SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை தந்த ஆன்டிபயாட்டிக்!

2019-10-08@ 10:39:41

நன்றி குங்குமம் டாக்டர்

பாட்டி வைத்தியம்


இன்று பாக்டீரியாக்களை எதிர்க்கும் Antibiotic மருந்துகள் பற்றி நிறைய பேசுகிறோம். எத்தனையோ பெயர்களிலும் அவை புழக்கத்தில் உள்ளன. ஆனால், இயற்கை தந்த ஆன்டிபயாட்டிக்கான மஞ்சள் பற்றி நம்மவர்கள் முன்னரே விழிப்புணர்வு கொண்டிருந்தார்கள் என்பது வியப்பூட்டும் செய்திதான்.

அக்ஷத பற்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!

மஞ்சளும் குறைந்த அளவு சுண்ணாம்பையும் தண்ணீரில் குழைத்து விளக்கொளியில் எரித்து சூடு பண்ணி அந்தச் சூட்டுடன் இருக்கிற அக்கலவையைக் நெற்றியிலும், முகத்திலும் அருகாமையில் பூசுகிற போது வேடம் போட்டது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படும். சிறு வயதில் எல்லா குழந்தைகளுக்கும் முதியோர்கள் இதுபோல்  செய்திருப்பார்கள். மூக்கில் விடாமல் நீர் ஒழுகிக் கொண்டிருந்தால் அல்லது சளி இருந்தால் இதுபோல் ஒரு முறை போட காலையில் இயல்பாக எழுந்திருக்க முடியும். அதுபோல தொண்டையில் கரகரப்பு ஏற்படும்போது பாலில் கொஞ்சம் மஞ்சள் பொடியைப் போட்டு சிறிது மிளகும் சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் தொண்டைப் புண், தொண்டை எரிச்சல் ஆகியவை எல்லாம் மற்றும் போகும்.

இனிப்புக்காக பனங்கற்கண்டு சேர்ப்பார்கள். இது நாம் மரபு வழியாக பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு வழக்கம். மஞ்சள் புண்களை ஆற்றுவதுடன், அந்தப் புண்ணை கிருமிகள் மேலும் தொற்றாமலும் பாதுகாக்கும். இந்த விஷயத்தைத் தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றி வந்தார்கள். புண்களின் மேல் மஞ்சள் பொடி தூவுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நம் பாரம்பரியத்தில் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மஞ்சள் இன்றைக்கு ஆராய்ச்சிகள் மூலமாக மிகச்சிறந்த மருந்துப் பொருளாக மட்டுமல்லாமல் அழகு சாதனப் பொருளாகவும் கருதப்படுகிறது. ஆன்மிகத்தில் மஞ்சளின் முக்கியத்துவமும் பிரசித்தி பெற்றது. வைணவக் கோயில்களில் திருமஞ்சனம் என்று நீராடல் நிகழ்ச்சி சொல்வார்கள்.

இறைவனை நீராட்டுவதற்குத் தேன், பால், மோர், நெய் எனப் பல்வேறு திரவியங்கள் பயன்படுத்தினாலும் கூட சிறப்பாகச் சொல்லப்படுவது மஞ்சள் என்பதனால்தான் அதனை திருமஞ்சனம் என்று அழைப்பார்கள். அதுபோல் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி நிகழ்ச்சி என்று ஒன்றை கொண்டாடுவார்கள். இது சமயம் சார்ந்து இல்லாமல் சமுதாய நிகழ்ச்சியாக முளைப்பாரி எடுத்தல் என்பதனை எல்லா இனத்தவரும் மேற்கொள்வார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும்போது மஞ்சள் நீர் தெளிப்பது என்பது ஒரு வழக்கமாக இருக்கிறது. இது எந்த மாதத்தில் செய்வார் என்று பார்த்தோமேயானால் ஆடி மாதத்தில்தான் செய்கிறார்கள்.

ஆடி மாதத்தில் நோய்க் கிருமிகள் காற்றின் வேகத்தில் மிக வேகமாக பரவி ஒருவருக்கு ஒருவர் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அந்நேரத்தில் இந்த மஞ்சள் நீர் தெளித்தல் என்பது முக்கியமாக இருக்கிறது. அது போல குங்குமம் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருப்பதும் கூட மஞ்சளின் தூள்தான். அந்தக் குங்குமத்தை வைத்துக் கொண்டாலே முகத்திற்கு அழகு ஏற்படுகிறது. ‘மஞ்சள் குளித்து அள்ளி முடித்து’ என்று சொல்வார்கள். ‘மஞ்சள் நிலா’ என்றும் சொல்வார்கள். இச்சொற்றொடர்கள் மூலம் இது மிகச் சிறந்த அழகு சாதனப் பொருளாவும் இருக்கிறது என்பதை நாம் உணரலாம். தமிழ் கலாச்சாரத்தில் பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக நடத்துகிற நிகழ்ச்சியைக் கூட மஞ்சள் நீராட்டு விழா என்றுதான் சொல்வார்கள்.

