SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிது இனிது முதுமை இனிது!

2019-08-29@ 10:08:35

நன்றி குங்குமம் டாக்டர்

Senior Citizen Special

மனம்தான்  எல்லாவற்றுக்கும் கிராண்ட் மாஸ்டர். நோயை உருவாக்குவதிலும், அதனை குணப்படுத்துவதிலும் மனமே மிக முக்கியப் பங்காற்றுகிறது. இதனை  பல பெரியவர்களும்  வாய்மொழியாக கூறியிருக்கிறார்கள். நவீன ஆராய்ச்சிகளும் இந்தக் கருத்தை வழிமொழிந்திருக்கிறது. முதுமை இனிது என்று இந்த கவர்  ஸ்டோரி சொல்ல வருவதன் அடிப்படைக் கருத்து இதுதான். நாற்பதைத் தாண்டி விட்டாலே பலருக்கும் நடுக்கம் வந்துவிடுகிறது. அதுவரை வீர வசனங்கள்  பேசியவர்கள் கூட தடுமாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முதிய பருவத்தை நோய் மிகுந்ததாகவும், நோயாளியாகவே வாழ வைப்பதாகவும் இந்த நம்பிக்கை குறைவே பிரதான காரணமாக இருக்கிறது. எனவே,  முதுமையில் நம் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு நிதானமாகக் கையாண்டால் இளமைப்பருவத்தைவிட முதுமைப்பருவம் என்பது  இன்னும் இனிமையான அனுபவமாக மாறும் வாய்ப்பு உண்டு. முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும், அவற்றை முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளால் தவிர்க்கும் முறை பற்றியும் முதியோர் பராமரிப்பு இயன்முறை மருத்துவர் டேவிட் விஜயகுமார் விவரிக்கிறார்….

முதியோர்களிடத்தில் ஏற்படும் உடல்நலக்குறைவுகளை ஐந்து ‘I’ -களாகப் பிரிக்கலாம். Intellectual Impairment (அறிவுசார் குறைபாடு),  Incontinence (சிறுநீர் அடங்காமை), Infection (தொற்று நோய்கள்), Instability (சமநிலையின்மை), Immobility (அசைவற்ற நிலை). இந்த  ஐந்து ‘I’ - களுமே முதியோர்களுக்கு வரும் நோய்களுக்கு அடிப்படைக் காரணிகள். இவற்றை  முதுமையை பயமுறுத்தும் பஞ்சபூதங்கள் (Geriatric  Giants) என்றும் குறிப்பிடுகிறோம்.

இதை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து பிரச்னைகளுமே முதியோர்களுக்கு வரும் என்பதால் இந்தப் பெயர். குறிப்பிட்ட இந்த 5 சோதனையில் வெற்றி  பெற்றவர்களை முதுமையிலும் திடகாத்திரமாக இருப்பவர்களாக கொள்ளலாம். இவற்றை முன்கூட்டி கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்தாலே, முதுமையில் வரக்கூடிய பிரச்னைகளின் தீவிரத்தன்மையிலிருந்து முதியோர்களை பாதுகாக்க முடியும். இதை விரிவாகப் பார்ப்போம்…

அறிவுசார் குறைபாடு

முதியோர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னை மறதி நோய். இதைத்தவிர்க்க, புதிர்விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, சுடோகு போன்ற  விளையாட்டுகளை விளையாடலாம். அதைவிடவும் சிறந்தது டைரி எழுதும் பழக்கம். ஒருநாளின் நிகழ்வுகளை  Activity basis -ஆக இல்லாமல்,  Action basis-ஆக எழுதவேண்டும். தான் செய்யும் செயல்களை எல்லோருமே நினைவுக்கு கொண்டு வர முடியும். உதாரணத்திற்கு காலையில் எழுந்தேன்;  பல் துலக்கினேன்; குளித்தேன் என்று மேலோட்டமாக எழுதக்கூடாது. ஒருவரால் காலையிலிருந்து, இரவு வரை என்னென்ன செய்தோம் என்பதை எளிதில்  கூறிவிட முடியும்.

ஏனெனில், பெரியவர்கள் நேரம் தவறாது ஒவ்வொரு செயலையும் செய்பவர்கள் என்பதால், அது பழக்கமாகியிருக்கும். அதற்குப்பதில், காலை எழும்போது எந்த  காலை தரையில் ஊன்றி  எழுந்தேன்; எந்தப்பக்கமாக திரும்பினேன், தலை வாரினேன் - என்று ஒவ்வொரு செயலையும் நினைவுபடுத்தி, விரிவாக எழுதி வந்தால்  நினைவாற்றல் மேம்படும். 60 வயது முதற்கொண்டே இதை பழக்கப்படுத்திக் கொண்டால் முதியவர்களுக்கு வரக்கூடிய குறுகிய கால நினைவக இழப்பை  (Short term memory loss) தவிர்க்கலாம். மறதிநோய் வராமலிருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இப்பயிற்சிகளைச் செய்யலாமே தவிர,  மறதிநோய் வந்துவிட்டால் முறையான சிகிச்சை அவசியம்.

