SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்கள் சிவப்பாகலாமா?!

2020-02-25@ 17:04:10

நன்றி குங்குமம் டாக்டர்

கண்கள் சிவப்பாக இருக்கிறது டாக்டர் என்று நோயாளி சொல்லும் ஒரு பிரச்னைக்குப் பின்னால் மருத்துவரின் மனதில் அது தொடர்பாக பல சந்தேகங்கள் எழும்.

* கண் சிவப்பு எங்கு இருக்கிறது? குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமா, கண்களின் பரப்பு முழுவதுமா?

* ஒரு கண்ணில் மட்டுமா, இரண்டு கண்களிலும் சிவப்பு இருக்கிறதா?

* வேறு என்னென்ன அறிகுறிகள் இருக்கின்றன? அதாவது வலி, உறுத்தல், காய்ச்சல், சளி உள்ளதா? இவற்றுடன் பார்வை குறைபாடு உள்ளதா?

* பாதிக்கப்பட்டவரின் வயது என்ன?

* நோயாளியின் பொதுவான உடல் தகுதி என்ன? சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் எதுவும் உள்ளதா?

* சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா?

* கண்களில் எப்போதேனும் காயம் ஏற்பட்டு இருக்கிறதா?

கண்களைக் குறித்துப் பிரத்யேகமாகப் படிக்கும், அது தொடர்பாகவே சிகிச்சை அளித்து வரும் மருத்துவருக்கே இத்தனை கேள்விகள் இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க கடையில் போய் சொட்டு மருந்து வாங்கிப் போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? எல்லாக் கண் சிவப்பும் கண் வலியால் ஏற்படுவது அல்ல. தூசி விழுந்தாலும் கண் சிவக்கக் கூடும். ஒவ்வாமை ஏற்பட்டாலும் கண்களில் சிவப்பு ஏற்படும். ஒவ்வாமையில் கண்களில் அரிப்பு அதிகம் இருப்பதால் நோயாளி சீக்கிரமே மருத்துவரை நாடி வருவார்.

எந்த அறிகுறியும் இல்லாமலும் வெறுமனே சிவப்பு மட்டும் தோன்றுவது உண்டு. உயர் ரத்த அழுத்தம், ரத்தம் உறையும் நிலையில் உள்ள குறைபாடுகள் இவற்றால் ரத்தக் கசிவு ஏற்பட்டு கண்ணின் வெள்ளை விழியில் சிவப்பு ஏற்படும். (Subconjunctival hemorrhage) வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் வண்ணம் செய்யக்கூடிய பளுதூக்குதல், தொடர் இருமல், தும்மல், வாந்தி இவற்றால் கண்களின் சிறு ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்த நிலையில் வலியோ உறுத்தலோ இன்றி குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ரத்த சிவப்பாக (bright red) காணப்படும். பலருக்கு இந்த நிலையைப் பரிசோதிக்கும்போது உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளைப் புதிதாகக் கண்டறிய நேரும். விரல், புத்தகம், பென்சில் போன்றவற்றால் ஏற்படும் சிறு காயங்களிலும் இது ஏற்படலாம். இதுவும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் தானாகவே சரியாகி விடக்கூடிய ஒன்று. சில சமயங்களில் வைட்டமின்-சி அளிக்க வேண்டியதிருக்கும்.

