SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீரிழிவால் வரும் மன அழுத்தம்!

2017-06-16@ 14:57:49

நன்றி குங்குமம் டாக்டர்

மனசு.காம்

நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை... பிரிக்க முடியாதவை... நீண்டகாலமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மனச்சோர்வு நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல மனச்சோர்வு நோயால் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாலும் அது சர்க்கரை நோயில் கொண்டு வந்துவிடும் அபாயமும் இருக்கிறது.மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டு விட்டு, எந்த வேலையும் செய்யாமல் புகை, மது போன்ற பழக்க வழக்கங்களுடன் உடலை குண்டாக்கிக்கொண்டே இருந்தால் ‘பி.எம்.ஐ.’ எனப்படும் ‘பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (Body mass index) அதிகரிக்கும். பி.எம்.ஐ அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகம்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பத்து சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அதிலும் 60 வயதை நெருங்குபவர்களாக இருந்தால் சுமார் 23 சதவிகிதம்  பேருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன் போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கான காரணிகளாக சொல்லப்பட்டாலும் மேற்சொன்ன ஆய்வில் இன்னொன்றும் தெரியவந்தது. அது மனச்சோர்வு நோயால் சிரமப்பட்டாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மையே. பெண்களாக இருப்பின் இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

அதாவது, மனச்சோர்வு பாதித்த ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இதையே மாற்றிப் போட்டு பார்க்கலாம். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து மனச்சோர்வு நோய். சர்க்கரை வியாதி இல்லாத பெண்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு மனச்சோர்வு வருவதற்கு 29 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் முடிவுகள்தான் இவை.

எல்லாம் சரி, சர்க்கரை நோய் வந்தால் ஏன் மனச்சோர்வு வருகிறது? சர்க்கரை நோயினால் நமது உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றங்கள் ஒரு காரணம். அந்த நோயுடன் நடத்தக்கூடிய வாழ்க்கை இருக்கிறதே... அது இன்னொரு காரணம். பாதிப் பேருக்கு மேல் தனக்கு சர்க்கரை இருக்கிறது என்று தெரியவந்த அந்த நாளில் ஏதோ உயிர்கொல்லி நோய் வந்ததைப் போன்று அதீத மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள்.‘பின்ன என்ன சார், அதை சாப்பிடக் கூடாது; இதைத் தொடக்கூடாது என்று ஏகப்பட்ட உணவுக் கட்டுப்பாடு. கால் பாதம் வேறு திகுதிகுன்னு எரியுது. ஸ்பெஷல் செருப்பு போடுங்கன்னு டாக்டர் சொல்றார். நேரத்துக்கு உணவு சாப்பிடலைன்னா குளுக்கோஸ் டமார்னு இறங்கிருது. முன்னாடி மாதிரி தாம்பத்தியத்திலும் ஆர்வம் இல்லை...’ என்ற ரீதியில் சர்க்கரை நோயாளிகள் புலம்புவதில் ஏகப்பட்ட நடைமுறை உண்மைகள் உண்டு.

இளம் வயதில் சர்க்கரை நோய் தாக்கிய ஆண்களில் பலருக்கு ஆண்மை கோளாறு (Erectile dysfunction) மிகப் பெரிய உறவு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்பது கசப்பான உண்மை. இதன் விளைவாகவும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனுடன் கூட கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையின் விளைவாக உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.இவை எல்லாம் ஒன்றுகூடிதான் ஒரு நோயாளிக்கு மனச்சோர்வை உண்டாக்குகின்றன. கவனிக்கவும், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையே இங்கு முக்கிய குற்றவாளி. நல்ல கட்டுப்பாட்டுடன் குளுக்கோஸ் இருந்தால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க மருந்து, மாத்திரைகள், இன்சுலின் இவை எல்லாம் போக நல்ல மன ஆரோக்கியமும் அவசியமே. நன்கு மருந்துகள் உட்கொண்டாலும் சிலருக்கு சர்க்கரை கட்டுக்குள் வராது. துருவிப் பார்த்தால் ஏதோ ஒரு மன உளைச்சலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பிரச்னைகளை உள்ளன்போடு அணுகி தக்க ஆலோசனை கூறி, தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதும். மனமும் சுகமாகி, அதன் விளைவாக இதுவரை கட்டுக்குள் வராத சர்க்கரையும் தற்போது நல்ல கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.சர்க்கரை நோயின் தாக்கத்தினால்தான் நோயாளி மிகவும் சோர்வாக இருக்கிறார். எந்த நடவடிக்கையிலும் ஈடுபாடு இல்லாமல் தனிமையை விரும்புகிறார். சரியாக சாப்பிடுவதில்லை; தூங்குவது இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கலாம்.

இவை மனநோயின் ஆரம்ப அறிகுறிகள். இதை உடல் கோளாறு என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக்கொள்ளும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் மட்டும் அல்ல... ஆரம்ப நிலை சிகிச்சை அளிக்கும் மருத்து வர்களே கூட சர்க்கரை நோயாளிகள் இடையே தென்படும் மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளை கவனிக்க தவறிவிடவும் வாய்ப்பு உண்டு. மருத்துவர் உடனான ஆலோசனை நேரம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் - பொது மருத்துவர்கள் இடையே மனநல விழிப்புணர்வு மேலும் வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. உடலுக்கும் மனதுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிரூபிக்கும் விதமாகத்தான் சர்க்கரை நோய்க்கும் மனச்சோர்வுக்குமான உறவு கண்டறியப்பட்டுள்ளது.நல்ல உணவு பழக்கங்கள், தீயப் பழக்கங்கள் இல்லாத தூய வாழ்க்கை நடைமுறைகள், சரியான நேரத்தில் அளிக்கப்படும் தரமான சிகிச்சைகள், ரிலாக்ஸான வாழ்க்கை முறை, நல்ல சிந்தனை - இவை எல்லாம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மனச்சோர்வுக்கான அறிகுறிகள்!

மன அழுத்தத்துக்கென்று சில அறிகுறிகள் இருக்கின்றன. கவலை, நம்பிக்கையின்மை, தோல்வி உணர்வு, குற்ற உணர்வு, எதிலும் மகிழ்ச்சியின்மை, தற்கொலை எண்ணங்கள், திடீரென பொங்கி வரும் அழுகை, எதிலும் முடிவு எடுக்க முடியாமை, தானே குற்றவாளி என்கிற எண்ணம்,  இவை எல்லாம் மன ரீதியான அறிகுறிகள்.அளவுக்கு அதிகமான சோர்வு, வேலையில் விருப்பமின்மை, தூக்கம், பசியின்மை, எடை குறைந்து போதல், பாலுணர்வு குறைந்தோ அல்லது இல்லாமலோ போதல் - இவை எல்லாம் உடல் ரீதியான அறிகுறிகள். மேற்கூறிய அறிகுறிகள் அவ்வப்போது தென்படுவது பிரச்னை இல்லை.சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தை இந்த அறிகுறிகள் ஒரு நபரிடம் தென்பட்டால் அவர் மனச்சோர்வு நோயால் அவதிப்படுகிறார் என்பதை உணருங்கள். அவர் உடனடியாக தக்க மனநல ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதற்கு இது இன்னொரு சான்று!

(Processing... Please wait...)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்