ஊர்வசி ஊர்வசி தேவையிருக்கு பார்மஸி!

Date: 2015-01-30@ 15:26:58

அறிவோம்!

பார்மஸிஸ்ட் டே ஜனவரி 12 Know your medicineKnow your pharmacist என்கிறது பிரபல ஆங்கில வாசகம். ஆனாலும், நோயாளிகளுக்கும் மருந்துக் கடைக்காரர்களுக்குமான உறவு என்பது பெரும்பாலும் இணக்கமானதாக இருப்பதில்லை. மருத்துவர்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருந்துக் கடைக்காரர்கள். மருத்துவரிடம் ஒரு நோயாளிக்கு உள்ள உரிமைகளைப் போலவே, மருந்துக் கடைக்காரரிடமும் அப்படி சில உள்ளன. மருந்து வாங்கும் போது மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளையும், எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில மருந்துத் தகவல் களையும் பற்றிப் பேசுகிறார் ‘ரீஜெனிக்ஸ் டிரக்ஸ் லிமிடெட்’டின் செயல் இயக்குநர் மேகநாதன்.

மருந்து வாங்குபவர், மருந்துக் கடைக்காரரிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் எவை?

நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கான பில்,அந்த மருந்துகளின் எக்ஸ்பைரி தேதி... மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதப்பட்டிருப்பதும் மருந்துக் கடைக்காரர் உங்களுக்குக் கொடுத்திருப்பதும் ஒரே மருந்துதானா என்பதை உறுதிப்படுத்துகிற பதில்.

டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து, ஒரு  பார்மஸியில் இல்லை என்றால், மருந்துக் கடைக்காரர் என்ன செய்ய வேண்டும்? அவராகவே வேறு கம்பெனி மருந்தை கொடுப்பது சரியா?

மிகவும் தவறு. மருத்துவர் எழுதியதைத் தவிர்த்து, மாற்றாக வேறு கம்பெனி அல்லது வேறு மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளைக் கொடுக்க மருந்துக் கடைக்காரருக்கு உரிமை கிடையாது. தனது கடையில் மருத்துவர் குறிப்பிட்ட அந்த மருந்து இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு போன் செய்து, அதற்கு இணையான வேறு நிறுவனம் அல்லது மூலக்கூறு மருந்துகள் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே கொடுக்க வேண்டும்.

மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்துகளை விற்பது சரியா?


மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இன்றி, மருந்துகளை விற்பது மிகப்பெரிய குற்றம். ‘ஓடிசி’ (Over The Counter) மருந்து களை மட்டும்தான் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல்

மருந்துக் கடைக்காரர்கள் விற்க முடியும்.எவை எல்லாம் ஓவர் தி கவுன்டர் மருந்துகள்?


குரோசின் போன்ற சிலவகை பாரசிட்டமால், டைஜின், ஜெலுசில் போன்ற சில செரிமான மருந்துகள், சில வகை இருமல் மருந்துகள் ஆகியவை இந்தப் பட்டியலில் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் டி.வி. விளம்பரங்களில் வருகிற மருந்துகள் எல்லாமே ஓடிசி வகையறாதான்!

எந்தெந்த மருந்துகளை அப்படி விற்கலாம்?  தலைவலி, காய்ச்சல் என மருந்து கேட்டு வருபவர்களுக்கு மருந்துக் கடைக்காரர்களே மருந்துகள் கொடுப்பது சரியா?


தலைவலி, காய்ச்சலுக்குக் கூட மருந்துக்கடைக்காரர்கள் தாமாக மருந்துகள் கொடுக்கக் கூடாது. அப்படிக் கேட்பவர்களிடம், மருத்துவரை சந்தித்து, மருந்து எழுதி வாங்கி வரச் சொல்வதே நேர்மையான மருந்துக் கடைக்காரருக்கு அழகு. ஒருவேளை மருந்துக் கடைக்காரர் கொடுக்கும் மருந்துகள், நோயாளிக்கு ஏதேனும் பக்க விளைவுகளை உண்டாக்கினால், அதற்கான முழுப் பொறுப்பும் அந்த மருந்துக் கடைக்காரருடையதே...