வலியுடன் கூடிய வெண்கோளப் பகுதி(Sclera) கண்சிவப்புக்கு சில காரணங்கள் உண்டு. இது எளிய மருத்துவ முறைகளால் சரி செய்யக்கூடியது. உடலின் வேறு எந்தப் பகுதியிலாவது ஏற்படும் மூட்டுவலி, தசைநார் பிரச்சனைகள் போன்றவற்றாலும் இந்தத் தொந்தரவு நேரக்கூடும். மேற்கூறிய காரணிகள் எளிதில் குணப்படுத்தக் கூடியவை. இவற்றால் பொதுவாக பார்வைக்கு எந்தவித பாதிப்பும் நேர வாய்ப்பு இல்லை. மாறாக சுயமாக சொட்டு மருந்து போட்டு மருத்துவத்தைத் தள்ளிப்போடும் நோய்கள் சில உண்டு. அவை பார்வையை பெருமளவில் பாதிக்கக்கூடியவை. முகவாதம் போன்ற காரணங்களால் கண்ணை சரியாக மூட முடியாத நிலை ஏற்படலாம். இதனால் கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் சிவப்பு தோன்றுகிறது. முகவாதம் குணமாகும் வரை சிறு பிளாஸ்டர் மூலம் உறங்கும் நேரமும், மதியம் ஒரு மணி நேரமும் இரு கண்இமைகளையும் ஒட்டி வைத்தால் இதனைத் தவிர்க்கலாம்.

இது தவிர சிறு கட்டிகள், குடற் புழுக்களின் முட்டைகள், கருவிழியில் ஏற்படும் புண்கள் இவற்றாலும் கண்சிவப்பு ஏற்படலாம். வேகமாகப் பரவும் சில புற்றுநோய்களின் அறிகுறிகள் கண்களில் தோன்றலாம். இதிலும் கண்சிவப்பு ஏற்படக்கூடும். கண் அழுத்த நோய் மற்றும் கண்ணின் உள் உறுப்புகளால் ஏற்படும் பிரச்னைகளில் கூட வெள்ளை விழியில் சிவப்பு ஏற்படுகிறது. இத்தகைய சிவப்பு கருவிழியைச் சுற்றிலும் காணப்படும். வெண்படலத்தின் மற்ற இடங்களில் சிவப்பு இருக்கும். இந்த இரு பிரச்னைகளும் ஒன்றாகக் கவனிக்க வேண்டியவை. இவற்றால் குறிப்பிடத்தகுந்த பார்வை இழப்பும் ஏற்படும்.

அன்று மிகவும் பரிச்சயமான நபர் ஒருவர் வந்திருந்தார். ‘என் பொண்ணு வெளியூரில் ஹாஸ்டலில் இருக்கா. கண்ணு சிவப்பா இருக்குதாம், தண்ணி வருதாம். ஏதாவது ட்ராப்ஸ் கொடுங்க’ என்றார். ‘நேரடியாகப் பார்க்க வேண்டும். பார்க்காமல் மருந்து போடக் கூடாது’ என்று கூறினேன். ‘ப்ளஸ் டூ படிக்கிறா.... ஸ்கூல்ல லீவ் கொடுத்து அனுப்ப மாட்டாங்க’ என்று வாதாடினார். நோயாளியை நேரடியாகப் பார்க்காமல் மருந்து கொடுப்பதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்ததால் சென்றுவிட்டார். 4 நாட்கள் கழித்து ஏதோ சொட்டு மருந்தைப் போட்டு பின் நிலைமை மோசமானதால், அதன் பிறகு ஸ்கூலில் லீவ் எடுத்து சிறுமியை அழைத்து வந்திருந்தார்.

கருவிழியில் ஒரு பூச்சியின் சிறகு காணப்பட்டது. தாமதமானதால் கருவிழியும் புண் பட்டிருந்தது. பூச்சியை அகற்றி, புண்ணுக்கு சிகிச்சை அளித்து சிறுமி இயல்பு நிலைக்குத் திரும்பி பள்ளி செல்ல ஒரு மாதம் ஆகிவிட்டது. சில மணி நேர மருத்துவ பரிசோதனையைத் தவிர்த்ததற்கு அவர்கள் அளித்த விலை ஒரு மாத இழப்பு. A stitch in time saves nine - என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பழமொழிகள் எல்லாம் ஏட்டிற்கு மட்டும்தானா, வாழ்வுக்கு இல்லையா என்பதை சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்!

(தரிசனம் தொடரும் !)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்