SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசி உணர்வை குறைக்கும் கள்ளிமுளையான்!

2020-01-07@ 16:51:22

நன்றி குங்குமம் டாக்டர்

பாட்டி வைத்தியம்


உடல் பருமன் என்பது ஒரு முக்கிய பிரச்னையாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவு தொடர்பான காரணம் என்று வருகிறபோது அதீத பசி உணர்வும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தேவையற்ற பசி உணர்வினைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது கள்ளி முளையான் எனும் தாவரம்.

இன்று குழந்தைகளுக்கு பசி இருக்கிறதோ இல்லையோ பெற்றோர் ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற காரணத்தால் தேவைக்கு அதிகமான உணவைப் புகட்டுகிறார்கள். அதுபோல உடல் உழைப்பு குறைந்து ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தவாறு வேலை செய்வதால், போதுமான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் உடல் பருமன் ஏற்படுகிறது.

உடற்பருமன் காரணமாக சர்க்கரை நோய் வரும். அதுபோலவே இதய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களைவிட பருமனான உடல் அமைப்பு கொண்டவர்களிடம் புற்றுநோயின் பாதிப்பு அதிகம் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

சிலர் மன அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி உட்கொள்கின்றனர். இதுவும் உடல் பருமனுக்கு ஒரு முக்கியமாக காரணமாக இருக்கிறது. எனவே, உடல் பருமன் என்பது ஒரு பிரச்னையாக இல்லாமல் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாகிறது. இவற்றுக்கு எல்லாம் தீர்வு, அதிக பசி ஏற்படாத வண்ணம் உடலுக்குப் போதுமான அளவு மட்டுமே உணவு உட்கொள்வதுதான்.

முன்பு கானகத்தில் வேட்டைக்குச் செல்கிறவர்கள், கானகத்தில் செடிகளைப் பறித்து வருவதற்கு செல்பவர்கள், இயற்கைப் பொருட்களைச் சேகரித்து வருபவர்கள் போன்றோர் நெடுநேரம் மலைப்பகுதிகளில் நடக்கிறபோது உடல் சோர்வு ஏற்படாமலும், பசி ஏற்படாமலும் தற்காத்துக் கொள்வதற்காக காடுகளில் வளர்கிற இந்த கள்ளிமுளையான் தாவரத்தை பயன்படுத்துவார்கள்.

கல்லில் முளைக்கிற கள்ளிமுளையான் என்னும் இந்தத் தாவரம் ஒருவிதமான புளிப்புச் சுவை உடையதாக இருக்கும். காட்டின் பல பகுதிகளிலும் கற்களின் ஊடாகவும், நிலப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் கூட இந்த தாவரத்தை நாம் காண முடியும். கள்ளிமுளையான் வறட்சியான பகுதியில் வளர்கிற காக்டஸ்(Cactus) வகையைச் சேர்ந்த உலர் நில தாவரம். நம்முடைய சோற்றுக் கற்றாழையை போன்ற தாவர வகை குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரத்தின் தண்டுகள் எல்லாம் சிறுசிறு கிளைகளுடன் மாறுபட்ட இலைகளுடன் காணப்படும். ஓரங்கள் எல்லாம் லேசான கூர்மையுடன் காணப்படும்.

இவற்றில் கோடை காலங்களில் சிறியசிறிய நட்சத்திர வடிவில் ஒரு மலர் காணப்படும். கள்ளிமுளையானில் ஏறத்தாழ 150 வகைகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படுகிற Caralluma fimbriyata, Caralluma edulis என்ற இரண்டு வகைகள்தான் மிக அதிகமாக காணப்படுகின்றன. பொதுவாக புளிப்பு, உப்பு, காரம் ஆகிய மூன்று சுவையும் இருக்கிற பொருட்கள் எல்லாம் உடலின் பித்தம் மற்றும் அக்னியை அதிகப்படுத்தும். ஆனால், இனிப்பு சுவையும் மிகக் குறைந்த அளவுக்குப் புளிப்புத்தன்மையும் கொண்ட இந்த தாவரம் பித்தத்தைச் சமன்படுத்தி கட்டுப்படுத்தும். அதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தும். பசியைத் தூண்டுகிற தன்மையைக் குறைத்து, பசி வராமல் இருக்கச் செய்யும். கள்ளிமுளையானைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலுக்குச் சோர்வு வராமலும் பார்த்துக் கொள்ளும்.