சில மருந்துகளை ஒரு ஸ்ட்ரிப்பாகத்தான் வாங்க வேண்டும் என்கிற நிலையில், பணமில்லாத நோயாளிகள் அவற்றைக் குறைத்துக் கேட்டால் கொடுக்கலாமா?

கொடுக்கக்கூடாது. ஆன்ட்டிபயாடிக் மற்றும் சில உயிர் காக்கும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கிற நாட்களுக்கு, குறிப்பிட்ட அளவுகள் எடுத்துக் கொண்டால்தான் நோய் குணமாகும். நோயாளியின் வசதிக்காக அவர் கேட்கும் எண்ணிக்கையில் கொடுப்பதன் பின்னால் உள்ள ஆபத்தை மருந்துக் கடைக்காரர் அவருக்கு எடுத்துப் புரிய வைக்கலாம்.

எக்ஸ்பைரி தேதி இல்லாமல் வெட்டித் தரப்படுகிற மருந்துகளை மக்கள் வாங்கலாமா?


‘‘வாங்கக்கூடாது. எக்ஸ்பைரி தேதியை சரிபார்த்த பிறகே மருந்துகளை வாங்க வேண்டும். அதை சரிபார்ப்பது மருந்து வாங்குபவரின் உரிமையும் கூட.
எக்ஸ்பைரி ஆகும் மருந்துகளை

மருந்துக் கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?


அரசாங்க விதிப்படி காலாவதியாகி விட்ட மருந்துகளை மருந்துக் கடையிலேயே ஒரு பகுதியில் தனித்து வைக்க வேண்டும். அந்த மருந்துகள் விநியோகஸ்தருக்கே திருப்பி அனுப்பப்படும். விநியோகஸ்தர்கள் அந்த மருந்துகளை மருந்து கம்பெனிகளுக்கு திருப்பி அனுப்புவார்கள். அங்கே அந்த மருந்துகள் அழிக்கப்பட்டு விடும். காலாவதியான மருந்துகளை பொது மக்கள் வாங்கவே கூடாது. தவறுதலாக வாங்கி விட்டாலும், உடனடியாக அவற்றை மருந்துக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, புதியதை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

எக்ஸ்பைரி ஆவதற்கு முன்பே சில மாத்திரைப் பட்டிகள் கசிந்து, மருந்து வெளியே வருகின்றனவே... அவற்றை மருந்துக் கடைக்காரர்களிடம் திருப்பிக்
கொடுக்கலாமா?


டேமேஜ் ஆன மருந்துகளை மருந்துக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, புதியதைப் பெற்றுக் கொள்ள மக்களுக்கு 100 சதவிகிதம் உரிமை உண்டு. டேமேஜ் ஆன மருந்துகள், மேலே சொன்னது போல விநியோகஸ்தர்கள் வழியாக கம்பெனிகளுக்கே அனுப்பப்பட்டு அழிக்கப்படும்.

பார்மஸி படிக்காதவர்கள் மருந்துக் கடைகள் நடத்த முடியுமா?


மருத்துவச் சட்டத்தின் படி, ஒவ்வொரு பார்மஸியிலும் முறையாக படித்து, பயிற்சி பெற்ற ஒரு பார்மசிஸ்ட் இருந்து மருந்துகளை எடுத்துக் கொடுக்க வேண்டும்.

பார்மஸி படிக்க என்னென்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்?

டிப்ளமா இன் பார்மஸி (டி.பார்ம்) மற்றும் பேச்சிலர் ஆஃப் பார்மஸி (பி.பார்ம்) என இரண்டு பாடப்பிரிவுகள் உள்ளன. டி.பார்ம் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கு பிளஸ் டூவில் அறிவியலை பிரதானப் பாடமாக எடுத்துப் படித்துத் தேறியிருக்க வேண்டும். டி.பார்ம் என்பது 2 வருடப் பயிற்சி. பி.பார்ம் என்பது 4 வருடங்கள். இதில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

வீட்டில் அவசியம் வைத்திருக்க வேண்டிய மருந்துகள்... அவ்வப்போது மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டிய மருந்துகள் எவை?

