SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயிற்சி வகுப்புகள் பலன் கொடுக்குமா?!

2020-03-11@ 13:12:33

நன்றி குங்குமம் டாக்டர்

பெண்களிடத்தில் முன்பைவிட கர்ப்ப காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கேற்றவாறு கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் ஆலோசனைகளையும், சிறப்பு உடற்பயிற்சிகளையும் சொல்லித்தரும் வகுப்புகளும் வந்துவிட்டன. சில தனியார் மருத்துவமனைகளில், கர்ப்ப கால சிகிச்சையில் ஒரு பகுதியாக இவற்றை ஒரு பேக்கேஜாகவே கொடுக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளிலும் அவ்வப்போது கர்ப்பிணிகளுக்கான மனநல ஆலோசனை முகாம்களையும் நடத்துகிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கான இத்தகைய சிறப்பு உடற்பயிற்சி வகுப்புகள் எந்த அளவிற்கு பயன் தரும்? இவற்றை அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் செய்யலாமா?!

- மகப்பேறு மருத்துவ நிபுணர் மல்லிகா சாமுவேல் விளக்குகிறார்.

‘‘கர்ப்பம் அடைந்துவிட்டால் அப்படியே ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடலுக்கு தேவையான பயிற்சிகள் அவசியம். அப்போதுதான் கர்ப்ப காலம் இனிதாவதுடன், சுகப்பிரசவம் நடக்கவும் வழிவகை செய்யும். அதனால் இத்தகைய கர்ப்ப கால பயிற்சிகள் பலனளிக்கக் கூடியவைதான். ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிகள் அனைவருமே சாதாரணமாக எல்லோரும் செய்யும் வேலைகளையோ, பயிற்சிகளையோ செய்யலாம். கர்ப்ப காலத்தில் வரக்கூடிய பின்முதுகு வலி, உடல் இறுக்கம், ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் பயிற்சிகள் உதவக் கூடியவை. பிரசவத்தின்போது குழந்தையின் தலை திரும்புவதற்கும், சுகப்பிரசவத்திற்கும் மற்றும் பிரசவ வலியைக் குறைப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் நிச்சயம் ஆதரவு அளிக்கக் கூடியதாக இருக்கும்.என்னென்ன பயிற்சிகள் செய்யலாம்?

தினமும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வராமல் இருக்க நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகள் உதவும். 30 வாரங்களுக்குப்பிறகு ஸ்க்வாட்(Squate) பயிற்சிகளைச் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் கருவிலுள்ள குழந்தையின் தலை இலகுவாக கீழிறங்கும். 30 வாரங்கள் இறுதியிலிருந்தே இந்தப் பயிற்சியை தொடங்கி விட வேண்டும். கடைசியில் செய்வதால் பலனில்லை. இதேபோல் டக் வாக்(Duck walk) பயிற்சியும் செய்யலாம். இப்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செய்யுங்கள்.

தனியார் பயிற்சி மையங்கள் தற்போது பெருகி வருகின்றன. அவற்றில் சேரும் முன் நீங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் கர்ப்ப கால மருத்துவரிடம்/குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சேர வேண்டியது அவசியம். கர்ப்ப காலம் என்பது இரண்டு உயிர்களுடன் தொடர்புடைய விஷயம். சிலர் மருத்துவத்துக்கு ஒவ்வாத தவறான வழிகாட்டுதல்களையும் சொல்லக் கூடும். வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்பது போல் தவறான ஆலோசகர்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, சில பெண்களை அவர்களின் உடல்நிலையை அறிந்து முழு ஓய்வு(Bed Rest) எடுக்கச் சொல்லியிருப்போம். இத்தகையவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி கடின வேலைகளைச் செய்வதோ, உடற்பயிற்சிகள் செய்வதோ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்''  என்கிறார்.

