்தையே புரட்டிப் போடுகிறது. தயக்கம், வெட்கம், ஈர்ப்பு என புதிய உணர்வுகள் ஆட்டிப் படைக்கிறது. படித்துக் கொண்டிருக்கும்போதே மனம் இடம் மாறிப் பாய்கிறது. இதுவரை இருந்த நான் எங்கே போனேன்?

இப்போது நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என்ற கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்கும். தனக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கிறது. அதை முறையாகப் புரிந்து கொள்வதற்கான வழிகள் இங்கு இல்லை. அப்பட்டமாக ஆன்லைனில் கிடைக்கும் விஷயங்களும், நண்பர்களின் ரகசிய வழிகாட்டுதல்களும் தவறான தேடலுக்கே வழி வகுக்கிறது. உடல் குறித்த புதிர்கள்தான் பாலுணர்வுத் தேடல்களின்துவக்கமாக உள்ளது.’’

எதிர்பாலினத்தின் மீது ஏன் ஈர்ப்பு உருவாகிறது?

‘‘அதுவரை சாதாரணமாக எல்லாருடனும் பழகியவர்கள் இனி ஆண்பால், பெண்பால் பார்த்து பழகும் எல்லைகளை சுருக்கிக் கொள்வார்கள். காதல் கதைகள் படிப்பதும், கவிதைகளும் பிடிக்க ஆரம்பிக்கும். ரசாயனங்களின் சுரப்பு மாற்றத்துக்கு ஏற்ப ரசனைகளும் மாறத் துவங்கும். காதல் காட்சிகள், காதல் பாடல்கள் பார்க்கும் விருப்பம் உண்டாகும். மனம் காதல் காதலாய் தேடத் துவங்கும்.

காதலில் துவங்கும் இத்தேடல் காமம் வரை நீளும். பாலியல் தொடர்பான கதைகள், வீடியோக்கள், போர்னோ படங்கள் என வெரைட்டியாக காமம் தேடும் படலத்தை மனம் தொடங்கும். இப்படி ரகசியமாய்ப் பார்க்கும் விஷயங்களை எதிர்ப்பாலினத்தவரிடம் சோதித்துப் பார்க்கும் எண்ணம் தோன்றும்.

சினிமாவில் பார்க்கும் விஷயங்கள் இந்த வயதினரிடம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சினிமாவில் நடப்பவை எல்லாம் உண்மை என மனம் நம்பத் துவங்கும். சினிமாவில் வெளிப்படுத்துவது போல காதலை வெளிப்படுத்துவதை ஹீரோயிசமாக மனம் நினைத்துக் கொள்ளும்.

தன்னை ஒரு ஹீரோவாக மனம் கற்பனை செய்து கொள்ளும். ஹீரோயிசத்தின் மூலம் எதிர்ப்பாலின் மனதில் ஆர்வத்தைத் தூண்டுவதும் இதன் நோக்கமாக இருக்கும்.நான்கு பேர் இருக்கும் இடத்தில் சென்டர் ஆஃப் அட்ராக்சனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

இதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களது தோற்றத்தை அழகுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆணும் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள முயல்கிறான். கண்ணாடி முன்னாடியே தவம் கிடப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.

ஆண் - பெண் பாலினங்களில் மனிதர்கள் படைக்கப்பட்டதில் இயற்கையின் உள் நோக்கம் மறு உற்பத்தியே! அந்த மறு உற்பத்திக்கு உடல் தயாராகும் பருவத்தில் மனமும் தனக்கான இணையை தேர்வு செய்து மறு உற்பத்தியில் ஈடுபடுவது என்பது இயற்கை ஆண் - பெண் உயிர்களுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட். அதற்கான வழிமுறைகளும், வயதும் காலம் காலமாக மாறி வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் ஆண் - பெண் இருவரும் படிக்க ஆரம்பித்து வேலைக்கு சென்ற பின் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு உயிர் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாம் காலத்தைத் தள்ளிப் போட்டாலும் இயற்கை தன் வேலையை விரைவில் துவங்குகிறது.

ஆண் - பெண் உடல்கள் மெச்சூரிட்டி எனப்படும் மறு உற்பத்தி படிநிலையை குறைந்த வயதில் எட்டுகிறது. அதேபோல் பாலியல், பாலுணர்வு சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் மிகச்சிறந்த வயதில் அது குறித்த தேடலை உருவாக்கிவிடுகிறது.

பள்ளிப் பருவத்திலேயே பாலுறவுக்கான வாய்ப்புகளை சிலர் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இது சரியா, இதில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதைப் பின்தள்ளி விட்டு பாலுறவின் வழியாகக் கிடைக்கும் ஒரு வித சந்தோஷத்தை அனுபவிக்க உடலும், உள்ளமும் தயாராகிவிடுகிறது.

இந்த தேடல் காலத்தில் ஒருவர் டீன் ஏஜாக இருந்து மற்றொருவர் அதிக வயதுடையவராக இருக்கும்போதும் மனம் அதை கணக்கில் கொள்வதில்லை. ஆண் - பெண் என்பதை மட்டுமே மனம் நம்பத் துவங்குகிறது.

இந்த வயதில் உண்டாகும் பாலியல் ஈர்ப்பு... காதல் என கொண்டாடப்படுவதும், காமத்துக்காக உடன் போவதும்... எதையும் இழக்கத் தயாராக இருப்பது போன்ற வாய்ப்புகளை டீன் ஏஜ் பருவத்தினர் மத்தியில் உருவாக்குகிறது.’’

உடலின் மீதான உரிமைகள் என்னென்ன?

