SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா?!

2019-10-14@ 10:51:54

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள் பயனடைகிறார்களா என்பது சந்தேகமே. ‘விலையைக் குறைத்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களை கண்காணிப்பதும் அரசின் பொறுப்பு’ என்ற மருத்துவர் புகழேந்தி இந்த விஷயத்தில் அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கிறார்.

நம் நாட்டில் National Pharmaceutical Pricing Authority (NPPA) என்ற அமைப்புதான் ஒரு மருந்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவதும் NPPA-தான். ஆனால், விலை குறைக்கப்பட்ட மருந்துகள் சாமான்ய மக்களை சென்றடைகிறதா? என்பதுதான் கேள்வி? குறிப்பிட்ட அந்த மருந்தை தயாரிக்கும் உரிமை பெற்ற அந்த நிறுவனம், அரசு விலையைக் குறைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்து உற்பத்தியை குறைத்துவிடுகிறது அல்லது அடியோடு உற்பத்தியை நிறுத்திவிடுகிறது.  இதன் காரணமாக சந்தையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்த மருந்துகள் கிடைக்கும்.

பொதுவாகவே மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய மருந்துகளை மொத்த வியாபாரிகளுக்கு (Wholesale Traders) விற்பனை செய்யலாமல், நேரிடையாக சில்லரை வியாபாரிகளுக்கு கொடுத்து விடுவதால் மக்களைச் சென்றடையும்போது பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, Benzathine Penicilline ஊசிமருந்தை இதய வால்வுகளை பாதிக்கும் நோயான Rheumatic Heart Disease  நோயாளிகளுக்கு அவர்களது குழந்தை பருவம் தொடங்கி 20 வயது வரை 20 நாட்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். யானைக்கால் நோய்க்கும் இது முக்கியமான மருந்து.

இந்த மருந்தை NPPA விலைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த மருந்தை சில மருந்து நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கிறது. இவை உற்பத்தியை குறைத்து விடுகின்றன அல்லது மொத்த விற்பனைக்கு கொடுக்காமல், நேரடியாக சில்லரை விற்பனைக்கு விற்றுவிடுகின்றன. அதுவும் 8 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. மொத்த விற்பனையில் இந்த மருந்து 10 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், தயாரிப்பு விலை ரூ.8-தான் இருக்கும் ஆனால், சில்லரை விற்பனை மருந்து கடைகளில் ரூ.160 வரையிலும் விற்கிறார்கள்.

அப்படியென்றால், மக்களுக்கு கிடைக்கும்போது அதே மருந்தின் விலை பலமடங்கு அதிகமாகிறது மொத்த வியாபாரிகளிடம் இப்படி செயற்கையான மருந்துத் தட்டுப்பாட்டை மருந்து நிறுவனங்கள் உருவாக்குகின்றன.  மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நேரத்தில் வேறொரு மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை தயாரித்து பலமடங்கு அதிகமான விலைக்கு விற்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு மொத்த மருந்து வியாபாரிகள் சொல்லும் காரணம் எங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக லாபம் கிடைக்குமிடத்தில் நாங்கள் எப்படி இந்த மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று நேரிடையாகவே என்னிடம் கேட்கிறார்கள்.

இந்த நிலையில், விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் கொண்ட NPPA- ஏன் அந்த மருந்து சந்தையில் கிடைக்கிறதா? மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறதா? உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறார்களா? என்பன போன்ற பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது? என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை இதை சட்டமாகவே நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் நாட்டில், விலை குறைத்துவிட்டோம் என்ற அறிவிப்போடு சரி; தொடர் விளைவுகளையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. சமீபத்தில், அரசு வெளியிட்ட புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பின் நிலையும் இதேகதிதான்.

புற்றுநோய் மருந்துகளும் மொத்த விற்பனையில் விற்கப்படுவதில்லை. அரசின் விலைகுறைப்பு நடவடிக்கை சாமான்ய மக்களை சென்றடைவதில்லை.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ‘உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் நிலையான சுகாதார பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். மேலும் 9.5 கோடிக்கும் அதிகமானவர்கள் மருத்துவ செலவுகள் காரணமாக பொருளாதார சிக்கலில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டத்தை அதிகபட்சமாக மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய மருந்து சந்தையில் ஜெனரிக் மருந்துகளே ஏராளமாக விற்கப்படுகின்றன.

