SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல்?!

2018-04-26@ 15:01:21

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகவும் நிறைவேறாத கனவாகவுமே இருந்து வருகிறது. 2015-16 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட எய்ம்ஸ் அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு 2017-18 ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் செயல்வடிவம் பெற்றுவிட்டது. இத்தனை பெரிய தாமதம் ஏன்? எய்ம்ஸ் அமைவதில் என்னதான் சிக்கல்? மருத்துவ வட்டாரத்திலும், அரசு தரப்பிலும் சில விஷயங்களை விசாரித்தோம்...

AIIMS என்பது என்ன?

All India Institute of Medical Sciences (AIIMS) என்பது 1952-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1956-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனம் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இந்நிறுவனம் மற்றும் அதன் கிளைகள் மூலமாக எல்லா வகையான நோய்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது, உயர்தர மருத்துவக் கல்வி வழங்குவது மற்றும் சர்வதேச அளவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொண்டுவருகிறது.

இதுபோன்ற மத்திய அரசின் உயர்சிறப்பு மருத்துவமனையை தமிழ்நாட்டில் அமைப்பதற்குத் தேவையான இடவசதி மற்றும் பிற வசதிகளுடைய இடத்தை மத்திய அரசு விரைந்து தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே மருத்துவ வசதிகள் நிரம்பப் பெற்றுள்ள நகரத்தில் இதுபோன்ற மருத்துவமனையை அமைப்பதைக் காட்டிலும், அம்மருத்துவமனையின் தேவை அதிகமாக இருக்கும் நகரத்தில் அல்லது மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் கிராமத்தில் அமைத்தால் எல்லாப் பகுதி மக்களுக்கும் நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க உதவியாக இருக்கும்.

என்னதான் சிக்கல்?

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இரண்டு பொது நலன் மனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு நீதிமன்றத்தில், ‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் அந்தப் பட்டியல் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இடங்களை மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளது. இதில் எங்கு இம்மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது. இந்த மனு விசாரணைக்குப் பிறகு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள 5 இடங்களிலும் மத்திய துணைக் குழு ஆய்வு நடத்தி இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பான அனைத்துப் பணிகளையும் 31.12.2017-க்குள் முடித்து, தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 1.1.2018-ல் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென நீதிபதிகள் 2017 அக்டோபர் 2-ஆம் தேதி உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவின்படி எந்த ஓர் அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை  வெளியிடவில்லை.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோருடைய அமர்வில் 2018 ஜனவரி 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பி.பால்பாண்டி வாதிட்டார்.

இதன் பிறகு நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் 2018 பிப்ரவரி 12-ம் தேதி பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இதுவரையில் மத்திய அரசு எந்த பதிலும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் இந்த மருத்துவமனையை அமைக்கும் செயல்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்துவதோடு காலம் தாழ்த்திக் கொண்டே போவதுதான் நடக்கிறது.

தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சார்ந்த போட்டி, பொறாமைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உள்ள அரசியல் நிலைப்பாடுகளின் தெளிவற்றநிலை போன்றவையே இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைக் களைந்து, தமிழ்நாட்டு மக்களின் சுகாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இம்மருத்துவமனையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்