SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சுறுத்தும் ஆர்த்தரைட்டீஸ்... தீர்வு என்ன?!

2019-08-29@ 10:14:05

நன்றி குங்குமம் டாக்டர்

கன்சல்டிங்

சமீபகாலமாக மருத்துவ உலகுக்கு சவால்விடும் வகையில் மூட்டுத் தேய்மானம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நடுத்தர வயதினர் மற்றும் முதுமைப்  பருவத்தினர் மட்டுமின்றி இளம் வயதினரும் மூட்டுத் தேய்மானத்துக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. ஆர்த்தரைட்டிஸ் வருவதற்கான காரணம், அறிகுறிகள், அதன் வகைகள் பற்றிய நம் சந்தேகங்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆறுமுகம் பதிலளிக்கிறார்.

ஆர்த்தரைட்டீஸால் இன்று ஏராளமானோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதுமைப் பருவத்தினர், உடற்பயிற்சி செய்யும் வழக்கம் இல்லாதவர்கள்  ஆகியோர் பெருமளவில் இவ்வகை மூட்டு எரிச்சலின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். நம்மில் நிறையப் பேருக்கு டயாபட்டீஸ், எச்.ஐ.வி தொற்று போன்றவை பற்றி  நன்றாக தெரியும். ஆனால், மூட்டுத் தேய்மானம் பற்றிய விழிப்புணர்வு சற்று குறைவு. டயாபட்டீஸ், எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களைவிட மிக  அதிகமானோர் ஆர்த்தரைட்டீஸால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மூட்டு எரிச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. முக்கியமாக, ஆர்த்தரைட்டீஸ் ஏன் வருகிறது?  எதனால் வருகிறது? இதை எப்படி தவிர்க்கலாம்? போன்றவற்றிற்கான வழிமுறைகளைப் பொது மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். மேலும் டாக்டர்கள்  சொல்கிற அறிவுரைகளைத் தவறாமல் அவர்கள் பின்பற்றி வந்தால், மூட்டு தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மேலும் மோசம் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.  இன்றைய நிலையில் பொதுமக்களுக்கு இதுதான் அவசிய தேவையாக உள்ளது.    

ஆர்த்தரைட்டீஸினால் வரும் மூட்டுத் தேய்மானம்...

நமது உடல் உறுப்புக்களில், முழங்கால் மூட்டுதான் அதிக அளவில் தேய்மானம் அடைகிறது. ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஆரம்ப  காலகட்டத்தில் மூட்டில் சிறிது வலி மட்டும் காணப்படும். நடந்து போகும்போது, ஒருவருடைய கால்கள் நேராக இல்லாமல், வளைந்து காணப்படுவது  ஆர்த்தரைட்டீஸின் முற்றிய நிலையாகும். ஆரம்ப காலக்கட்டத்தில், அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொல்கிற அறிவுரைகளை முறையாகப்  பின்பற்றி, வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால், அவர்களுக்கு மூட்டு தேய்மானம் அதிகம் ஆகாமல் இருக்கலாம்.

படிக்கட்டில் ஏறும்போதும், தரையில் உட்கார்ந்து எழும்போதும் மூட்டில் வலி உண்டாவதை ஆர்த்தரைட்டீஸ் என சொல்வோம். இந்த நிலையில், வாழ்க்கை  முறையைச் சற்று மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையும், படிக்கட்டில் ஏறுவதையும் தவிர்க்க வேண்டும். இதனுடன்  சமமான தரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நடக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு பயன் கிடைக்கும். அவ்வாறு  செய்வதால், மூட்டைச் சுற்றியுள்ள தசை வலுப்பெறும். இதன் காரணமாக மூட்டு வலி கொஞ்சம்கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

மேலும், ஸ்டேஜ் ஒன் ஆர்த்தரைட்டீஸிலிருந்து, ஸ்டேஜ் 2 ஆர்த்தரைட்டீஸ்க்குப் போவது தடுக்கப்படும். இதைச் செய்வதற்கு, வாழ்க்கை முறை மாற்றங்களே  போதுமானது. இன்றைய சூழலில், எல்லோரும் அவசரகதியில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். யாருமே, பொறுமையாக உட்கார்ந்தோ, நடந்தோ  வேலைகளைச் செய்வது கிடையாது. வீட்டைவிட்டு வெளியே இறங்கினால் காரிலோ, டூ வீலரிலோதான் பயணிக்கிறோம். நடத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல்  சுத்தமாக கிடையாது. இது மாதிரியான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் எல்லாம் பலம் அடையும்.

