SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளைப்படுதல் ஆபத்தான நோயா?!

2020-02-18@ 14:33:22

நன்றி குங்குமம் டாக்டர்

மகளிர் மட்டும்

‘‘பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று வெள்ளைப்படுதல்(White Discharge). பெரும்பாலும் இது பெண்களால் கவனிக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம். பெண்கள் பருவமடையும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சுழற்சி, கர்ப்ப காலம், மெனோபாஸ் நிலை போன்ற காரணங்களால் வெள்ளைப்படுதல் என்பது ஒரு இயல்பான அறிகுறிதான். இருப்பினும், சில நேரங்களில் நோயின் வெளிப்பாடாவும் இருக்கலாம் என்பதால், அதைப்பற்றிய தெளிவான புரிதல் வேண்டும்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவரான வைஷ்ணவி.

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக வெள்ளை நிறத்தில் - நீர் போலவோ அல்லது சளி போலவோ வெளியேற்றம் இருப்பதையே வெள்ளைப்படுதல் என்று அழைக்கிறோம். பெரும்பாலான பெண்கள் தமக்கு வெள்ளைப்படுவதை கண்டு கவலைப்படுகின்றனர். இதற்காக பல மருத்துவர்களையும் அணுகியிருப்பார்கள். ஆனால், வெள்ளைப்படுதல் சில நேரங்களில் மாதவிடாயைப் போல ஒரு இயல்பான நிகழ்வாகக் கூட இருக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எதனால் ஏற்படுகிறது?

பெண்களுக்கு பொதுவாக 28 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இதில் ரத்தப்போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இந்த மாதவிடாய் சுழற்சிக்கு நடுவே, அதாவது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன் வெள்ளைப்படும். இதனை அண்ட விடுப்பின் காலம்(Ovulatory period) என்று அழைப்பர். அதாவது சினைப்பையிலிருந்து (Ovary) கருமுட்டை (Ovum) வெளி வந்து கர்ப்பப்பைக்கு வரும் நாட்கள் இவை. இது ஒரு இயற்கையான நிகழ்வு. Fertile period என்று குறிப்பிடப்படும் இந்த நாட்களில் தாம்பத்ய உறவு கொண்டால் கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். அதேபோல் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன் ஹார்மோன்களின் மாற்றத்தால் வெள்ளைப்படும். இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் நடக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு அவ்வப்போது வெள்ளைப்படும். குழந்தை பிறந்த பின் 2 முதல் 4 வாரங்களும் வெள்ளைப்படும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.

எப்போது சிகிச்சை தேவை?

வெள்ளைப்படுவதற்கான சில முக்கிய மருத்துவ காரணங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

1. கர்ப்பப்பை வாய்ப்புண்

2. கர்ப்பப்பை வாய் தொற்றுநோய்

3. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

4. கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை சார்ந்த உறுப்புகளின் தொற்றுநோய்

5. பிறப்புறுப்பின் புற்றுநோய

- இந்த ஐந்து காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படுவது உறுதியானால் சிகிச்சை தேவை!

வெள்ளைப்படுதலால் பக்கவிளைவுகள் உண்டா?

ஆரம்ப காலத்திலேயே அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவரைப் பார்த்து தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயின் காரணமாக தொடர்ந்து அடிவயிறு வலி, கைகால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி வரலாம். தொற்றுநோயால் குழந்தையின்மை, தாம்பத்ய உறவுகொள்வதில் சிரமம், புற்றுநோய், உடலின் மற்ற இடங்களுக்கு பரவுதல் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

பெண்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

இயற்கையான காரணங்களினால் எல்லா வயது பெண்களுக்கும் வெள்ளைப்படுவது இயல்பு. ஆனால், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு நம் பலரிடம் இல்லை.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை என்னவென்றால்...

1. சானிட்டரி பேட் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படும் போது

2. இடைவெளியின்றி வெள்ளைப்படும்போது

3. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படும்போது

4. வெள்ளைப்படும்போது - வலி ஏற்பட்டால்

5. வெள்ளை நிறம் அல்லாமல் வேறு நிறங்களில் (பச்சை, சிவப்பு) ஏற்படும்போது

6. வெள்ளைப்படும்போது அரிப்பு ஏற்பட்டால்

7. மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு(Menopause) வெள்ளைபடும்போது

8. குழந்தை பிறந்த பின் துர்நாற்றமும் வலியும் சேர்ந்து வெள்ளைப்படும்போது ஆகிய தருணங்களில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டியது மிக அவசியம்!

வெள்ளைப்படுவதால் ஆபத்து ஏதேனும் உண்டா?

அசாதாரணமாக வெள்ளைப்படுவதாக உணர்ந்தால் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிய வேண்டும். நோய் ஏதேனும் இருப்பின், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான தக்க சிகிச்சையை நாம் பெற வேண்டும். அவ்வாறு செய்தால் பெரிய ஆபத்து எதுவும் இல்லாமல் குணமடைய வாய்ப்புகள் உண்டு.

எப்படி வராமல் பாதுகாத்துக் கொள்வது?

இயற்கையான காரணங்களினால் வெள்ளைப்படுவதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது தொற்றுநோய் வெள்ளைப்படுதலில் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் அதுபற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இந்திய பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களின் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுவது, உடலுறவு கொண்ட பின் ரத்தப்போக்கு இருப்பது போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்.

தற்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசிகள் வந்துவிட்டன. இது பெண்களின் 9-14 வயதுகளில் இரண்டு ஊசிகளாக கொடுக்கப்படுகிறது. இந்த வயதை கடந்த பெண்கள் தடுப்பூசி போடக்கூடாதா என்றால் அப்படி கிடையாது. எல்லா வயது பெண்களும் போட்டுக்கொள்ளலாம். ஆனால், ஊசியின் எண்ணிக்கை மாறுபடும். 15 வயதுக்கு மேல் 26 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு மூன்று ஊசிகளாக கொடுக்கப்படுகிறது. ஆராய்ச்சிகளில் 11-12 வயதில் போடப்படும் தடுப்பூசிதான் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கான பரிசோதனைகள் என்னென்ன?

பாப்ஸ்மியர்(Pap smear) எனப்படும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறிய உதவும். ACOG - எனப்படும் அமெரிக்கன் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி 21 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இவ்வாறு செய்தால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவில் தொடங்கவும், முழுமையாக குணமடையவும் வாய்ப்புகள் இருக்கிறது.

சிகிச்சைகள் என்ன?

தொற்றுநோயால் ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப மாத்திரைகளை பெண்கள் மற்றும் அவர்களது கணவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான தக்கசிகிச்சையைப் பெற வேண்டும்.

ஏதேனும் வீட்டு வைத்தியங்கள் உண்டா?

குறிப்பிடும்படி வீட்டு வைத்தியம் எதுவும் இல்லை. ஆனால், சில ஆலோசனைகள் உண்டு. சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும். நம் பிறப்புறுப்பையும் அதை சுற்றி இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் நீண்ட நேரம் டாம்பூவை வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்கும் பிறப்புறுப்பை ரசாயனப் பொருட்கள் கொண்டும், வாசனை திரவியங்களின் ஸ்பிரே கொண்டும் கழுவுவதாலும் வெள்ளைப்படுதல் வரலாம். சுத்தமான நீரால் கழுவினாலே போதுமானது. தவிர உங்கள் மருத்துவரிடம், உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்னைகளையும் ஒளிவு மறைவின்றி தெரிவிப்பது உங்களுக்கு நல்லது!

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்