‘‘எல்லோர் வீட்டிலும் கட்டாயம் ஒரு முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு ஸ்ட்ரிப் பாரசிட்டமால் மற்றும் ஆன்ட்டாசிட் (நெஞ்சு கரித்தல் மருந்துகள்) வைத்திருக்கலாம். ஜலதோஷம், முதுகுவலி மற்றும் தலைவலிக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தேவையின்றி வீட்டில் வைத்திருக்கிற மருந்துகளை (எக்ஸ்பைரி ஆகாத பட்சத்தில்) மக்கள் என்ன செய்யலாம்?

தேவையற்ற மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுத்து விடலாம். அந்த மருந்துகளை மருத்துவர்கள் ஏழை நோயாளிகளுக்குத் தேவைக்கேற்ப இலவசமாகக் கொடுத்து உதவுவார்கள்.

வெரிக்கோஸ் வெயின்ஸ் இது ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை!


பார்க் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது பக்கத்தில் வந்து அமர்ந்தார் அந்த நடுத்தர வயது மனிதர். லுங்கி கட்டிக்கொண்டு காலில் சாக்ஸ் அணிந்திருந்தது வினோதமாக இருந்தது. ‘‘வெரிக்கோஸ்னு சொன்னாங்க தம்பி...மளிகைக்கடை வேலை நமக்கு... நாள் முழுக்க நின்னுட்டே இருக்கம்ல...’’ என்று சாக்ஸை கழட்டினார். இரண்டு கால்களிலும் தழும்புகளும் காயங்களுமாக ரணகளம்.

வெரிக்கோஸ்  வெயின்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அது இந்த அளவு மோசமானதாக இருக்குமா?

ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் பாலகுமாரிடம் கேட்டோம். ‘‘இதை கால் நரம்பு சுருண்டு கொள்கிற பிரச்னை என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், ரத்த நாளங்களில் ஏற்படுகிற பிரச்னைதான் ‘வெரிக்கோஸ் வெயின்ஸ்’ (Varicose veins). அது நரம்பு அல்ல’’ என்று அறிமுகம் கொடுப்பவர், வெரிக்கோஸ் பற்றி இன்னும் நுட்பமாக விளக்க ஆரம்பிக்கிறார்.

‘‘இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தத்தை தமனிகள்  (Arteries)   எடுத்துச் செல்கின்றன. பாதத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டிய ரத்தத்தை சிரைகள்  (Veins)   எடுத்துச் செல்கின்றன. இந்த சிரைகள் சுருண்டு கொள்வதையே வெரிக்கோஸ் என்கிறோம்...’’

நாளங்கள் எதனால் இப்படி சுருண்டு கொள்கின்றன?


‘‘பாதத்தில் இருந்து மேல்நோக்கி ரத்தம் செல்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதிலும், பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக ரத்தம் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் உதவிபுரிகின்றன. இதற்காக அதிக ஆற்றல் செலவாவதால் சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள்  நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன. வால்வுகள் செயலிழப்பதால் ரத்த ஓட்டம் நின்று, நாளங்கள் சுருண்டு கொள்கின்றன...’’

வெரிக்கோஸில் வகைகள் எதுவும் இருக்கிறதா?


‘‘வெளியில் தெரியும் ரத்தநாளங்கள், உள்ளுக்குள் இருக்கும் ரத்தநாளங்கள், இந்த இரு நாளங்களையும் இணைக்கும் நாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் என 3 வகைகள் இருக்கின்றன. அரிதாக கைகளிலும் வெரிக்கோஸ் வரலாம். ஆனால், கால் களோடு ஒப்பிடும்போது கைகளில் அழுத் தம் குறைவு என்பதால் கைகளில் வெரிகோஸ் வரும் வாய்ப்பும் குறைவுதான்.’’

வெரிக்கோஸ் குறைபாடு எதனால் வருகிறது?


