SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிம்பிளா இருந்தா... ஜம்முனு இருக்கலாம் !

2017-11-21@ 15:46:31

நன்றி குங்குமம் டாக்டர்

மற்ற நோய்களைப் போலவே மன அழுத்தத்தையும் வரும் முன்னரே தடுக்க முடியும் என்பதற்காக புதிய வழிமுறை ஒன்றைக் கூற ஆரம்பித்திருக்கிறார்கள் உளவியலாளர்களும், ஆய்வாளர்களும். Micro living... Macro benefit என்பதுதான் அந்த சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து. அது என்ன மைக்ரோ லிவிங்... மேக்ரோ பெனிஃபிட் என்கிறீர்களா?

‘சிறுகக்கட்டி பெருக வாழ்’ நம் முன்னோர்கள் கூறிய அறிவுரைதான் மைக்ரோ லிவிங்... மேக்ரோ பெனிஃபிட். மேற்கத்திய கலாச்சார மோகத்தில் வீழ்ந்திருக்கும் நாம் இன்று ஆடம்பரம்மிக்க, மிகவும் பதற்றமான வாழ்க்கையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறோம். வரம்பு மீறிய பல்வேறு ஆசைகளுடன், பல்வேறு விஷயங்களிலும் தலையிடுவதுதான் நம்முடைய இம்சையான வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளுக்கான கல்வி, வாகனம், தேவைக்குக் கொஞ்சம் பணம் என்பது எல்லோருக்கும் அத்தியாவசியமானதுதான்.

இவை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் எது, அதிகபட்சம் எது என்று தீர்மானிப்பதில்தான் எளிமையோ, ஆடம்பரமோ அடங்கி இருக்கிறது. நம்முடைய மன அமைதியும் இந்த தேர்ந்தெடுத்தலில்தான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சமூக அங்கீகாரம் பெரிதாக பார்க்கப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கையில் இருப்பதில்லை. நம்முடைய சொந்த வாழ்க்கையை வாழ அதிக பணம் தேவைப்படுவதில்லை. மற்றவர்களைப் பார்த்து, அவர்களின் வாழ்க்கையை வாழ நினைக்கும்போதுதான் செலவு கூடுகிறது.

அதை சமாளிக்க ஓய்வில்லாமல் உழைப்பதாலும், தகுதிக்கு மீறி கடன் வாங்குவதாலும் சந்தோஷம் தொலைகிறது. இன்று நாம் சந்திக்கும் அனைத்து நோய்களுக்கும் இதுவே மூல காரணம். இவை எல்லாவற்றுக்குமே தீர்வு சொல்கிறது மைக்ரோ லிவிங் ஃபார்முலா. தற்போது உலகெங்கும் இந்த எளிய வாழ்க்கைமுறை தத்துவம் எல்லா இடங்களிலும் பரவலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உளவியலாளர்களும், ஆய்வாளர்களும் பரிந்துரைக்கும் சின்னச்சின்ன மாற்றங்கள் இவை. முயன்று பாருங்கள்...

எளிமையான வீடு

பங்களா போன்ற வீட்டை புறநகரில் கட்டிவிட்டு 40, 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கு ரயிலிலும், பேருந்திலும் அரக்க பரக்க ஓடி, இரவு தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்கு வருவதில் என்ன லாபம்? 300 முதல் 400 சதுர அடியில் ஒரு வீடு. அதில் மைக்ரோ ஓவன் அடுப்பு, சிறிய குளியலறை, மடித்து பயன்படுத்தும் படுக்கைகள், பொருட்களை சேமித்து வைப்பதற்காக மறைவான அலமாரிகள் போன்றவற்றை அமைக்கலாம். போக்குவரத்து வசதிகள், மார்க்கெட் என எல்லாமும் அருகில் இருக்குமாறு, நகரத்தின் மையப்பகுதியில் வீடு இருப்பது மிகவும் நல்லது.

எளிய பயணம்

பயணங்களுக்கு ஆடம்பரமான வாகனம் வேண்டும் என்பது அவசியம் இல்லை. நம்முடைய போக்குவரத்துக்கு உதவும் வகையில், அதற்கேற்ற வசதிகளோடு சாதாரண வாகனம் இருந்தாலே போதுமானது. நடந்து செல்ல முடிகிற தூரமாக இருந்தால் நடந்தே செல்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துகளையும் பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாகனம் என்ற அணுமுறையைக் கூட கொஞ்சம் சிந்தித்தால் மாற்ற முடியும்; குறைக்க முடியும்.

அதேபோல், குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் நேரங்களிலும் பிரயாணத் திட்டங்கள் எளிமையாக இருக்க வேண்டும். 2, 3 இடங்களை தேர்ந்தெடுத்தால், எந்த இடத்தையும் முழுதுமாகப் பார்க்க முடியாது. அடுத்தடுத்த பயணங்களால் களைப்பும் ஏற்படும். அதற்கு பதில், ஒரே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை மட்டுமே நிதானமாக அனுபவித்து சுற்றிப் பார்க்கலாம்.

சிறிய உணவகம்

பிரம்மாண்டமான பெரிய உணவகங்களுக்குச் சென்றால் புத்தகம்போல மெனு கார்டு இருக்கும். கவனிப்பதற்கும் உடனே ஆட்கள் வர மாட்டார்கள். உணவும் காலதாமதமாக வரும். மெனுவில் இருக்கும் பாதி உணவுகளின் பெயரே தெரியாது. ஆடம்பரத்துக்கு ஆர்டர் செய்வோம். ராட்சஷ வடிவில் கொண்டு வந்து எதையோ வைப்பார்கள். நிறைய வீணடிப்போம். அதுவே ஒரு சிறிய ஓட்டலுக்குப் போனால், கச்சிதமான இருக்கைகள் இருக்கும். நமக்கு சௌகரியமான இடத்தில், நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கி சாப்பிடலாம். நேரம், பணம், விரயம் எல்லாம் மிச்சம்.

எளிமையான உடற்பயிற்சிகள்

‘நாளை முதல் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்வேன்’ என்று புத்தாண்டு சபதம் எடுப்பார்கள். பெரிய ஜிம்மில் பணம் கட்டி, அதற்காக பிராண்டட் ஷூ, டிரெஸ், வாட்டர் பாட்டில் என வாங்கியும் வருவார்கள். ஒரு வாரம் எல்லாம் ஒழுங்கா நடக்கும். அப்புறம் பழைய நிலைதான். வாங்கி வந்த எல்லா பொருட்களும் இவரோடு சேர்ந்து தூங்கும். வாக்கிங், ஜாக்கிங், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம்.

இதுபோன்ற எளிய வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, நம் தேவைகளும் எளிதாக நிறைவேறிவிடும். மன அழுத்தமும் நம்மை ஆட்டிப் படைக்காது. ஆமாம்... எல்லோருக்கும் தேவைகள் குறைவுதான். ஆசைகள்தான் எப்போதும் அதிகம். எனவே, தேவைகளை எளிமையாக்குங்கள்... வாழ்க்கையும் எளிமையாகும்!

- உஷா நாராயணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்