SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொப்பையை அலட்சியப்படுத்தலாமா?!

2019-09-05@ 10:16:40

நன்றி குங்குமம் டாக்டர்

உங்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தினந்தோறும் வளர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஒரு நாள் உங்களையே பயமுறுத்த வைக்கிற விஷயம் தொப்பை. நீங்கள் நினைத்திருந்தால் தொப்பை உருவாகத் தொடங்கிய முதல் நாளிலேயே அதைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.

கூடுதலாகச் சாப்பிடும் அரை பிளேட் பிரியாணி, உண்ட மயக்கத்தில் உடனே பல மணி நேர உறக்கம், நமக்கு என்ன தொப்பையா இருக்கிறது என்ற அலட்சியத்தில் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது, நாவை அடக்க முடியாமல் எந்நேரமும் இனிப்புகளையும், நொறுக்குத் தீனிகளையும் உள்ளே தள்ளுவது.... என தொப்பைக்கு தீனி போட்டு வளர்த்த விஷயங்கள் இப்படி நிறைய இருக்கும்.

ஆசை ஆசையாக வாங்கிய ஸ்லிம்ஃபிட் சட்டையின் பட்டனை பொருத்த முடியாமல் போகும்போதோ, ஏதாவது விசேஷமா என எதிர்படுகிற யாராவது கேட்கும்போதோ தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தமக்கு தொப்பை வந்திருக்கிற விஷயமே தெரியவரும். வந்தபின் அதை விரட்டப் போராடுவதை விடவும், வருவதற்கு முன் தவிர்ப்பது சுலபம். தொப்பையைத் தவிர்க்கும் வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்...

இனிப்பைத் தவிருங்கள்

இதுதான் உங்களுக்கான முதல் சவால். காலையில் குடிக்கிற காஃபி அல்லது டீயில் வழக்கமாகச் சேர்த்துக் கொள்ளும் அளவில் சர்க்கரையைப் பாதியாகக் குறையுங்கள். யார் வீட்டுக்குச் சென்றாலும் இனிப்பு வாங்கிச் செல்வதைத் தவிருங்கள். உங்களுக்கு யாராவது இனிப்பு வாங்கி வந்தாலும் வேண்டாம் எனச் சொல்லுங்கள்.

அலுவலகத்திலோ, அக்கம் பக்கத்திலோ பிறந்தநாள் கேக், திருமணநாள் ஸ்வீட் எனக் கொடுக்கும்போது மனக்கட்டுப்பாட்டுடன் ‘நான் இனிப்பு சாப்பிடுவது இல்லை’ என அதை மறுத்து விடுங்கள். அதிகப்படியான இனிப்பானது கல்லீரலில் ஃப்ரக்டோஸாகச் சேர்ந்து பிறகு கொழுப்பாக மாறும். இது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்சனைக்கும், வளர்சிதை மாற்றக் குறைபாடுகளுக்கும் காரணமாகிவிடும். மறைமுகமாக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள் அருந்துவதையும் தவிருங்கள்.

புரதத்தில் கவனம்

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உண்பதில் கவனம் செலுத்த வேண்டும். புரத உணவுகளில் உள்ள கலோரிகள் பெரும்பாலும் செரிமானம் ஆகிவிடும். புரதம் நிறைந்த உணவுகளை பசி உணர்வு கட்டுப்படும். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். உணவுகளின் மீதான தேடல் குறையும். தொப்பை வருவதும் தவிர்க்கப்படும்.

கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்தவும்
வயிற்றுச் சதைகள் குறைய கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 50 கிராம் அளவுக்கு மேல் கார்போஹைட்ரேட் தேவையில்லை. கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது உடலில் ஊளைச் சதைகள் சேர்வது தவிர்க்கப்படும்.

பட்டினி இருக்காதீர்கள்

தொப்பையைக் குறைக்க பட்டினி இருப்பது ஒருபோதும் தீர்வாகாது. குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஒவ்வொரு வேளை உணவிலும் போதுமான அளவு நார்ச்சத்து இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். தட்டையான வயிறு வேண்டும் என்போர் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிது சிறிதாகச் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இது உங்களை அறியாமல் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கும். உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். உணவுத் தேடல் குறையும். உடல் பருமன் தவிர்க்கப்படும்.

கலோரிகளைக் கணக்கிடுங்கள்

காலையிலிருந்து இரவு வரை நீங்கள் உட்கொள்ளும் அத்தனை உணவுகளின் கலோரிகளையும் கணக்கிடுங்கள். மருத்துவர் அல்லது டயட்டீஷியன் உதவியுடன் கலோரிகளைக் கணக்கிடுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளின் கலோரிகளுக்கு ஏற்ப உடல் உழைப்பு இருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அதாவது உணவின் மூலம் சேரும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு உடல் இயக்கம் இருக்கிறதா என்பது முக்கியம். கலோரிகளின் அளவு அதிகமாக இருந்து உடலியக்கம் குறைவாக இருந்தாலும் அல்லது அறவே இல்லாமல் இருந்தாலும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தொப்பையில் சதை போட இது மிக முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.

உடற்பயிற்சிகள் முக்கியம்

கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிடுவது, அளவாகச் சாப்பிடுவது, ஆரோக்கியமாகச் சாப்பிடுவது... இவை மட்டுமே உடல் பருமனிலிருந்து உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. உடல் சரியான அளவில் இருக்க உடற்பயிற்சி மிக முக்கியம். உங்கள் வயது, வாழ்க்கைமுறை, உடல்நல பிரச்னைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உடற்பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் போன்றவை எடை குறைக்க உதவும் என்றாலும் வயிறு, தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் சதை சேராமல் இருக்க வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகள் மிக முக்கியம். உடற்பயிற்சி ஆலோசகரிடம் கலந்தாலோசித்து வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.

அனுபவமற்ற யாரோ சொல்வதைக் கேட்டும், இணையதள வீடியோக்களைப்  பார்த்தும் இந்தப் பயிற்சிகளை நீங்களாக சுயமாக முயற்சிக்க வேண்டாம். முறையான ஆலோசனை இன்றி தவறாகச் செய்யப்படும் உடற்பயிற்சிகள் எலும்பு மற்றும் மூட்டுக்களைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். தசைப்பிடிப்பு மற்றும் உடல் வலி போன்றவையும் ஏற்படலாம். ‘தலைவலி போய் திருகுவலி வந்தது’ என்ற பழமொழிக்கேற்ப தொப்பையைக் குறைக்க நினைத்து தொல்லைகளை வரவழைத்துக் கொள்ளாதீர்கள்.

- ராஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்