‘‘உனது உடல் மீது உனக்கு முழு உரிமையுள்ளது. உனது அனுமதியின்றி அதைத் தொடவோ, வேறுவிதமாகப் பயன்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. உடலுக்கான பாதுகாப்பு வளையம் தாண்டி யாரையும் அனுமதிக்கத் தேவையில்லை என்ற புரிதலை டீன் ஏஜ் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். உடல் ஏன் மாறுகிறது, மாற்றுப் பாலின உடலின் மீதான ஈர்ப்பே, உயிர் ஈர்ப்பு விசையாக இயங்கி காதலாகிக் கசிந்துருகச் செய்கிறது.

இந்த வயதில் காதலென்பது காமத்துக்கான விசிட்டிங் கார்டு என்று புரிய வைத்துவிட வேண்டும். நல்ல தொடுகை, கெட்ட தொடுகை குறித்த புரிதலையும் உருவாக்க வேண்டும். சம வயதினர் மட்டுமின்றி அதிக வயதினரும் பாலுணர்வு ரீதியாக இந்த வயதினரை ஏமாற்ற முயல்வதும் இதனால்தான்.

உடல் மீதான உரிமையை உணர வைப்பதும் மற்றவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டல் வேலைகளில் ஈடுபடுவதை முன்கூட்டியே புரிந்துகொள்ளச் செய்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.’’காதல் முதல் காமம் வரை...

‘‘மாற்றுப் பாலினத்தவர்கள் இருவர் ஏதாவது ஒரு விஷயத்துக்காக பேசுவதை அனுமதிக்கலாம். அதே பேச்சு அடிக்கடித் தொடர்வது மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது பேசுவது என்பது போன்ற பழக்கங்களை துவக்கத்திலேயே தவிர்த்திடுங்கள். எதிர்ப்பாலினத்தவரிடம் என்னென்ன விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதையும் சென்சார் செய்து விடுங்கள்.

ரிமோட் எப்பொழுதும் உங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். சேனலை மாற்றுவதா? மியூட் செய்வதா, டிவியை ஆஃப் செய்வதா இந்த மூன்று வாய்ப்புகளில் எது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களது ரிமோட்டை எதிராளியிடம் கொடுப்பதும், அவர்களை அப்படியே நம்பி தன்னை ஒப்படைப்பதும் ஒன்றுதான்.

யாருடன் என்ன உறவு, உங்களுக்கும் அவர்களுக்குமான எல்லை எது என்பதில் தெளிவாக இருங்கள்.காதல் காமமாக மாறுவதற்கு சில நொடிகள் கூடப் போதும். காரணம் இல்லாமல் ஒருவர் உங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தால் கவனமாக இருங்கள். எக்ஸட்ரோஜென், என்டோ ஜென் என்ற இரண்டு ஹார்மோன்களும் காதல் உணர்வுகளின் போது உங்களுக்குள் தூண்டப்படுகிறது.இதையே நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்.

ஒரு குறிப்பிட்ட நபரிடம் பேசும்போதும், அவருடன் இருக்கும் போதும் நீங்கள் மகிழ்வாய் உணர இந்த ஹார்மோன்கள் தூண்டப்படுவதே காரணம். ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உங்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவும், நீங்களே பறவையாகவும் இதுவே காரணம். இந்தப் பறத்தல் பயணம் அடையும் இடம் காமமே. இந்த வயதில் காமத்தை தேடிக் கொண்டிருப்பதால் படிப்பு அது சார்ந்த முன்னேற்றங்கள் தடைபட்டு ரயில் தடம் புரள்
வதைப் போல வாழ்க்கையும் தடம் புரண்டு விடும்.’’

இலக்கில் தெளிவாயிருங்கள்...

‘‘ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் ஒரு எல்லையில் நின்று புரிவதற்கான கண்ணாடியாக இந்த ஈர்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இருபாலினத்தவருக்கும் அந்தந்த வயதுக்கான சவால்களையும், லட்சியங்களையும் திட்டமிடுங்கள். உங்கள் லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் நீங்கள் வெறித்தனமாக ஓட வேண்டியிருக்கும்.

மறு உற்பத்திக்கான ஈர்ப்பு என்பது எந்தக் காலத்திலும் யாரிடம் வேண்டுமானாலும் உருவாகலாம். முதலில் மனதில் பதிந்த ஒருவரையே துரத்திக் கொண்டிருப்பது தேவையற்றது. அதுவும் டீன் ஏஜ் பருவத்தில் தனக்கான வாழ்க்கை துணை குறித்து எடுக்கும் முடிவுகள் பாலியல் தேவை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அது முழு வாழ்க்கைக்குமான சரியான தேர்வாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது.

அப்படியே உங்களைக் காதல் பிசாசு கடித்துக் குதறினாலும், கொன்று குவித்தாலும் உங்களுக்கான அடையாளம் உருவாகும் வரை கட்டிப் போடுங்கள். நீங்கள் எதைத் தேடி ஓடத் துவங்குகிறீர்களோ அதுவே உங்களது நிரந்தரமான மகிழ்ச்சியாக இருக்கும். உயிர் ஈர்ப்பு விசையை வெற்றிக்கான ஈர்ப்பு விசையாக மாற்றும் வித்தை உங்களுக்கு இதன்மூலம் கைவரும். நீங்கள் உங்களைக் காதலிக்கத் துவங்குங்கள்... காமத்துக்கு இன்னும் கொஞ்சம் காத்திருங்கள்!

( Keep in touch! )

எழுத்து வடிவம்: கே.கீதா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-01-2019

  17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்