சிறுநீர் அடங்காமை

முதியவர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய பிரச்னையாக சிறுநீர் அடங்காமையைச் சொல்லலாம். பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு தசைகளில்  ஏற்படும் தளர்வாலும், ஆண்களுக்கு விதைப்பை நீக்க அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் விதைப்பை தசைத்தளர்வாலும் சிறுநீரை அடக்க  முடியாமல், தன்னிச்சையாக வெளியேறும் நிலை ஏற்படும். இந்தநிலை இவர்களுக்கு மிகவும் தர்மசங்கடத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கிவிடுகிறது.

பெண்கள் பெல்விக் ஃப்ளோர் பயிற்சிகளும் (Pelvic Floor Exercises), ஆண்கள் மற்றும் பெண்கள் Kegal உடற்பயிற்சிகளும் மேற்கொள்வதன்  மூலம் அந்தப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஒரே ஸ்ட்ரெச்சாக போகாமல் சிறிது சிறிதாக அடக்கி  வெளியேற்ற பழகிக் கொள்வதன் மூலம் சிறுநீர் அடங்காமை பிரச்னையை சமாளிக்கலாம். வெளிநாடுகளில் எலக்ட்ரோல்ஸ்களை  உறுப்புகளின் தசைகளில்  வைத்து வலுப்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நம்மூரிலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகி வருகிறது.

தொற்று நோய்கள்

பாக்டீரியல் நிமோனியா. இன்ஃப்ளூயன்சா, சருமத் தொற்று, இரைப்பை குடல் தொற்று மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்று (Urinary Tract Infection)  இந்த 5 தொற்று நோய்களும் முதியவர்களுக்கு பொதுவாக வரக்கூடியவை. வயது காரணமாக  நோயெதிர்ப்பு சக்தி குறைவதாலும், நீரிழிவு போன்ற நாட்பட்ட  நோய்களாலும் தொற்று நோய்கள் உண்டாகின்றன. இப்போது குழந்தைகளைப் போலவே முதியவர்களுக்கும் தொற்றுநோய் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 60  வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சமநிலையின்மை

முதியவர்களுக்கு உடலில் சமநிலை கிடைக்காது. அதன்காரணமாக அடிக்கடி விழுவது, கை, கால்களில் நடுக்கம் (Parkinson) தோன்ற ஆரம்பிக்கும். 60  வயது தொடங்கும் போதே சில அடிப்படை உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் சமநிலையின்மையை தவிர்க்கலாம். வெறுமனே நடைப்பயிற்சி  என்றில்லாமல், பின்புற நடை (Backward walk), பக்கவாட்டு நடை (Side walk), அடிப்பிரதட்சணம் (Tandem walk) மற்றும் ஒரு காலில்  நிற்க முயற்சி செய்வது. இவற்றை எல்லா முதியோர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

சமநிலையின்மைக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் முக்கிய காரணமாகச் சொல்லலாம். முதியவர்களுக்கு செரிமானப்  பிரச்னை இயல்பாக இருக்கும் ஒன்று.  இவர்கள் தங்களுக்கு ஏதேனும் செரிமானத்தில் பிரச்னை வந்துவிடுமோ என்று பயந்துகொண்டே நிறைய உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். இதனால்  ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே, நல்ல ஊட்டச்சத்தான உணவை எடுத்துக் கொள்வதையும், 6, 7 மணிக்கு முன்னதாக இரவு உணவை முடித்துக்  கொள்வது நல்லது.

அசைவற்ற நிலை

வயதானாலே எங்கே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அடுத்து  ஆர்த்தரைட்டிஸ், நடுக்கம் போன்றவையும் முதியவர்களை முடக்கிப் போட்டுவிடுகிறது. வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதால் மேலும் உறுப்புகளின்  இயக்கம் மோசமடையும். இப்படி இயக்கமின்மையும், சமநிலையின்மையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வீட்டிற்குள் சின்னச்சின்ன வேலைகளைச் செய்வது,  அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது என உடலுக்கு இயக்கம் கொடுக்கலாம்.

- உஷா நாராயணன்
 படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • erimalai_11

  தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

 • china_isaai1

  150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

 • german_paanddaa1

  ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்