ஏனாதி என்ற காட்டுவாசிகள்(குறிப்பாக திருப்பதியை ஒட்டியுள்ள மலைப்பிரதேசங்களில் வாழ்கிறவர்கள்) காயாம்பூ என்று சொல்லப்படுகிற ஒரு தாவரத்தின் காயைத் தங்களுக்கு உடல் சோர்வு இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் கொங்கன் பகுதியிலும் கோவாவிலும் ஒருவகையான புளி நமக்கு கிடைக்கிறது. அதனைக் ‘கோக்கம்’ என்று சொல்வார்கள். அதுபோல கம்போடிய நாட்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மலபார் புளி என்று சொல்லப்படுகிற கொடம்புளி இன்றைக்கு கேரளாவில் சில பகுதிகளிலும் கர்நாடகாவில் சில பகுதிகளிலும், சிர்சி போன்ற பகுதிகளிலும் இயற்கையாகவே மிக அதிகமாக வளர்கிறது. இந்த கொடம்புளியும் பல பகுதிகளில்  அதிகளவில் உணவாக உட்கொள்ளப்படுகிறது.

புளிச்ச கீரை ஒரு வகையான புளிப்புச் சுவை உடையதாக இருக்கிறது. இந்தப் புளிப்புச் சுவையுடைய எல்லாத் தாவரங்களும் பசியைக் கட்டுப்படுத்தி, அந்த உணர்வு தோன்றாமல் இருக்கச் செய்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தடுக்கப்பட்டு, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கச் செய்கிறது.

 இப்படிப்பட்ட தாவரங்கள் அனைத்துமே மரங்களாக இருக்கிற காரணத்தால் அதனை வளர்த்து பயன்படுத்துவதற்கு நெடுநாட்கள் ஆகும். புளிச்சக்கீரை, கள்ளிமுளையான் ஆகிய இரண்டுமே மிக எளிதில் வளரக்கூடிய தாவரங்களாக அமைந்திருக்கின்றன. இருந்தாலும் கூட புளிச்சக்கீரையை அதிக அளவில் பயன்படுத்தினால்தான் உடல் பருமன் குறைதல் ஏற்படும்.

ஆனால் கள்ளிமுளையான் சத்தைப் பிரித்து எடுத்து ஒரு கிராம் அளவுக்கு இரண்டு வேளை, இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைகிறது என்பது ஆய்வின் மூலம் தெளிவாகிறது. Central obesity என்று சொல்லப்படும் தொப்பையை குறைக்கிற தன்மையும், உடல் எடையைக் குறைக்கும் தன்மையும் இதிலிருந்து பிரித்தெடுக்கும் சத்துக்கு உண்டு என்ற ஆய்வு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக கள்ளிமுளையான் செடியைச் சில பகுதிகளில் சட்னியாகவோ, ஊறுகாயாகவோ உட்கொண்டு வருவது வழக்கத்தில் இருக்கிறது. அதனை அப்படியே 5 கிராம் வரை சுவைத்துச் சாப்பிடுவதும் பழக்கத்தில் இருக்கிறது.

எடை அதிகரிக்கக் கூடாது, இதயத்திற்கும் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது, மூட்டு வலி வரக் கூடாது, எடை அதிகரித்த காரணத்தினால் மூச்சு இரைக்கக் கூடாது, ரத்தக்கொதிப்பு வரக்கூடாது, சர்க்கரை நோய் வரக்கூடாது என்று கருதுபவர்களுக்கு கள்ளிமுளையான் ஒரு சிறந்த மருந்தாகும்.

இதன் பயன்களைப் பற்றி கும்ப முனி வாகனத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் எப்படி நம்முடைய பாரம்பரிய அறிவை இன்றைக்கு அறிவியல் நோக்கில் பார்க்கிறபோது கூட உதவியாக இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும்.

‘வாய்க்குப் புளித்திருக்கும் வன்பசியை உண்டாக்கும்ஏய்க்குமடன் வாதத்தையும் ஏறுபித்தம் சாய்க்கும்தெள்ளிய இன்ப மொழித் தெய்வ மடவனமேகள்ளிமுளையானை அருந்திக் காண்.’நம்முடைய பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையமும் கூட, ஒரு கல்லூரிப் பேராசிரியரின் ஆய்வு படிப்பிற்காக கள்ளிமுளையானைத் தேர்வுசெய்து கொடுத்து அவர்கள் 40 முதல் 45 வயதுடைய எடை கூடுதல் உடைய பெண்களுக்கு கொடுத்து அதனை ஆய்வு செய்தபோது ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைவுக்கு உதவியாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

- விஜயகுமார்

படங்கள்: ஜி. சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்