SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்கின் டொனேஷன்!

2019-09-04@ 16:47:56

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் உறுப்புகள் தானம் பற்றி கேட்டிருப்போம். ஆனால் தோல் தானம் நமக்கு கொஞ்சம் புதுசுதான். உடல் உறுப்பு தானத்தைவிட தோல் தானம் சாதாரணமான சிகிச்சைதான் என்கிறார், சமூக ஆர்வலர் லஷ்மி அகர்வால். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு, ஆசிட் உபயோகத்திற்கு எதிராக போராடி, ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படும் பெண்களின் குரலாய் இருப்பவர் லஷ்மி அகர்வால். இவர் வாழ்க்கையைச் சொல்லும் படத்தில்தான், பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார். இவரின் ‘சப்பாக்’ திரைப்படம் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

சமீபத்தில், இவர் தில்லியில் தோல் தானம் பற்றிய விழிப்புணர்வை தொடங்கி, அதற்கு இந்தியா முழுவதிலும் தொடர் ஆதரவுகளை திரட்டி வருகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தோல் தானத்திற்காக நடந்த முதல் விழிப்புணர்வு பேரணி இதுதான். தோல் தானம் இந்தியாவில்  பல ஆண்டுகாலமாக இருக்கிறது. முக்கியமாக குஜராத்தில். இது மற்ற உறுப்புகளின் தானத்தைவிட எளிதானது. இதற்கு வயது, பால், ரத்தம் என எந்த பொருத்தமும் தேவையில்லை.

தோல் நம்மை குளிர், வெப்பம், பாக்டீரியா, சூரிய கதிர் வீச்சிலிருந்து காக்கிறது. தோல் இயற்கையாகவே குணமாகும் சக்தி கொண்டது. ஆனால், தீ காயம் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்ற காயங்கள் போல் இயற்கையாக குணமாகாது. இவர்களுக்கு உறுப்புகளுடன் சேர்ந்து தோலும் சிதைந்திருக்கும். தோல் இல்லாமல், நம் உடல் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குணமாகாது. தோல் முற்றிலுமாக சிதைந்தவர்களுக்கு, தோல் உற்பத்தியாகாது என்பதால், பாக்டீரியா தாக்கி உடல் உறுப்புகள் மேலும் பாதிப்படையும் அபாயம் இருக்கிறது.

ஸ்கின் டொனேஷன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முப்பது ஆண்டுகளாக பிளாஸ்டிக் சர்ஜரியில் அனுபவமுள்ள, டாக்டர் நாராயண மூர்த்தியிடம் பேசிய போது, ‘‘தோல் தானம் பற்றி நம் மக்களிடம் விழிப்புணர்வே இல்லை. உறுப்புகள் தானம் செய்வதே குறைவு. அதிலும் தோல் தானம் யாருமே செய்ய முன்வருவதில்லை” என்று தன் ஆதங்கத்தை முன் வைத்துப் பேசத் தொடங்கினார்.

தோல் தானம் ஏன் செய்ய வேண்டும்?

கடுமையான தீக்காயங்கள், ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என ஏராளமான மக்களுக்கு உடனடி தோல் மாற்று சிகிச்சை செய்வதின் மூலம் அவர்கள் உயிரையே காப்பாற்ற முடியும். தீ காயம் ஏற்பட்டதும், அவர்கள் உடலை உடனே தோலால் மூடாமல் விட்டால் , தொடர்ந்து ரத்தம் வெளியேறி நீரிழிவு ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலை ஏற்படும். இந்த தானம் மூலம் தோல் சிதைந்தவர்களின் காயங்கள் சீக்கிரமாக குணமாகி, தோல் மறு உற்பத்தி ஆகும் வரை உதவியாயிருந்து உடலைப் பாதுகாக்கும்.

யாரெல்லாம் தோல் தானம் செய்யலாம்?

கண் தானம் செய்பவர்கள் அனைவருமே தோல் தானமும் செய்யலாம். அவர்கள் 18 வயதை கடந்திருக்க வேண்டும். தோல் தானம் செய்ய எந்த பொருத்தமும் தேவையில்லை. அதனால்தான் மற்ற தானங்களைவிட தோல் தானம் மிக எளிதான செயல்முறை. சரும தொற்று வியாதி இல்லாதவர்கள் அனைவருமே தோல் தானம் செய்யலாம்.

பால்வினை நோய்கள், தோல் புற்றுநோய், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, மஞ்சள் காமாலை, காசநோய் போன்ற நோய் இருப்பவர்கள் தோல் தானம் செய்ய இயலாது. ஆனால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உடையவர்களும், பச்சை குத்தி கொண்டவர்களும் கூட தோல் தானம் செய்யலாம்.

தோல் தானத்தின் செயல்முறைகள் என்ன?

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்தில், இறந்தவரோ அல்லது அவர் நெருங்கிய உறவினரோ தோல் தானம் செய்ய சம்மதம் தெரிவித்ததும், மருத்துவ குழு உடனடியா செயல்பட்டு இறந்தவரின் உடலை சுத்தம் செய்து தோலின் ஒரு பகுதியை மட்டும் எடுப்பார்கள். பெரும்பாலும், தொடைப் பகுதி, கால்கள், தோள்பட்டை போன்ற மறைந்த இடங்களிலிருந்துதான் தோல் எடுக்கப்படும். இதனால் ரத்தக் கசிவோ, உருவச் சிதைவோ ஏற்படாது.
உடனடியாக மற்றவருக்கு பொருத்தப்படும்பட்சத்தில் ஆறு மணி நேரம் வரை குளிர்சாதனத்தில் கூட பத்திரப்படுத்தி வைக்கலாம்.

அவசர தேவை இல்லாத போது, அதற்கென பிரத்யேகமான ஸ்கின் பேங்க் எனப்படும் சேமிப்பு இடத்தில் ஐந்து ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம். இதுதான் தோல் தானத்தின் சிறப்பும் கூட. இது வெறும் அரை மணி நேரத்திலிருந்து, 45 நிமிடங்களுக்குள் செய்து முடிக்க முடியும். இதற்காக இறந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது இல்லை. தானம் செய்யப்பட்ட தோலை, வேறு நகரங்களுக்கும் இடமாற்றம்
செய்யலாம். செய்வதும் சுலபம்தான்.
 
தீ காயங்களில் பாதிக்கப்படுபவர்களில் 80% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில், 7 மில்லியன் மக்கள் தீ காயங்களில் பாதிக்கப்படுகின்றனர். தோல் சிதைவதால், காயங்கள் ஆறாமல், உடல் உறுப்புகளில் பாக்டீரியா தாக்கி உயிர் இழக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் உடனடியாக புதிய தோல் பொருத்துவதின் மூலம் அவர்களின் உயிரையே காப்பாற்ற முடியும்’’ என்றார் டாக்டர் நாராயண மூர்த்தி.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்