‘‘வெரிக்கோஸ் இதனால்தான் வருகிறது, இவர்களுக்குத்தான் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. வெரிக்கோஸ் யார் யாருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்ற சாத்தியங்களை வேண்டுமானால் சொல்லலாம்.  அதிக நேரம் நிற்கும் பணி, முதுமை, புகைப்பழக்கம், பருமன், பரம்பரைக் குறைபாடு, இடுப்பை இறுக்கும் உடைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், விபத்து, உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பது போன்ற காரணிகளால் ரத்தநாளங்களின் வால்வுகள் செயலிழந்து போகலாம். ஹார்மோன் கோளாறுகள், மாதவிலக்குத் தொடர்பான பிரச்னைகள், கர்ப்பம் போன்ற காரணங்களால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வெரிக்கோஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்...’’

வராமல் தடுப்பது எப்படி?

‘‘வெரிக்கோஸை எப்படித் தடுக்கலாம் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேற்சொன்ன காரணங்களைத் தவிர்ப்பதன் மூலம் வெரிக்கோஸ் ஏற்படாமல் ஓரளவு தடுக்க முடியும்...’’

அறிகுறிகள் என்னென்ன?


‘‘வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு நாளங்கள் சுருண்டு கொள்வது, தசைப்பிடிப்பு, வீக்கம், மாலை நேரங்களில் மட்டும் ஏற்படும் வலி, தோலின் நிறம் மாறுவது, அரிப்பு, 4 வாரங்களுக்கு மேல் ஆறாத காயம் போன்ற அறிகுறிகள் கால்களில் தெரிந்தால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது...’’

வெரிக்கோஸால் ஆபத்து ஒன்றும் இல்லையே?


‘‘வெளிநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸால் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால், உள் ரத்தநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் மிகவும் ஆபத்தானது. ரத்தநாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம் திடீரென்று திட்டுத்திட்டாக உறைந்து நுரை யீரலுக்குச் சென்று மூச்சுத்திணறலை உண்டாக்கும். உடனடியாக கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு...’’

உள் ரத்தநாளங்களில் வெரிக்கோஸ் ஏற்படுவது ஏன்?


‘‘விபத்து, மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருப்பது, புற்றுநோய், கருத்தடை மாத்திரை உபயோகிப்பது போன்ற காரணங்களால் உள்
ரத்தநாள வெரிக்கோஸ் வரும்...’’

மருத்துவர்கள் வெரிக்கோஸை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

‘‘முதல் வகை வெரிக்கோஸில் கால்பகுதியில் ரத்தநாளங்கள் சுருண்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும். உள் ரத்தநாளங்களில் ஏற்பட்டிருந்தால் டாப்ளர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும். எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது, வால்வுகள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்...’’

இதற்கு என்ன சிகிச்சை?

‘‘ஆரம்பகட்டமாக இருந்தால் மருந்து, மாத்திரை, ஊசி, சாக்ஸ் போட்டுக் கொள்வது என எளிதான சிகிச்சைகள் அளிக்கப்படும். நிரந்தரத் தீர்வு வேண்டு மென்றால் அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. இதில் வழக்கமான அறுவை சிகிச்சை, லேசர் அறுவை சிகிச்சை, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி முறை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. இந்த சிகிச்சைகளில் ரத்த நாளத்தின் ரத்தம் வரும் வழியை அடைத்துவிடுவது, மாற்று ரத்தநாளம் வழியாக ரத்தத்தை செல்ல வைப்பது, பிரச்னைக்குரிய ரத்தநாளத்தை அகற்றிவிடுவது என்று பல வழிகள் இருக்கின்றன...’’

ரத்தநாளத்தை அகற்றுவதால் ஆபத்து இல்லையா?


‘‘ஏற்கெனவே செயலிழந்து போன ரத்தநாளத்தைத்தான் அகற்றுகிறோம். அதனால், எந்த ஆபத்தும் இல்லை!’’

Like Us on Facebook Dinkaran Daily News