SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன அழுத்தம் போக்கும் Flotation Therapy

2019-10-08@ 10:37:43

நன்றி குங்குமம் டாக்டர்

மன அழுத்தத்தைப் போக்க, நாளொரு வண்ணம் புதுப்புது சிகிச்சைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில், புதிதாக வந்துள்ளது மிதக்கும் சிகிச்சை(Flotation therapy). புதுமையான குளியல் மூலம் உங்கள் மன அழுத்தத்தை காற்றில் மிதக்கச் செய்கிறது இந்த சிகிச்சை. எல்லோரும் மன அழுத்தத்துக்கு நிவாரணம் தேடிக் கொண்டிருக்கும் காலம் என்பதால் மிதக்கும் சிகிச்சை வெகு சீக்கிரத்தில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம் நாட்டிலும், டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகர வாழ் மக்கள் மனநலனுக்காகவும், சருமப்பாதுகாப்புக்காகவும் ஒரு சடங்காகவே இந்த சிகிச்சையைப் பின்பற்றுகிறார்கள். சென்னையிலும்தான்! அப்படி என்ன மிதவை சிகிச்சையில் சிறப்பு என்பதைத் தெரிந்துகொள்வோம்...

Flotation therapy என்பது என்ன?

மிதவை சிகிச்சையை,  தூண்டுதலின் விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அமெரிக்க மருத்துவரும், நரம்பியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஜான் லில்லி 1950-களில் கண்டுபிடித்தார். மனிதனின் ஐம்புலன்களைக் குறைக்கக்கூடிய ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதே அவரது யோசனையாக இருந்தது. அதன்படி, ஒரு நிசப்தமான இருட்டறையில், சரும வெப்பநிலைக்கு(34-35oC) ஈடான சுடுநீரில் மிதப்பதன் மூலம் அதை ஓரளவு அடைய முடியும்’ என்பதை உணர்ந்தார்.

மிதவை சிகிச்சை அறை எப்படி இருக்கும்?

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சுமார் 800 கிலோ எடையுள்ள எப்சம் உப்புகள் அல்லது மெக்னீசியம் சல்ஃபேட் அல்லது கடல் உப்பு என விருப்பத்திற்கேற்றவாறு ஏதோ ஒன்றை நிரப்ப வேண்டும். இது தண்ணீரை அடர்த்தியாகவும் மிதமாகவும் ஆக்குகிறது. வெளிச்சம்  மற்றும் சத்தம் துளியும் இல்லாத (Sound and Light Proof) அறையில் இந்த தொட்டியை வைப்பார்கள்.  

இப்போது சருமம் தாங்கக்கூடிய வெப்ப நிலையில் நீரை நிரப்புவார்கள். அந்த நீர் எந்த ஒரு நறுமணமோ, சுவையோ அற்றதாக இருக்க வேண்டும். ஈரப்பதம் நிறைந்த மிதமான காற்று அந்த அறையில் வீசும். இந்த அறை சூழலில் காதில் இயர் ப்ளக் அணிந்து கொண்டு, அந்தத் தொட்டியில் படுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குப்பிடித்த இசை மற்றும் மெல்லிய விளக்கின ஒளியை பரப்ப விட்டும் படுத்துக் கொள்ளலாம்.

உடலில் எப்படி வேலை செய்கிறது?

இப்படி உப்பு நீரில் படுக்கும்போது, லாக்டிக் அமிலத்தை விரைவாக வெளியிட உடலுக்கு உதவுவதால், மூட்டு இணைப்பு தசைகளில் உள்ள புண் மற்றும் சோர்வை நீக்குகிறது. இது வலி நிவாரணத்திற்கும் உதவுகிறது. எப்சம் உப்புகள் தோல், உச்சந்தலை மற்றும் கூந்தலின் இறுக்கத்தைக் குறைத்து தளர்வடையச் செய்கின்றன. தண்ணீரில் உள்ள மெக்னீசியம் சல்பேட் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, தூக்கத்தின் தரத்தையும், சருமத்தின் பளபளப்பையும் மேம்படுத்துகிறது.

‘உப்பு நீரில் மிதப்பது மூளைப்பகுதியின் கார்டிசோல் அளவுகளில் செயல்பட்டு, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கிறது. சோரியாசிஸ், முகப்பரு மற்றும் எக்ஸிமா போன்ற சரும பாதிப்புகளை நீக்குகிறது. மேலும், ஜெட் லேக், ஹேங் ஓவர் அறிகுறிகளைத் தணிக்கிறது. மற்றும் உடலின் நீரேற்றத்தை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இந்த சிகிச்சை மூளையில் தீட்டா அலைகளைத் தூண்டி, மனதை  தியான நிலைக்கு கொண்டு செல்லலாம்’ என்கிறார் இந்தியாவிற்கு மிதவை சிகிச்சையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஆரோக்கிய நிபுணரான சிரங்லிலாரமணி.

‘மிதவை சிகிச்சை என்பது ஒரே நேரத்தில் மன அழுத்தத்தை போக்கவும், தசை வலியை நிர்வகிக்கவும், உடலை தளர்வடையச் செய்யவும், தியானிக்கவும், படைப்பாற்றலை அதிகரிக்கவும் மிகவும் தனித்துவமான மற்றும் இயற்கையான வழிகளில் ஒன்றாகும்’ என்று லாரேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரெய்ன் ஆராய்ச்சி நிறுவனம் (LIBR) மற்றும் அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநில பல்கலைக்கழக ஆய்வுகள் புகழ்கின்றது. மிதக்கும் சிகிச்சை மூலம் தூக்கமின்மை, Fibromyaligia எனப்படும் தசைக்கூட்டு குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், பதற்றம் மற்றும் தசை மீட்பு போன்ற அறிகுறிகளைக் கையாள்வதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிதவை சிகிச்சை எத்தனை முறை, எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம்?

வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை என்ற இடைவெளிகளில், ஒரு மணிநேர மிதவை சிகிச்சை போதுமானது. மேலும், சிகிச்சை நேரத்தில், கழுத்து, தோள்களை தளர்வாக வைத்துக் கொண்டு, மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். மூச்சை வெளிவிடும் நேரம் உள்ளிழுக்கும் நேரத்தைவிட இருமடங்காக இருக்க வேண்டும். இந்த சுவாச நுட்பத்தை மேற்கொள்வது சிகிச்சையின் முழுபலனையும் பெற உதவும்.

மிதவை சிகிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

முதல் மூன்று மாதங்களுக்குள் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்கள், குறை ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சமீபத்தில டாட்டூ குத்திக் கொண்டவர்கள், கூந்தலுக்கு சமீபத்தில் செயற்கை நிறம் பூசிக்கொண்டவர்கள், வெட்டுக்காயம், தீப்புண் உள்ளவர்கள், தொற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது.

சிகிச்சையின் போது கடைபிடிக்க வேண்டியவை...

சிகிச்சையின் மூலம் நீங்கள் பெற வேண்டியது என்ன? தியானம், அழகு, சருமநலன், தூக்கமின்மை அல்லது  மூட்டு, தசை வலி இப்படி எதற்காக மிதவை சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப்பற்றி முதலில் தெளிவாக முடிவெடுங்கள். சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன் காபி, மது அருந்துவது, புகை பிடிப்பது கூடாது. வயிறு நிரம்ப சாப்பிடாமல் அதே நேரத்தில் வெறும் வயிறாகவும் இல்லாமல் மிதமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம். மயக்கம் தரக்கூடிய மருந்துகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது. கண், காது, மூக்கில் நீர் புகாமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கான்டாக்ட் லென்ஸை நீக்கி விடவும்!

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்