SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை காலம் இனிதாகட்டும்

2018-01-18@ 14:48:05

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘பனிக்காலம், காற்று காலம், கோடைகாலம் என அனைத்து தட்பவெப்ப நிலையிலும் ஒவ்வொருவிதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உண்டு. இவற்றில் கூடுதல் சவாலாக இருக்கிறது மழைக்காலம். காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி என்று மழைக்காலத்தில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று மூலமாக நோய்கள் பரவுவதற்கு மழைக்காலத்தில் வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில், மழை காலத்தில் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைகிறது. இதற்கு காரணம் நோய்களைப் பரப்பும் கொசுக்கள், வைரஸ், பாக்டீரியா ஏராளமாக உற்பத்தி ஆவதுதான். எனவே, கவனம் அவசியம்’’ என்கிற பொது நல மருத்துவர் கணேசன், மழைக்காலத்தில் ஆரோக்கியம் பேணும் வழிகள் பற்றித் தொடர்ந்து பேசுகிறார்.

‘‘மழைநீர் கடலில் சென்று கலப்பதற்கும், வெளியேறுவதற்கும் வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவ்வாறு போதுமான வடிகால் வசதி இன்றி பல இடங்களில் தேங்கும் நீரில் கழிவு நீர் சேர்கிறது. மேலும், குடிநீருடன் கழிவு நீர் சேர்கிறது. தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை பரப்புகின்றன. மழைக் காலத்தில், குடிநீர் மற்றும் சமையலுக்கு உபயோகப்படுத்தும் தண்ணீரில் கழிவு நீர் சேர்கிறது. பெரும்பாலான மக்கள் இதைத்தான் சமையல் உட்பட குளியல் ஆகிய அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

குடிப்பதற்கும், உணவு தயாரிப்பதற்கும் கழிவுகள் சேர்ந்த தண்ணீரை உபயோகிப்பதால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, டைபாய்டு, காலரா ஆகிய நோய்கள் பரவுகின்றன. தேங்கும் நீரில் கழிவு நீர் கலப்பதால் பாக்டீரியா, வைரஸ் ஏராளமாக உற்பத்தியாகின்றன. மேலும், மழையால் தேங்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர் சேர்வதால் எலிக்காய்ச்சலும் பரவுகிறது. அசுத்தமான தண்ணீரில் ஷூ, சாக்ஸ் போன்றவை அணியாமல், வெறும் காலுடன் நடந்து செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

இதன் காரணமாக, கால்களில் உள்ள சிறுசிறு துளைகள், விரல் இடுக்குகள், நகக்கண் வழியாக எண்ணற்ற கிருமிகள் சென்று சரும பாதிப்புக்களை உண்டாக்குகின்றன. எனவே, சேற்றுப்புண் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. இதேபோல் மழைக்காலத்தில் காற்று மூலமாக தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வைரஸ் தொற்று காய்ச்சல்கள், பன்றிக் காய்ச்சல் போன்றவை மெதுவாகப் பரவ ஆரம்பிக்கும். மழைக் காலங்களில் தண்ணீர், காற்று வழியாக பரவுகிற நோய்களால் குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவு பாதிப்பு அடைகிறார்கள்.

ஏனென்றால், இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும். இதனால் வயோதிகர்களுக்கு தடுப்பூசிகள் போடுவது அவசியம். ஏனென்றால், இவர்களுக்கு நுரையீரல் சீக்கிரமாக பாதிப்படையும். காற்று மூலம் பரவுகிற தொற்று நோய்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை வாக்ஸின் போடுவது அவசியம். மழைக்காலத்தில் வருகிற அனைத்துவிதமான நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, வருடத்துக்கு ஒரு முறை Influenza vaccine-ம், 5ஆண்டுக்கு ஒரு தடவை Pneumococcal Vaccination-ம் போட்டுக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர், முதியவர் என எந்த வயதினராக இருந்தாலும் மழைக்கால தொற்று நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. சூடான உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் ஆகியோரை பலத்த மழை, கடும் குளிர் போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னர், கைமற்றும் கால்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். பொது இடங்களை அசுத்தம் செய்யாமல் இருக்க சொல்லித்தருவதும் அவசியம். மழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டாலும், அதன் பிறகும் நோய்கள் வரலாம். ஆனால், அவற்றின் பாதிப்புகள் குறைவாக இருக்கும். எனவே, இந்தக் காலத்தில் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதைப் போலவே விழிப்புணர்வும் அவசியம்’’ என்கிறார்.

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saaambal_cat11

  சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

 • cars_seena_hunan

  கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

 • matruthiranadigal1

  மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

 • MasiFestival

  திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

 • 23-02-2018

  23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X