SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செத்து செத்து விளையாடுவோமா..ஆளைக் கொல்லும் ப்ளூவேல் பயங்கரம்

2017-10-12@ 15:00:22

நன்றி குங்குமம் டாக்டர்


‘விளையாட்டு வினையாகும்’ என்று சொல்வது போல, Blue Whale Challenge என்கிற ஆன்லைன் விளையாட்டு ஒரு சிறுவனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது. ப்ளூவேல் விளையாடத் தொடங்கி, அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதாக நினைத்து மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் 7-வது மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். ஏற்கெனவே, ரஷ்யாவில் 130-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமான இந்த விளையாட்டு, இப்போது இந்தியாவிலும் தன் பயங்கர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

மனநல மருத்துவர் கவிதாவிடம் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் இருந்து இளைய தலைமுறையினரைக் காக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம்...‘‘ப்ளூவேல் சேலஞ்ச் ஆன்லைன் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு சவால் வீதம் 50 நாட்களுக்கு பல விதமான சவால்கள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு சவால்களை முடித்தவுடன் அதற்கான புகைப்பட ஆதாரங்களை விளையாட்டின் நிர்வாகிக்கு அனுப்ப வேண்டும். விளையாட்டின் தொடக்கத்தில் இனிப்புப் பண்டத்தை வாய் நிறைய வைத்து சாப்பிடுவது போல எளிமையாகத் தொடங்கும்.

ஆனால், போகப்போக நடு இரவில் எழுந்து திகில் படங்களைப் பார்ப்பது, கைகளில் நீலத் திமிங்கலத்தின்(Blue Whale) படத்தை ரத்தத்தால் வரைவது, வீட்டின் கூரைமேல் நடப்பது என்று சென்று இறுதியில் அந்த கூரை மேலிருந்து குதித்து தற்கொலை செய்ய வேண்டுமென்று சவால் விடுக்கப்படுகிறது. ஆரம்பத்திலுள்ள எளிமையான சவால்களால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், நாட்கள் செல்லச் செல்ல, மூளைச் சலவை செய்யப்பட்டு ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களை இலக்கு வைத்து, அவர்களை மூளைச்சலவை செய்கிறது இந்த விளையாட்டு.

நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்து, விர்ச்சுவல் என்கிற மாய உலகத்துக்குள் இளைஞர்களை அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டும் குரூர நோக்கமுடையதாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது, விர்ச்சுவல் உலகிலிருந்து வெளிவர மறுப்பது, எந்நேரமும் செல்போனும் கையுமாகவே இருப்பது போன்ற பழக்கங்கள் உங்கள் வீட்டு குழந்தைகளிடம் இருந்தால், அவர்கள் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

நிஜ உலகில் ஈடுபாடு குறைந்து, மாய உலகுக்குள் இந்த விளையாட்டின் வழியே நுழையும் இளைஞர்களின் மனநிலையும், உடல்நிலையும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டுமென்கிற மனநிலையுடைய இளைஞர்கள் இந்த மாய விளையாட்டால் ஒவ்வொரு நாளும் நிஜ உலகில் அந்த சவால்களை செய்யத் துணிகிறார்கள். விளையாட்டின் இறுதிநாள் சவாலாக மாடியின் உச்சியிலிருந்து கீழே குதிக்க வேண்டும் என்கிறபோது, அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அதை நிறைவேற்றத் துணியும்போது உயிரை பறிகொடுக்க நேரிடுகிறது.

ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் தற்போது உலகளவில் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முதலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். இந்த விளையாட்டில் காணும் மாய உலகத்துக்கும், நிஜ உலகத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை குழந்தைகள் சரியாக புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்ல வேண்டும் அல்லது சரியான நேரத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தகுந்த ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க முடியும்’’ என்கிறார் கவிதா.

தீயவர்களை அழிக்கவே இந்த விளையாட்டு!

ப்ளூவேலைக் கண்டுபிடித்தவரின் பகீர் வாக்குமூலம்

ப்ளூவேல் விளையாட்டை ரஷ்யாவைச் சேர்ந்த Philip Budeikin என்கிற 21 வயது உளவியல் மாணவன் வடிவமைத்துள்ளான். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் இந்த விளையாட்டின் தாக்கத்துக்கு இலக்காகி வருகின்றனர். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், சிலி, இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த விளையாட்டின் தாக்கம் அதிகமாக இருப்பதாக
கணிக்கப்பட்டுள்ளது.

ப்ளூவேல் உயிரிழப்புகள் காரணமாக, ‘16 பள்ளிக் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம்’ என்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பிலிப் கடந்த மே மாதம் சிறையில் அடைக்கப்பட்டான். அப்போது இப்படி ஒரு விபரீத விளையாட்டை வடிவமைக்க என்ன காரணம் என்று போலீஸ் கேட்டதற்கு, ‘சமுதாயத்தில் இருக்கும் தேவையில்லாத மனிதர்களை நீக்கி சுத்தம் செய்யவே இந்த விளையாட்டை வடிவமைத்தேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளது இன்னும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.

 
- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-06-2018

  21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga_dayceleb1

  சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

 • rosesaucesChina

  சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

 • KimJongJinpingMeets

  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

 • MtEverestGarbage

  மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்