SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரிமெனோபாஸ்

2018-02-21@ 14:33:59

நன்றி குங்குமம் டாக்டர்  

‘‘மெனோபாஸுக்கு முந்தையை நிலையையே பெரிமெனோபாஸ்(Perimenopause) என்கிறோம். அதாவது சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை சிறிது சிறிதாகக் குறைக்கத் தொடங்குகிற நிலை இது.

பொதுவாக பெரிமெனோபாஸ் என்பது 40 வயதுக்குப் பிறகே ஆரம்பிக்கும். அரிதாக சிலருக்கு 30 வயதிலும் வரலாம்’’ என்கிற மகப்பேறு மருத்துவர் நிவேதிதா, அதன் அறிகுறிகள், எதிர்கொள்ளும் முறைகள் பற்றி விளக்குகிறார்.

பெரிமெனோபாஸ் என்பது முழுமையான மெனோபாஸ் வரும்வரை தொடரும். பொதுவாக இந்தக் காலக்கட்டமானது 4 வருடங்கள் தொடரக்கூடும். சிலருக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கலாம். வேறு சிலருக்கு 10 வருடங்கள் கூடத் தொடரலாம். தொடர்ந்து 12 மாதங்களுக்கு ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு வரவில்லை என்கிற நிலையில் பெரிமெனோபாஸ் முடிவுக்கு வரும்.

அறிகுறிகள்

உடல் சூடாவது, மார்பகங்கள் மென்மையாவது, மாதவிலக்குக்கு முன்பான ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் அறிகுறிகள் மிகக்கடுமையாக இருப்பது, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, அதிகக் களைப்பு, அந்தரங்க உறுப்பில் வறட்சி, தும்மும்போதும், இருமும்போதும் சிறுநீர் கசிவு மற்றும் சிறுநீரை அடக்க முடியாத நிலை, மனநிலையில் மாற்றம், தூக்கத்தில் பிரச்னைகள்.

அறிகுறிகள் சாதாரணமானவைதானா அல்லது ஆபத்தானவையா?

* பெரிமெனோபாஸ் காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருப்பது சகஜமே. ஆனால், அத்துடன் கூடவே வேறு சில பிரச்னைகளும் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறுவது பாதுகாப்பானது.

* அதிக அளவிலான ரத்தப் போக்கு, கட்டிகளாக வெளியேறும் ரத்தப் போக்கு.
* வழக்கத்தைவிடவும் அதிக நாட்கள் நீடிக்கிற ரத்தப்போக்கு.
* இரண்டு மாதவிலக்குக்கு இடையில் திட்டுத்திட்டாகத் தென்படும் ரத்தப்போக்கு.
* தாம்பத்திய உறவுக்குப் பிறகு தென்படும் திட்டுத்திட்டான ரத்தப்போக்கு.

எப்படி கண்டுபிடிக்கலாம்?

நீங்கள் சொல்கிற அறிகுறிகளின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் பெரிமெனோபாஸ்தானா என்பதை உறுதிசெய்வார். ஹார்மோன் அளவுகளைப் பார்க்க ரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார். வழக்கமாக பெரிமெனோபாஸ் காலக்கட்டத்தில் ஹார்மோன்களின் அளவுகள் தாறுமாறாக இருக்கும் என்பதால் ஒன்றுக்கும் மேலான ரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டி வரலாம்.

கர்ப்பம் தரிப்பதில் எச்சரிக்கைபெரிமெனோபாஸ் காலக்கட்டத்தில் கர்ப்பம் தரிக்கிற திறன் குறையும் என்றாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் முற்றிலும் நீங்கிவிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, முழுமையான மெனோபாஸ் அதாவது ஒரு வருடத்துக்கு மாதவிலக்கு வராத நிலையை அடையும் வரை பாதுகாப்பான உறவு மேற்கொள்வது அவசியம்.

சில பெண்களுக்கு தாமதமாக, அதாவது 30 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கலாம். அதனால் குழந்தைப் பேறு தள்ளிப் போகலாம். அந்த நிலையில் அவர்களுக்கு பெரிமெனோபாஸ் வந்துவிட்டால் அதற்காகக் கவலை கொள்ள வேண்டியதில்லை. இன்றைய நவீன மருத்துவத்தில் மெனோபாஸுக்குப் பிறகும் கருத்தரிக்கச் செய்கிற வசதிகள் வந்துவிட்டன.

பெரிமெனோபாஸ் அவதிகளை சமாளிக்க...

மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பத்தைத் தடை செய்கிற மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் பெரிமெனோபாஸ் காலக்கட்டத்தில் ஏற்படுகிற உடல் சூடாகிற பிரச்னையில் இருந்து விடுபடலாம். இந்த மாத்திரைகள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்றுக்கொள்ளாது என்பதால் மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு அவர் சொல்கிற முறையின்படி மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும். இது தவிர புரொஜெஸ்ட்ரான் ஊசி, ஸ்கின் பேட்ச், வெஜைனல் வளையம் போன்றவற்றையும் மருத்துவர் பரிந்துரைப்பார்.

உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, போதிய அளவு கால்சியம் உள்ள உணவுகளை உண்பது போன்றவையும் அவசியம். மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்களுக்கு தியானம், யோகா போன்றவை உதவும். தேவைப்பட்டால் அதற்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார் மருத்துவர்.

- ராஜி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்