காற்றுக்கே மூச்சடைக்குதே...

Date: 2015-01-30@ 15:34:00

காலையில் ஆபீஸ் கிளம்புவதும், மாலை வீட்டுக்குத் திரும்புவதும் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் சாகசம்போல்தான். பரபரக்கும் வாகனங்கள், கூட்டம் கூட்டமாக ஓடும் மனிதர்கள், நேரத்துக்கு வராத பேருந்துகள் என்று ஒவ்வொரு நிமிடமும் ஆக்ஷன் ஜாக்சனாக இருக்க வேண்டிய நேரம் பீக் அவர். இதய நோயாளிகள் இதுபோன்ற பரபரப்புகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது ‘European Heart Journal’ என்ற மருத்துவ இதழ்.

‘‘குறிப்பாக, இந்த பீக் அவரின் புகை மண்டலம் இதய நோய்களை உருவாக்குவதிலும் இதய நோயால் உயிரிழப்பு ஏற்படுத்துவதிலும்  முக்கியப் பங்கு வகிக்கிறது’’ என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான ராபர்ட் ஸ்டோரி. இதயநோயாளிகளிடம் நடைபெற்ற ஓர் ஆய்வின் முடிவாகவே இந்த செய்தியை அறிவித்திருக்கிறார். ‘நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளைக்கூட டிராபிக் அதிகமிருக்கும் நேரத்தில் தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பீக் அவரில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல’ என்று ஐரோப்பாவின் இதயநலத்துறை அமைப்பு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளதையும், ‘இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசுத்தமான காற்று, சீரான சுவாசம் பற்றிச்சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்’என்றும் தன்னுடைய ஆய்வில் சுட்டிக்காட்டுகிறார் ராபர்ட்.

பருமன் இருந்து நீரிழிவும் இருந்தால், காற்றின் மாசு காரணமாக இதயக்கோளாறு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். உயர் ரத்த அழுத்தத்தையும் இன்சுலின் சுரப்பில் ஒழுங்கற்ற தன்மையையும் புகை உருவாக்குகிறது என்றும் பட்டியலிடுகிறார்.  அதனால் குழந்தைகள், வயதானவர்கள், இதயக்கோளாறு, சுவாசக்கோளாறு உள்ளவர்கள் காற்று மாசடைந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது பள்ளிக்கூடமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாக இருந்தாலும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் அறிவுறுத்தியிருக்கிறது ‘யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’!

Like Us on Facebook Dinkaran Daily News