இந்திய மருந்து சந்தையில் பரவலாக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் Generic medicines மற்றும் Branded medicines. இதன் வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட ஒரு மருந்தின் காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்கள், அதைப் பயன்படுத்தி 20 ஆண்டுகள் வரை அந்த மருந்தை தயாரிக்கின்றன. இவை தயாரிக்கும் மருந்திற்கு Branded Medicine என்ற பெயரில் விற்கப்படுகிறது. அதே மருந்தை தயாரிக்க நினைக்கும் மருந்து நிறுவனங்கள், காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பு செயல்முறையிலும், பேக்கிங்கிலும் சின்னச் சின்ன மாறுதல்களை மட்டும் புகுத்தி Generic medicine என்ற பெயரில் உற்பத்தி செய்யலாம்.

இதற்கு ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்பதால் Branded medicine விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் அதே மருந்தை விற்க முடியும். ஆனால், இந்திய மருத்துவச் சந்தையில், பங்குதாரர்கள், பரிந்துரைப்பவர்கள், மருந்து வர்த்தக முகவர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என அத்தனை பேரும்  ஜெனரிக் மருந்துகளைப் பற்றி குழப்பம் மற்றும் தவறான தகவல்களை நோயாளிகளிடையே துரிதமாக பரப்புகின்றனர். 2012 அக்டோபரில், இந்திய அரசு மருந்துகளை அவற்றின் பிராண்ட் பெயர்களுக்கு பதிலாக ஜெனரிக் பெயரில் விற்கப்படவேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் சமூகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மருந்து வர்த்தக முகவர்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்கள் புரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிராண்டட் மருந்துகள், பிராண்ட் செய்யப்படாத ஜெனரிக்ஸ் மருந்துகளை விட உயர்ந்ததாக சித்தரிக்கிறார்கள். மேலும், இந்தியாவில் மருந்து தயாரிப்பாளர்கள் ஒரே மூலக்கூறை பல பிராண்ட் பெயர்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்கிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை நம்பகத்தன்மை வாய்ந்ததாக பரிந்துரைப்பதன் மூலம் மருத்துவ வல்லுநர்கள் இந்த குழப்பத்தை  மேலும் அதிகரித்துள்ளனர்.

வேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள் மற்றும் சந்தைப்படுத்துகிறார்கள் என்று விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தால் மருந்து நிறுவனங்கள் லாபத்தை தக்க வைத்துக்கொள்ள முடிகிறதே தவிர, சாமான்ய மக்களுக்கு சலுகை விலையில் மருந்தை வாங்க உதவுவதாக இல்லை. சமீபத்திய ஆய்வில், பல பிராண்டட் மருந்துகளுக்கான இந்தியாவின் வர்த்தக விலை 200% முதல் 2000% வரை இருப்பதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் சுய மருந்துகள் எடுத்துக் கொள்வதும் நோயாளிகள் மருந்துக் கடைகளில் கேட்டு தாங்களாகவே ஏதோ ஒரு மருந்தை சாப்பிடும் வழக்கமும் நாட்டில் பரவலாகியுள்ளது.

சாதாரணமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், இருமல் மருந்துகள் மற்றும் அலர்ஜி மாத்திரைகளின் லாபத்தைப்பற்றி அறியாததால் இந்திய நோயாளிகள் உள்ளூர் மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு வாங்கி ஏமாறுகிறார்கள். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணினி என தேவையற்றவற்றை கொடுப்பதற்கு பதில், அரசு உயிர்காக்கும் மருந்துகளையும் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு கொடுக்கலாம்.

குறைந்தபட்சம் இவர்கள் நிர்ணயிக்கும் விலையில் மருந்துகள் சாமானியர்களைச் சென்று அடைகிறதா என்பதை கண்காணிக்கலாம். மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகள் அதிகம் உற்பத்தி செய்ய அரசுக்கு வலியுறுத்தலாம். எதிர்கட்சிகளும் வறுமையில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் சுகாதார உரிமையையாவது பெற்றுத்தர குரல் கொடுக்கலாம்.  

(அலசுவோம்!)

எழுத்து வடிவம்: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்