SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டயாலிசிஸ். செயற்கை சிறுநீரகம்!

2017-05-18@ 14:47:25

டயாலிசிஸ்.

இந்தப் பெயர் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரபலம். இவர்களில் பல பேர் சிறுநீரகச் செயல் இழப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும்போது, உப்பில்லாத உணவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல், சிறுநீரகம் ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்ததும், பல ஆஸ்பத்திரிகளுக்கு அலைவார்கள்.
அப்போது, காது கேட்காதவர்களுக்கு ‘ஹியரிங் எய்ட்’ பொருத்துவது போல், இவர்களுக்கு ‘செயற்கை சிறுநீரகம்’ பொருத்த வேண்டும் என்று சொல்வார்கள். அதற்குப் பெயர்தான் ‘டயாலிசிஸ்’.

சிறுநீரகப் பிரச்னையை சரியாக அணுகாதவர்களுக்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவுகள் ஒரு கட்டத்தில் எகிறிக்கொண்டே போகும்; இஜிஎஃப்ஆர் (eGFR) அளவு 15க்கும் கீழ் குறைந்துவிடும். அப்படியானால், இதுவரை இவர்கள் சாப்பிட்டு வந்த மாத்
திரைகளுக்கு சிறுநீரகம் கட்டுப்படவில்லை என்று அர்த்தம். சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் ‘நோய்காட்டி’ இது. இந்த நேரத்தில் டயாலிசிஸ் மட்டுமே சிறுநீரகத்தைக் காப்பாற்ற முடியும்.தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு, விஷம் குடித்தவர்களுக்கு, உறக்க மாத்திரைகளை அல்லது போதை மாத்திரைகளை அளவில்லாமல் சாப்பிட்டவர்களுக்கு, பாம்பு கடித்தவர்களுக்கு…. இப்படி பலருக்கும் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும்.
செயற்கை வழியில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதையே டயாலிசிஸ் என்கிறோம். இதற்கு டயாலைசர் கருவி உதவுகிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், எட்டாம் வகுப்பில் படித்த ‘ஆஸ்மோசிஸ்’ (Osmosis) ஞாபகத்துக்கு வரவேண்டும். அதாவது ‘சவ்வூடு பரவல்’.

ஒரு சவ்வின் வழியாக எதிரெதிர் திசைகளில் இரண்டு திரவங்களைச் செலுத்தும்போது, அடர்த்தி குறைந்த திரவமானது அடர்த்தி அதிகமான திரவத்துக்குத் தாவுவதுதான் சவ்வூடு பரவல். இந்த முறையில்தான் சிறுநீரகத்தின் நெப்ரான்களில் சிறுநீர் பிரிக்கப்படுகிறது. பலருக்கு நெப்ரான்கள் பாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சவ்வு வேலை செய்யாத காரணத்தால், சிறுநீரகம் செயல் இழந்துவிடுகிறது. இந்த சவ்வு உடலுக்குள் இருந்துகொண்டு செய்யும் வேலையை டயாலிசிஸ் இயந்திரம் வெளியிலிருந்து செய்கிறது. அதாவது, பயனாளியின் ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியேட்டினின் போன்ற கசடுகளை சவ்வூடு பரவல் முறையில் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது; அதேநேரம் அவரது உடலுக்குத் தேவையான சோடியம், கால்சியம், பைகார்பனேட் போன்ற சத்துகளை மறுபடியும் உள்ளே அனுப்புகிறது.

இப்படி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறுநீரக நோயாளிகளை அனுதினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது டயாலிசிஸ் இயந்திரம். இந்த நேரத்தில் நாம் நெதர்லாந்து விஞ்ஞானி வில்லியம் ஜோஹன் கால்ஃப் என்பவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இவர்தான் டயாலிசிஸ் கருவியைக் கண்டுபிடித்தவர்.டயாலிசிஸ் இரண்டு வகைப்படும். 1. ஹீமோ டயாலிசிஸ், 2. பெரிட்டோனியல் டயாலிசிஸ்.  முதலில், ஹீமோ டயாலிசிஸ் பற்றி பார்ப்போம். காரணம், இதுதான் இன்றைக்கு மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. சிறுநீரகம் தற்காலிகமாக செயல் இழந்தவர்களுக்கு ‘உயிர் கொடுக்கும் பிரமன்’ என்று இதைச் சொல்லலாம். வாரத்துக்கு மூன்று முறை வீதம் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு இவர்கள் டயாலிசிஸ் செய்துகொண்டால் போதும், செயல் இழந்த சிறுநீரகம் உயிர் பெற்றுவிடும். மறுபடியும் இவர்களுக்கு டயாலிசிஸ் தேவைப்படாது.

சரி, ஹீமோ டயாலிசிஸ் எப்படிச் செய்கிறார்கள்?

பயனாளியின் கழுத்தில் அல்லது இடது கையில் இருக்கிற அசுத்த ரத்தக் குழாயை ஒரு ரப்பர் குழாய் மூலம் டயாலிசிஸ் இயந்திரத்தில் இணைத்து விடுகிறார்கள். மத்தளத்தில் இருக்கிற மாதிரி ஒரு சவ்வு அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக அசுத்த ரத்தம் செல்லும்போது சல்லடையில் மாவு சலிப்பதைப்போல அசுத்த ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, மற்றொரு குழாய்க்கு வரும். அதை பயனாளியின் சுத்த ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாயுடன் இணைத்துவிடுகிறார்கள். இப்போது ரத்தச் சுற்றோட்டம் இயல்பாகிவிடும். இதனால், பயனாளிக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.