மூட்டு தேய்மானம் சீக்கிரம் வராது. இன்று பெரும்பாலான பெண்கள் சமையல், வீட்டு வேலைகள் செய்கிறபோது ஒரு நாளைக்குச் சுமார் 100 தடவையாவது  உட்கார்ந்து எழுந்திருக்கின்றனர். இது ஒருவகையில் உடலுக்கான பயிற்சியாக இருந்தாலும் மூட்டுப்பகுதி பலவீனமாகும். எனவே, பெண்கள் ஒருமணி நேரம்  நடைப்பயிற்சி செய்து வந்தால் காலின் தசைப்பகுதி வலுவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு வலியோ, தேய்மானமோ வராது. எனவே, இன்றைய வாழ்க்கை  முறை சூழலில், உடற்பயிற்சி செய்தல் என்பது அவசியமான ஒன்றாக திகழ்கிறது.

எது சிறந்த உடற்பயிற்சி?

உடற்பயிற்சியில் சைக்கிளிங் ரொம்பவும் நல்லது. ஏனென்றால், உட்கார்ந்த நிலையில் சைக்கிளிங் பண்ணுவதால், நமது உடல் எடை மூட்டுப்பகுதிக்கு வராது.  இதனால், மூட்டைச்சுற்றியுள்ள தசைப்பகுதிகள் எல்லாம் வலுவானதாக ஆகும். ஆனால், எடுத்த உடனே ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் சைக்கிளிங்  செய்தால் மூட்டு வலி வந்துவிடும். ஏனென்றால், நம்முடைய தசைப்பகுதி அவ்வளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் ஆரம்ப நிலையில் 10 அல்லது 15  நிமிடம் சைக்ளிங் பண்ணலாம். தசை வலுவாக ஆன பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக சைக்கிளிங் பண்ணும் நேரத்தை அதிகரிக்கலாம்.

இதன் காரணமாக ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புக்குள்ளாவது தள்ளிப்போகும். மூட்டு பிரச்னையை சரி செய்வதில் நீச்சல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நீருக்குள்  உடற்பயிற்சி செய்வதால், மூட்டுப்பகுதிக்கு அதிர்வு நேராது. ஓடும்போது, கால்களில் ஒருவித அதிர்வு இருக்கும். எனவே, ஆர்த்தரைட்டீஸ் வராமல் தடுப்பதற்கு  சைக்கிளிங் மற்றும் ஸ்விம்மிங் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். சைக்கிளிங் பண்ண ஆரம்பித்தால் மூட்டு இன்னும் பலம் பெறும். இவையெல்லாமே ஸ்டேஜ்-1  ஆர்த்தரைட்டிஸுக்கான வழிமுறைகள்.

ஸ்டேஜ் - 2 ஆர்த்தரைட்டிஸ்...

ஸ்டேஜ்-2-வில் மூட்டு கொஞ்சம் பலவீனமாகும். கொஞ்ச நேரம் நடந்தாலே வலி வர ஆரம்பித்து விடும். காலையில் எழுந்து 10 நிமிடம் நடந்தாலே வலி  வந்துவிடும். காலை நேரத்தில் நம்முடைய மூட்டுகள் எல்லாம் இறுக்கமாக  காணப்படும். சாதாரணமாக நீட்டி, மடக்க முடியாது. அதாவது, Flexible-ளாக  இருக்காது. இதனை மார்னிங் ஸ்டிஃப்னஸ் என்று சொல்வோம். முக்கியமாக ஸ்டேஜ்-2 வில் படிக்கட்டு ஏறும்போது வலி இருக்கும்.

ஏனென்றால், மூட்டை மடக்கி ஸ்டெப்ஸ் ஏறும்போது, உடல் வெயிட்டில் 3 மடங்கு பிரஷர் வரும். உதாரணமாக, ஒருவர் 60 கிலோ எடை கொண்டு இருந்தால்,  மாடிப்படி ஏறும்போது, 180 கிலோ அளவிற்கு மூட்டில் பிரஷர் உண்டாகும். அதனால்தான், அந்த ஸ்டேஜில் வலி உண்டாகிறது. அதேநேரம் நாம் சாதாரணமாக  நடக்கும்போது, அவ்வளவு பிரஷர் வராது. வலி அதிகமாக அதிகமாக, படிக்கட்டில் ஏறி இறங்குவது, தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பது ரொம்ப கஷ்டமாக  இருக்கும். நீண்ட தூரம் நடக்க முடியாது.

பரிசோதனைகள்... சிகிச்சைகள்....

ஆர்த்தரைட்டீஸால் பாதிக்கப்பட்டவர்களை வெறும் எக்ஸ்-ரே எடுத்தால் போதுமானது. அவர்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். MRI  ஸ்கேன் எல்லாம் எடுக்கத் தேவையில்லை. இந்த ஸ்டேஜுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் ஜாயின்ட் வைட்டமின் தரலாம். இவ்வாறு செய்வதால், நிலைமை  மோசமாகாமல் இருக்கும். மருந்து, மாத்திரைகள், ஜாயின்ட் வைட்டமின் கொடுத்தும் சரியாகவில்லை என்றால், மூட்டில் ஊசி போடலாம். இந்த ஊசி இரண்டு  வகைப்படும். ஒன்று ஸ்டீராய்டு ஊசி, மற்றொன்று Fluid Replacement ஊசி ஆகும்.

