SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேபிஸ் பயங்கரம்

2019-11-06@ 10:53:38

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நாய்க்கடி என்பது சாதாரண சுகாதார பிரச்னையில்லை. அது மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக Rabies என்று அழைக்கப்படுகிற வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உடையதாக மாறிவிடும்’’ என்கிறார் பொதுநல மருத்துவரான ராமகுரு. இந்த நோய் குறித்து அவரிடம் மேலும் விளக்கமாகக் கேட்டோம். ரேபிஸ் என்பதற்கு லத்தீன் மொழியில் கிறுக்கு(Madness) என்று அர்த்தம். Lyssa என்பதற்கு கிரேக்க மொழியில் வன்முறை(Rage) என்று அர்த்தம். Rabhas என்பதற்கு சமஸ்கிருத மொழியில் வன்முறை, வெறி (Violent) என்ற அர்த்தம் உள்ளது.

ரேபிஸ் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறியப்பட்ட ஒரு நோய். மெசபடோமியா நாகரிகத்தின்போது இதுபற்றி எழுதப்பட்டுள்ளது. அப்போது நாயின் நாக்கை அறுத்துள்ளார்கள். மேலும் நாயையும், மனிதனையும் கொன்றுள்ளார்கள். முதன்முதலில் Girolamo Fracastoro என்ற இத்தாலிய மருத்துவர்தான் ரேபிஸ் ஒரு கொடூரமான சாவு விளைவிக்கும் நோய் என்று தெரிவித்தார். Louis Pasteur என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவர் 1885-ல் ரேபிஸ் நோய் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்.

நோய் பரப்பும் காரணிகள்

மனிதனுக்கு நாயின் மூலமாக ரேபிஸ் நோய் 95 % பரவுகிறது. மற்ற பாலூட்டி விலங்கினங்கள் மூலமாகவும் இந்த நோய் உண்டாகிறது. குரங்கு, பூனை, வௌவால், ஓநாய், நரி போன்ற மிருகங்களாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. வெறி நாயின் எச்சில் நமது உடலின் மேல் உள்ள சிராய்ப்பு காயங்களில் பட்டாலோ, உடலின் உள் பகுதியில் பட்டாலோ ரேபிஸ் பரவும். வௌவால்கள் வசிக்கும் குகைகளின் உள்ளே நாம் நுழைந்தாலே இந்த நோய் ஏற்படும்.

குறிப்பாக தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளில்தான் அதிகம் காணப்படுகிறது. எங்கெல்லாம் தெருநாய்கள் அதிகம் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த நோய் அதிகம் காணப்படும். நாம் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடுவது மட்டும்தான் இந்த நோயைத் தடுக்க உதவும்.

நோய்க்கிருமி பரவும் விதம்

நமது உடலில் ரேபிஸ் நோய்க்கிருமி பின்வரும் இரண்டு வழிகளில் உள்ளே செல்கிறது. நேரடியாக கை, கால் நரம்புகளின் வழியாக மூளையைச் சென்றடைகிறது. தசைகளில் உற்பத்தியாகி மிகவும் பாதுகாப்பாக இருந்து நரம்பு மண்டலம் வழியாக மூளையைச் சென்றடைகிறது. மேலும் இது தண்டுவடம், சிறுமூளை, மூளையின் மற்ற பகுதிகளிலும் பரவுகிறது. சளி, சிறுநீர் மற்றும் கண் போன்றவற்றில் ரேபிஸ் வைரஸ் இருந்தால் அது பரவாது.

நோய் அறிகுறிகள்

9 நாளிலிருந்து 90 நாட்களுக்குள் ரேபிஸ் நோய்க்கிருமி மனித உடலில் உற்பத்தியாகும். முகத்திலும், கழுத்திலும், தலையிலும் கடிபட்டால் சீக்கிரமாகவே இந்த நோய் ஏற்படும். இந்த நோய் தொடங்கிய 10 நாட்களில் காய்ச்சல், தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதன்பின் நரம்பு மண்டல பாதிப்புகள் உண்டாகும். பின்னர் வலிப்பு, தண்ணீரைப் பார்த்து பயம், தூக்கமின்மை, குழப்பம், ஒளியைப் பார்த்து பயம், சுய நினைவு இல்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர் சரியான சிகிச்சை அளிக்காதபோது நோய் தீவிரமாகி இறுதியில் மரணம் ஏற்படும்.

சிகிச்சைமுறை

நல்ல சுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிராணவாயு அதிகம் செலுத்த வேண்டும். வலிப்பு நோயை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்காவிலுள்ள Milwaukee நகரில் கடைபிடிக்கப்படும் மருத்துவ முறையைப் பின்பற்றினால், தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

தடுப்பு முறைகள்

ரேபிஸ் நோய் வராமல் தடுக்கவும், வந்த பின்பு தடுக்கவும் பின்வரும் தடுப்பூசிகள் உள்ளன. Purified chick embryo cell vaccine (PCEC), Purified vero cell rabies vaccine (PVRV) ஆகிய இந்த இரண்டும் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்கு போடக்கூடிய தடுப்பூசிகள்.  வெளிநாட்டிலிருந்து வருபவர்களும், ரேபிஸ் நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் Human diploid cell vaccine (HDCV) என்கிற தடுப்பூசியை 0, 7, 21, 28 என்கிற கால இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம்.

மனிதர்களுக்கு நாய்கடிக்கும் முன்பு போட்டுக்கொள்ளும் இந்த தடுப்பூசியை அவரவர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து தேவைக்கேற்ப ஒரு முறை மட்டும் போட்டுக் கொண்டால்கூட போதுமானது. நாய் கடித்த பிறகு மனிதர்களுக்கு Human rabies immunoglobulin (HRIG) என்கிற தடுப்பூசியை 0, 3, 7, 14, 28 ஆவது நாட்களில் போட வேண்டும்.

விலங்குகள் கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை

நாய் போன்ற பிற விலங்குகள் கடித்தோ அல்லது பிராண்டியோ ஏற்பட்ட காயத்தை 10 முதல் 15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும். 70 % ஆல்கஹால் அல்லது எத்தனால் அல்லது பொவிடோன் - அயோடின் பயன்படுத்தியோ காயத்தைக் கழுவ வேண்டும். இது உயிரைக் காக்க மிகவும் உதவியாக இருக்கும். அதன் பிறகு உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பையில் வளரும் கருவை இந்த தடுப்பு மருந்து பாதிப்பதில்லை. எனவே விலங்குகளால் கடிபட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது. ரேபிஸ் நோய் ஏற்பட்டால் அது மரணம் விளைவிக்கும் தன்மையுடையது. இந்த நோயால் ஆண்டுதோறும் 59,000 பேர் இறக்கின்றனர். விழிப்புணர்வு கல்விதான் இந்த நோயைத் தடுக்க உதவும் சரியான வழி. கிராமங்கள், நகரங்கள் மற்றும் தொலைதூர இடங்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும்.

தொகுப்பு: க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PopeFrancisInThailand

  முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்