முறைமாமன் அந்தப் பெண்ணுக்கு மஞ்சள் தண்ணீர் தெளிப்பது என்பதும், கோயில் விழாக்களில் உறவுமுறை சார்ந்தவர்கள் மட்டுமே ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் தெளிப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இது பொதுமக்கள் பலரும் கூடுகிற போது நோய் தொற்று எளிதாக வந்துவிடும் என்ற காரணத்தினால் அதை தவிர்ப்பதற்காக மஞ்சள் தெளிப்பது நடைபெறுகிறது. இன்றைக்கு மஞ்சளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால்தான் இந்திய மஞ்சளுக்கு அமெரிக்காவில் வந்து காப்புரிமை பெறுகிற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புண்களை ஆற்றுகிற தன்மைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மஞ்சள் நிறமூட்டுவதற்கும் சுவை ஊட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், இன்றைக்கு மருத்துவத்தில் மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் அதில் இருக்கிற வேதிப்பொருட்கள்தான். வேதிப்பொருட்கள் கூட்டத்தில் மிக முக்கியமான வேதிப்பொருளுடைய பல்வேறு செயல்பாடுகளை ஃபார்மாகோவிஜிலன்ஸ்(Pharmacovigilance) என்று சொல்லும் செயல்பாடுகளில் ஆராய்கிறபோது முக்கியமாக தெரிவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மையும், கிருமியைக் கொல்லும் திறனும் இருப்பதுதான்.

அடுத்ததாக ஆன்டி ஆக்ஸிடென்ட் என்று ஒரு தன்மையை சொல்வார்கள். நம்முடைய உடலில் தேவையில்லாத சில வேதிப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அந்த வேதிப்பொருட்கள் நமது உடலில் இருக்கிற ஆக்சிஜனேற்றதுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ஃப்ரீ ரேடிகல்ஸ் உருவாகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்ஸை மஞ்சள் அழிக்கிறது. உடலில் வலி, வீக்கம், புற்றுநோய்க் கிருமிகள், தொற்று நோய்க் கிருமிகள் போன்றவை பெருகுவதை இந்த ஆக்சிஜனேற்றம் மூலமாக மஞ்சள் தடுக்கிறது. இதன் காரணமாக இன்றைக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழி முறை என்று பார்க்கிறபோது முக்கியமானதாக இருப்பதாக மஞ்சளை உலக நாடுகள் கொண்டாடுகின்றன.

முன்பெல்லாம் நரம்புகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வளர்வதில்லை என்ற ஒரு சிந்தனை இருந்தது. அதனால் முதியோர்கள், முதுமை காலத்தில் நினைவாற்றல் தப்புவது என்பதும், நரம்புகளின் செயல்பாடுகள் குறைவது என்பதும் தவிர்க்க முடியாதது என்றே கருதினார்கள். ஆனால், இன்றைக்கு மேற்கொள்ளப்படும் நவீன ஆய்வுகளின் மூலமாக நியூரோடிராபிக்(Neurotrophic) என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது மூளையில் இருக்கிற நரம்பு வளர்ச்சியை மஞ்சள் அதிகப்படுத்துவதாக அறிந்துள்ளனர்.

இந்த வேலையை மஞ்சளில் இருக்கும் குர்குமின்(Curcumin) செய்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் நாள்பட்ட வீக்கம், புற்றுநோய் ஆகியவை இன்டர்லுகின்(Interleukin) என்று சொல்லப்படுகிற ஒரு வேதிப்பொருள் காரணமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்டர்லுகின் அளவுகளைச் சீர்படுத்தும் தன்மை மஞ்சளில் இருக்கிற காரணத்தினால்தான் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவற்றைத் தடுப்பதற்கும் மஞ்சள் பயன்படுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. புற்றுநோயில் உள்ளே இருக்கிற புற்றுநோய் கட்டிகள் வளர்கிறபோது அதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது இரண்டு விஷயங்கள்.

1 சர்க்கரைச்சத்து அதிகமாகும்போது புற்றுநோய் வேகமாகப் பரவும்.
2. புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வதற்கு மற்றொரு காரணமாக இருப்பது சிறிய சிறிய ரத்தக் குழாய்களின் வளர்ச்சி.  

இதை ஜெனிசிஸ்(Genesis) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். புதிதாக ரத்தக்குழாய்களில் புற்றுநோய் கட்டிகளில் வராமல் தடுத்தால்தான் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். இந்த புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாடுகளையும் மஞ்சள் செய்கிறது என்பது இன்றைக்கு நிரூபணம் ஆகி இருக்கிறது.

- விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்