திருப்பூரில் கர்ப்பிணிகளுக்கான பயிற்சிகளை அளித்து வரும் அனுபமாவிடம் பேசினோம். கர்ப்பிணிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில் இருந்தே தன் அனுபவத்தைப் பகிரத் தொடங்குகிறார். ‘‘அடிப்படையில் நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். என்னுடைய முதல் கர்ப்பம்தான் இத்தகைய பயிற்சி மையத்தை நடத்த வேண்டும் என்ற தூண்டுதலைத் தந்தது. கர்ப்பம் தரித்த நாளிலிருந்து நிறைய கேள்விகளுக்கு விடைகள் இன்றி,  எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருந்தேன். நம்மைப்போலவே இருக்கும் பெண்களுக்கு ஏன் நாம் ஆலோசகராக செயல்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்பிறகே இந்த பயிற்சி வகுப்புகளிலும் ஆலோசனை அளிப்பதிலும் இறங்கினேன். இது தொடர்பாக படித்து, முறையான ஆலோசகராகவும் மாறிய பிறகே பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.

கர்ப்பத்தைப் பற்றிய நிறைய தவறான நம்பிக்கைகள், கட்டுக் கதைகள், பயமுறுத்தல்கள் நம்மைச்சுற்றி பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு தாய்க்கும் இது புது அனுபவம் என்பதால், எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே பலர் இருக்கிறார்கள். இதனாலேயே பல பெண்கள் சிசேரியன் பிரசவ முடிவை நாடுகிறார்கள்’’ என்றவரிடம் என்னென்ன பயிற்சிகள் கொடுப்பீர்கள் என்று கேட்டோம்...‘‘ஆன்லைன் வகுப்பில் 1 முதல் 5 மாதங்கள் வரை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு வகுப்பு எடுக்கிறோம். நேரடி வகுப்புகளில் கர்ப்பம் தரித்து 3-வது மாதத்திற்குப் பிறகுதான் பயிற்சிகள் சொல்லித் தர ஆரம்பிக்கிறோம். இதில் முதலில்  உடற்பயிற்சிகளை 1 மணி நேரத்திற்கு சொல்லித் தருவோம். பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் ஆலோசனை வகுப்புகள் நடத்துவோம். கர்ப்ப காலத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்; கர்ப்பத்தைப் பற்றிய பயத்தைப் போக்கும் வகையிலும், கர்ப்பத்தைப்பற்றிய மூட நம்பிக்கைகளை போக்கும் வகையிலும் ஆலோசனைகள் சொல்வோம்.

பின்னர் பிரசவத்தின்போது  ஏற்படும் வலிகள் பற்றியும் வலி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது  என்பதைப் பற்றியும் ஆலோசனை சொல்லி வகுப்புகள் எடுக்கிறோம். பிரசவத்தின்போது சிலர் வலியால் அலறுவார்கள். அப்படி செய்வது அவர்களது ஆற்றலை குறைத்துவிடும். முழு ஆற்றலையும் உபயோகிக்கும் வகையில் மூச்சுப் பயிற்சிகளை சொல்லித் தருவோம். சிசேரியன் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் கலந்துரையாடல் நடத்துவோம். இப்போது கணவன்மார்களையும், மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது உடன் இருக்க அனுமதிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் பிரசவத்தின்போது மனைவிக்கு எப்படி ஆதரவாக நடந்து கொள்வது என்பதைப்பற்றியும் பயிற்சிகள் கொடுக்கிறோம்.

கர்ப்பிணியின் தாய், மாமியார், கணவன் என அனைவருக்கும் ஒரு நாள் குடும்ப ஆலோசனை வகுப்பு எடுக்கிறோம்.  குழந்தை பிறந்த பின் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்கப் போகும் அந்தப் பெண்ணுக்கு குடும்பம் எப்படி ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் வரக்கூடிய பெண்களை எப்படி சமாளிப்பது, அவருக்கு ஆதரவாக நடந்துகொள்வது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு  நிச்சயம் இந்த குடும்ப ஆலோசனை உதவியாக இருக்கும். உடற்பயிற்சியோடு யோகா, கோலாட்டம், நடனம் போன்ற வகுப்புகளையும் எடுக்கிறோம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஓய்வுதான் எடுக்க வேண்டும் என்ற நினைப்பிலிருந்து வெளிவந்து சந்தோஷமாக நடனம் ஆடுவதால் அவர்களுக்கு மனம் அமைதி  கிடைக்கும் உடல் உறுப்புகள் அனைத்தும் இறுக்கமில்லாமல், தளர்வடையும் வகையில் அனைத்து பயிற்சிகளையும் தினமும் சொல்லித் தருவோம்.

