SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசாங்கத்திடம் தெளிவான திட்டங்கள் இல்லை!

2017-12-07@ 14:23:52

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘இந்தியாவில் நீர், காற்று மற்றும் நில மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடுதல் இருந்தாலும் அவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமுள்ளது’’ என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரும் மருத்துவருமான இளங்கோ.

‘‘மாசுபாடுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும்போது மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சிகள், சுகாதாரப்பிரிவு போன்றவற்றோடு கலந்து ஆலோசித்து மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முடிவெடுக்க வேண்டியது அவசியம். அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து கழிவு நீரோடைகள் அமைத்தல், சரியான முறையில் சுத்திகரிப்பு செய்தல், தொழிற்சாலைக் கழிவுகளை சரியான முறையில் சுத்திகரித்து, அவை நீர் நிலைகளில் கலப்பதைத் தடுத்தல் போன்றவற்றுக்கான நீண்டகாலத் தீர்வுகள் மூலம் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.

தோல் தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், கனரக இயந்திர தொழிற்சாலைகள், பால் பண்ணைகள் போன்றவற்றின்  கழிவுகளை முறையாக சுத்திகரித்து அப்புறப்படுத்துவது இல்லை. தமிழகத்தின் மாநகர் மற்றும் நகர்ப் பகுதிகளில் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் உருவாகும் திட மற்றும் திரவ நிலைக் கழிவுகள் கடல், ஆறு, கால்வாய், ஏரி போன்ற நீராதாரங்களில் கலப்பதால் அவை மாசடைகின்றன. சென்னை மாநகரில் கூவம் ஆறு தற்போது மிகப் பெரிய கழிவு நீரோடையாகவே மாறிவிட்டது மிகப்பெரிய சோகம். இதுபோல தமிழகத்திலுள்ள பல ஆறுகளின் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இவற்றுக்கெல்லாம் காரணம், தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை முறைகளில் சரியான திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் இல்லாததே.

நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இதனால்தான் தொடர்ந்து நீடிக்கிறது. கோலாலம்பூருக்கு சுகாதார ஆய்வுப்பணிக்கு சென்றிருந்தபோது, அந்நகரின் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார முறைகள் சிறப்பாக இருந்தது ஆச்சரியப்பட வைத்தது. அந்த நகரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ்நாடு தற்போது, ஒட்டுமொத்தமாக சுற்றுச் சூழல் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 100 ஆண்டுகள் பின்தங்கியே இருக்கிறது. எனவே, சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிலத்தடி நீரை வணிக நோக்கில் சுரண்டுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் முதன்மையான கடமை.

நிலம் மாசுபாட்டு தன்மைகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும். சமூக ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மூலம் நடக்கக்கூடிய சமூக கண்காணிப்பை கிராமம் முதல் பெருநகரங்கள் வரை எல்லா மட்டங்களிலும் செயல்பட வைக்க வேண்டும். இதுபோன்ற சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உள்ளடக்கிய அமைப்புகளுக்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுப்பதோடு, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற அமைப்புகளுக்கு அரசு கண்காணிப்போடுகூடிய அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகள் சரியான முறையில் கண்காணிக்கப்படுவது இல்லை.

இதனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பல வகையான குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் அதிகரிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க அரசு கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதோடு, கடுமையான தண்டனைகளையும் வழங்க வேண்டும்.  நமது நாட்டில் சேகரிக்கப்படும் திட மற்றும் திரவக் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்ய வேண்டும். இதுபோன்ற கழிவுகளிலிருந்து உரம், எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னைகள், பருவநிலை மாற்ற பிரச்னைகள் போன்றவற்றைத் தடுக்கவும், காடுகள் அழிவதைத் தடுக்கவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காடுகள் வளர்ப்பு குறித்த இலக்குகள் நிர்ணயித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.காடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை அழியாமல் தடுத்தல், வனவளத்தைப் பெருக்குதல், வனவிலங்குகளை பாதுகாத்தல் போன்றவை குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் அதிகரிக்க வேண்டும். தற்போது பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்குப் பதிலாக குறைந்தது பத்து மரங்களாவது நடப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரிடமும் மரம் வளர்த்தல் மற்றும் வனவளத்தை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.’’

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்