அதாவது, எலும்பும், எலும்பும் சேருகின்ற இடத்தில் வழவழப்பான திரவம் இருக்கும். அதை புதுப்பிக்கும் வகையில் இரண்டாவது வகை ஊசியைப் போடலாம்.  எலும்புகள் தேயத்தேய, இந்த திரவம் குறையும். இதனால், வழுவழுப்பான கார்டிலேஜ் மறைந்து விரிசல் உண்டாகும். எனவே, அடியில் உள்ள எலும்பு வெளியே  தெரிய ஆரம்பிக்கும். கார்டிலேஜ்ஜில் வலி தெரியாது. ஆனால், அடியில் உள்ள எலும்புகள் உராய ஆரம்பிக்கும்போதுதான் வலி தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேஜ் -2  ஆர்த்தரைட்டீஸ்ஸில் எலும்புகள் வெளியே தெரிய, எலும்புகள் தேய ஆரம்பிக்க தொடங்கும்.

வயதானவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யாமல் 3 அல்லது 6 மாதங்கள் கழித்துதான் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார்கள் என்றால் அவர்களுக்கு  ஸ்டீராய்டு ஊசி போடலாம். இளம் வயதினர் 5 அல்லது 10 வருஷத்துக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்ய நினைத்தால், அவர்களுக்கு Fluid  Replacement ஊசி போடலாம். இதனால், கார்டிலேஜ் புதுப்பிக்கப்படும். மற்றும் தேய்மானம் கட்டுப்படுத்தப்படும். வருஷத்துக்கு ஒரு தடவை இந்த ஊசி  போட்டுக்கொள்ளலாம்.

நவீன சிகிச்சை...

மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால், பேஷன்ட் ஸ்டேஜ் 3-ல் உள்ளார்கள் என தெரிந்து கொள்ளலாம். ஸ்டேஜ்-3  ஆர்த்தரைட்டீஸில் கால்கள் நேராக இல்லாமல் வளைந்து காணப்படும். இரவில் படுத்துக்கொண்டு இருக்கும்போதே வலி ஆரம்பிக்கும். படுக்கையில் இருந்து  பாத்ரூம் போவதற்குள் வலி கடுமையாக இருக்கும். ஸ்டேஜ்-3 வந்துவிட்டால், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. முதியவர்கள் உடனடியாக  அறுவை சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், ஸ்டீராய்டு ஊசி போட்டு அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம். ஆனால், அறுவை சிகிச்சை செய்யாமலே  இருக்க முடியாது.

ஆகவே, ஆர்த்தரைட்டீஸின் தொடக்க நிலையிலேயே, முறையான சிகிச்சைகளைத் தொடங்கி, அது இன்னும் மோசமாகாமல் தவிர்ப்பதுதான் நாம் முதலில்  செய்ய வேண்டிய கடமையாகும். ஆர்த்தரைட்டீஸின் பாதிப்பில் Early Stage-ல் இருப்பவர்கள், ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் யாரெல்லாம்  செண்டரி வாழ்க்கை முறையில் உள்ளார்களோ, அவர்கள் உடலுக்கு இயக்கம் அளிக்கும் அளவு செயல்பாடுகளை உண்டாக்கிக் கொள்வது நல்லது. தற்போது,  உடலை ஆரோக்கி யமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதற்காகவே, பல இடங்களில் சைக்கிளிங், வாக்கிங், ரன்னிங்  எனப் பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில், எதை உங்களால் செய்ய முடியுமோ அதைச் செய்வது நல்லது. முதியவர்கள் நடைப்பயிற்சியும், இளம் வயதினர் ஓட்டப்பயிற்சியையும்  மேற்கொள்ளலாம். உடலை யாரெல்லாம் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் மூட்டுத்தேய்மான பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.  சமீபகாலமாக ஆர்த்தோபீடிக் துறையில் Knee Replacement Surgery மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக உள்ளது. மேலும் வெற்றிகரமான அறுவை  சிகிச்சையாகவும் திகழ்கிறது. இப்போது பண்ணக்கூடிய அறுவை சிகிச்சைகளில் வலி இல்லாததும் கூட. அதனால் அறுவை சிகிச்சை செய்த பிறகும் வலி  இல்லாமல் நடக்கலாம். அதனால் பயப்படத் தேவையில்லை.

- விஜயகுமார்
படம்: ஆர். கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்