SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிட்னஸுக்கு உதவும் உணவுகள்

2018-03-08@ 15:11:45

நன்றி குங்குமம் டாக்டர்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல நமது உடல் நோய், நொடிகளின்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், வாழ்வில் சாதிக்க விரும்பும் இலக்குகளை அடைவதோடு சந்தோஷமாகவும் வாழ முடியும்.

நமது உடல் ஆரோக்கியத்துக்கும், உறுதித் தன்மைக்கும் விளையாட்டுக்கள், யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றோடு ஊட்டச்சத்துமிக்க உணவுமுறை மிகவும் அத்தியாவசியமானது. அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் பற்றி உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன் விளக்குகிறார்.

‘‘உடல் ஆரோக்கியம் என்பது தற்போது விலை மதிப்பற்ற ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான உடல்பருமன் பிரச்னைகள், 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருகிற நீரிழிவு, இளம்பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளால் ஏற்படுகிற கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்(Polycystic ovarian diseases) போன்ற பிரச்னைகளைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதற்கு முறையான உடற்பயிற்சிகளோடு, பின்வரும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுமுறைகளையும் பின்பற்றுவது அவசியம்.

புரதம்

உடல் தசைகள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்துக்கு புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. ஹார்மோன்கள், என்ஸைம்கள், ஆன்டிபாடிகள் போன்றவற்றின் உருவாக்கத்துக்கும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் ஆறுவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் புரதம் அவசியமாகிறது. துவரம்பருப்பு, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ், மொச்சை, காராமணி, கொட்டைகள் மற்றும் விதைகள், பால் மற்றும் பால் பொருட்கள், மீன் போன்ற பிற அசைவ உணவுகள், புழுங்கல் அரிசி போன்றவற்றில் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது.
 
தக்காளி ஜூஸ்

இதில் Lycopene என்கிற சிவப்பு நிறமி மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை சோர்வான தசைகள் புத்துணர்வு பெறவும், சிகிச்சைக் காயங்கள்
ஆறுவதற்கும் உதவுகிறது. புதினா, கொத்தமல்லிக்கீரை மற்றும் பச்சைக் கீரைகள்இவற்றில் கால்சியம், பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து மற்றும் பல வைட்டமின்களும் நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கும், ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன. ஒரு வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது இந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

கடல் உணவு மற்றும் கொட்டை வகைகள் இவற்றில் ஒமேகா 3 என்கிற உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்புச் சத்து செறிவாக உள்ளது. இது நரம்பு
களைப் பாதுகாக்க உதவுவதோடு, வீக்கத்தை(Inflamation) குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுடைய தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உப்பு சேர்க்கப்படாத பச்சையாக உள்ள கொட்டைகள், ஆளி விதைகள், கடல் உணவுகள், மீன் எண்ணெய் மாத்திரைகள், பச்சைக் கீரைகள், கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்றவற்றில் இச்சத்து நிறைவாக உள்ளது.

வாழைப்பழம்

இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. இதில் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்து செறிவாக உள்ளது. இது
ஒவ்வொரு நாள் உடற்பயிற்சிக்கு முன்னரோ அல்லது தீவிர உடற்பயிற்சிகளுக்கு முன்னரோ சாப்பிடுவற்கு மிகவும் உகந்தது. உடலுக்குத் தேவையான ஆற்றலை மிக எளிமையாக பெறுவதற்கு, 15 நிமிடத்துக்கு ஒருமுறை இதை சாப்பிடலாம். மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இருப்பதோடு, உடலில் ஏற்படுகிற பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸ்

இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதிலுள்ள நைட்ரேட்டுகள் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை அதிகளவில் வழங்க உதவுகிறது. உடற்பயிற்சிகள் செய்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர், இயற்கை முறையில் விளைந்த பீட்ரூட் சாற்றை 300 முதல் 500 மில்லி லிட்டர் அளவில் சாப்பிடுவதன் மூலம், உடற்பயிற்சிகள் செய்வதற்குத் தேவையான ஆற்றல் அதிகரிக்கிறது.

உலர் பழங்கள்

இதில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்னர் அல்லது மாலை நேரங்களில் சாப்பிடும் சமோசா, பஜ்ஜி, போண்டா போன்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக இவற்றைச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பேரீச்சை, உலர் திராட்சைகள், இலந்தை, கொடிமுந்திரி, அத்தி போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்களை நிறைவாக பெற
முடியும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இதில் பீட்டா கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இச்சத்து கல்லீரலில் சேகரிக்கப்பட்டு, உடலுக்குத் தேவைப்படும்போது வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. மேலும் இது கார்போஹைட்ரேட்டினை மெதுவாக வெளியிடும் தன்மையுடையது. உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்னர் அல்லது மாலைநேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு இது மிகவும் உகந்தது.

மாதுளை

இது நினைவுத்திறனை மேம்படுத்த உதவுவதோடு உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தசைத் திறன்களை மீட்பதோடு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. அதிகளவு எண்ணெயில் வறுத்த சிற்றுண்டிகளுக்குப் பதிலாக, அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கிற வண்ணமயமான பழங்களைச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

தயிர்

இதில் புரதம், கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. வயிறு, குடல்பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இதில் அதிகம் உள்ளது. மேற்கண்ட தகவல்கள் பொதுவான ஒரு வழிகாட்டுதலே.

இந்த வழிகாட்டுதல்கள் தனிநபரின் வயது, பாலினம், செயல்திறன் நிலை, உடல் உறுதித்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் மாறுபட வாய்ப்புள்ளது. எனவே உணவியல் நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் சரியான ஆலோசனைகளின்படி இவற்றைப் பின்பற்றினால் சிறப்பான முறையில் பலன் கிடைக்கும்.’’

- க.கதிரவன்


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்