சுகப்பிரசவத்திற்கான இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் பயிற்சிகளும் சொல்லித் தருகிறோம். சில பெண்களுக்கு மருத்துவர்களே பெட் ரெஸ்ட் இருக்க அறிவுறுத்துவார்கள். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் பிரசவத்தைப் பற்றிய பயத்தை போக்கும் ஆலோசனைகளை வழங்குகிறோம். இது தவிர்த்து பிரசவித்த பெண்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். வாட்ஸ் அப் குரூப்பில் தாய்ப்பால் ஆதரவுக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதில் தாய்ப்பால் பற்றிய சந்தேகங்களுக்கு அவ்வப்போது அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பதற்கு என்ன செய்வது? என்ன உணவுகள் எடுக்க வேண்டும்? போன்ற தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறோம். சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பதில்லை என்று சொல்வார்கள். கண்டிப்பாக எல்லா பெண்களுக்கும் பால் சுரக்கும்.

எப்படி குழந்தையை வைத்துக் கொண்டு பால் கொடுக்கும்போது தடையில்லாமல் பால் சுரக்கும் என்பதற்கான நுட்பத்தையும் சொல்லித் தருகிறோம். சரியான நிலையில் வைத்துக் கொண்டு கொடுக்காமல் போனால் நீர்த்த பால் மட்டுமே வெளிவரும் என்பதால் குழந்தையின் பசி அடங்காது. இதனால் தனக்கு பால் போதவில்லை என்று நினைத்து பசும்பால் அல்லது டின் பாலை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நுட்பத்தை கற்றுக் கொண்டு கொடுத்தால் கட்டாயம் தாய்ப்பால் தேவைக்கு அதிகமாகவே சுரக்கும்’’ என்கிறார். நிறைய கர்ப்பிணிகளை சந்திக்கும் அனுபவத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகளைச் சொல்லுங்களேன் என்றும் கேட்டோம்...

‘‘கர்ப்பம் தரித்த பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் முதலில் தேவையற்ற பயத்தை கை விட வேண்டும். பயத்தினால் இவர்களாகவே முன் கூட்டி சிசேரியன் பிரசவத்திற்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறார்கள். இன்றைக்கு சிசேரியன் பிரசவம் அதிகமானதற்கு இதுவே காரணம். கர்ப்பிணிகள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதும் மிக முக்கியம். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொண்டு எப்போதும் மொபைலை வைத்துக் கொண்டும், டிவி, நெட்பிளிக்ஸில் படங்கள் பார்த்துக் கொண்டும் இருப்பதற்கு பதில் கோலம் போடுவது, பூ கட்டுவது, கை வேலைகள் செய்வது, இசை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது மற்றும் மூளைக்கு வேளைதரும் வார்த்தை விளையாட்டு, எண் விளையாட்டுகளில் ஈடுபடுவது கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நல்லது.

பிரசவத்திற்குப் பிறகும் பெண்களுக்கு மன அமைதி முக்கியம். குழந்தை தாய்ப்பால் அருந்தும்  நேரத்தில்,  டிவி சத்தமில்லாத, ஆள் நடமாட்டமில்லாத அமைதியான அறையில், மன அமைதியாக கொடுப்பது குழந்தைக்கு நல்லது. தினமும் பழச்சாறுகளுக்கு பதில், நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் 40 நிமிடம் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்த்து, சிறுதானியங்கள், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மொபைல், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உபயோகம் கட்டாயம் கூடாது’’ என்கிறார்.

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்