தப்பு, தப்பு. ‘அனைத்தும்’ என்ற வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். ஏனென்றால், சிறுநீரகம் செய்வதுபோல் எல்லா வைட்டமின்களையும் உறிஞ்சி எடுத்து உடலுக்கு அனுப்ப டயாலிசிஸ் இயந்திரத்தால் இயலாது. இதனால் இவர்களுக்கு நிறைய வைட்டமின்கள் குறைந்துவிடும். அதை ஈடுகட்ட இவர்கள் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் அதிகம் எடுக்க வேண்டும்; ஊசிகளையும் போட வேண்டும். ரத்த உற்பத்திக்கு உதவுகிற எரித்திரோபாய்டின் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்
படுத்துகிற ரெனின், ஆஞ்சியோடென்சின் என்ற ஹார்மோன்களை சிறுநீரகம் உற்பத்தி செய்யும். ஆனால், டயாலிசிஸ் இயந்திரம் இந்த வேலைகளைச் செய்யாது. இவற்றை இவர்களுக்கு ஊசிகளாகத்தான் உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்கு அதிக செலவு ஆகும். இவர்கள் உப்பையும் புரத உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரையும் குறைவாகவே குடிக்க வேண்டும்.
இனி, பெரிட்டோனியல் டயாலிசிஸ்.

வயிற்றில் ‘பெரிட்டோனியம்’ என்ற இரண்டு அடுக்கு சவ்வு ஒன்று இருக்கிறது. இதன் கீழ் அடுக்கு சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை மூடி இருக்கிறது. மேல் அடுக்கு வயிற்றை ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு அடுக்குகளுக்கும் நடுவில் பத்து லிட்டர் தண்ணீர் பிடிப்பதற்கு இடம் இருக்கிறது. இயற்கை கொடுத்துள்ள இந்த வசதியைத்தான் பெரிட்டோனியல் டயாலிசிஸ் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பெரிட்டோனியல்
டயாலிசிஸ் ஏன் தேவை?

சிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டிவரும். அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் வரையிலாவது இது தேவைப்படும். அதுவரைக்கும் இவர்கள் மருத்துவமனையிலேயே படுத்துக்கிடக்க வேண்டும். அல்லது வாரம் மூன்று முறை அங்கு வந்து செல்ல வேண்டும். இதில் ஏற்படும் மன உளைச்சலே பயனாளியின் பாதி உயிரைப் போக்கிவிடும். இம்மாதிரியான குறைகளைக் கொண்ட ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சைக்கு மாற்றாக வந்ததுதான் பெரிட்டோனியல் டயாலிசிஸ்.

இதை எப்படிச் செய்கிறார்கள்?

தொப்புளுக்கு அருகில் சிறிய துளை போட்டு கெதீட்டர் என்ற ஒரு குழாயை நிரந்தரமாகச் சொருகிவிடுகிறார்கள். இதன் உள்முனை பெரிட்டோனியல் இடைவெளிக்குள் சென்றுவிடும்; வெளிமுனையில் என்ட்ரி, எக்சிட் என்று இரு வழிகள் உண்டு. ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிற ‘டயாலிசேட்’ எனும் ஸ்பெஷல் திரவத்தை இந்தக் குழாயின் என்ட்ரி வழியாக வயிற்றுக்குள் செலுத்துகிறார்கள். இது பெரிட்டோனியல் இடைவெளியை நிறைக்கிறது. இப்போது பயனாளியின் உடலில் சுற்றிக்கொண்டிருக்கும் அசுத்த ரத்தம் ரத்தக்குழாய்கள் வழியாக இந்த இடைவெளிக்கு வந்து சேரும். அப்போது பெரிட்டோனியல் சவ்வு அதை
வடிகட்டி ‘டயாலிசேட்’ திரவத்துக்குத் தந்துவிடும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட ரத்தமானது மறுபடியும் உடலுக்குள் சென்றுவிடும். அசுத்தங்களை வெகுமதியாகப் பெற்றுக்கொண்ட ‘டயாலிசேட்’ திரவத்தை கெதீட்டரின் எக்சிட் வழியாக வெளியேற்றி விட்டால் பெரிட்டோனியம் சுத்தமாகிவிடும். மீண்டும் டயாலிசேட் திரவத்தை வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும்.

சில மணி நேரத்துக்குப் பிறகு அசுத்தமடைந்த திரவத்தை மறுபடியும் வெளியேற்ற வேண்டும். இதைச் செய்வதற்கும் ஒரு கருவி இருக்கிறது. இப்படித் தினமும் 8 மணி நேரம் தொடர்கிறது இந்த டயாலிசிஸ்.வீட்டிலேயே சுலபமாக எல்லோரும் செய்துகொள்ளக்கூடிய இந்த டயாலிசிஸ், சிறுநீரகம் நிரந்தரமாகச் செயல் இழந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்; ஹீமோ டயாலிசிஸைவிட பல மடங்கு உசத்தி. காரணம், இங்கே வடிகட்டியாக செயல்படுவது இயற்கை சவ்வாக இருப்பதால், வைட்டமின் மற்றும் புரத  இழப்பு மிகக் குறைவு. இவர்கள் உணவு விஷயத்தில் பத்தியங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். தண்ணீர் விஷயத்திலும் கஞ்சத்தனம் காட்டவேண்டியதில்லை. வாராவாரம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியதில்லை. இத்தனை வசதிகள் இதில் அதிகம் கிடைப்பதால் இதற்கான செலவும் அதிகம்தான்…. மாதம் அரை லட்சம் ரூபாய்!

(அடுத்த இதழில் முடியும்)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bushwifecondolences

  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

 • fireaccidentsafety

  சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

 • punecskfansipl

  ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

 • kanjipuramuthiram

  பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா

 • commonwealthwinners

  காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்