SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரைப்பையில் வாதம் வந்தால்...

2019-08-27@ 17:20:44

நன்றி குங்குமம் டாக்டர்

அறிந்துகொள்வோம்

‘‘நாம் சாப்பிடுகிற உணவு வயிற்றில் இருந்து, சிறுகுடலுக்கு 4 மணி நேரத்தில் சென்றுவிடும். திரவ உணவுகள் என்றால், அரை மணி நேரத்தில் இருந்து 45  நிமிடங்களுக்குள் சென்றுவிடும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் உணவின் பயணம் நிகழாமல், தாமதமாவதை கேஸ்ட்ரோபெரசிஸ்(Gastroparesis) என்கிறோம்.  இந்த செரிமானப் பிரச்னை ஏற்படுவதற்கு ஒரு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான  வினோத்குமார். கேஸ்ட்ரோபெரசிஸ் விழிப்புணர்வு மாதம் என ஆகஸ்ட் மாதத்தை மருத்துவ உலகம் கடைப்பிடித்து வருகிற சூழலில்,  இதுபற்றி அவரிடம்  விரிவாகக் கேட்டோம்...

‘‘கேஸ்ட்ரோபெரசிஸை தமிழில் இரைப்பை வாதம் என்று குறிப்பிடலாம். மருத்துவத்தில் ஒரு நோய் வருவதற்கான காரணங்களில்  இடியோபத்திக்(Idiopathic) வகை என்று என ஒன்று உண்டு. அதாவது, சில பிரச்னை எதனால் வருகிறது என்பது சரியாக உறுதியாக சொல்ல முடியாது.  இதையே இடியோபதிக் என்கிறோம். உதாரணத்துக்கு நூறு பேரை எடுத்துக்கொண்டால், 20-லிருந்து 30 பேருக்கு இப்பாதிப்பு எதனால் வருகிறது என்பது தெரியாது.  எனவே, இந்த நோயைக் ‘காரணம் அறியப்படாத நோய்’ என்று சொல்வோம். இதைத் தவிர்த்துவிட்டு, இந்த நோய்க்கான மற்ற காரணங்களில் எது  முக்கியமானது? என்று பார்க்கும்போது, நம் ஊரில் சர்க்கரை நோய்தான் கேஸ்ட்ரோபெரசிஸ்-க்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ள நூறு பேரில் 30 பேருக்கு இரைப்பை வாதம் வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில், யாருக்கு இந்நோயின் தாக்கம்  அதிகமாக உள்ளது என்று பார்க்கும்போது, ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக நிறைய மருத்துவத்துறை ஆய்வுகள் மூலம் தெரிய  வருகிறது. சர்க்கரை நோயில் டைப் - 1 டயாபட்டீஸ், டைப் -2 டயாபட்டீஸ் என இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வகை டயாபட்டீஸ் இன்சுலின்  சார்ந்தது. அதாவது இளம் வயதிலேயே வரக்கூடியது. பெரும்பாலானோருக்கு நாற்பது வயதுக்கு மேலே வருவதைத்தான் டைப்-2 டயாபட்டீஸ் என சொல்வோம்.  இந்த இரண்டு வகைகளில், இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு இரைப்பை பாதிப்பு அதிகம் உள்ளது.

டைப்-2 டயாபட்டீஸ் நோயாளிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும், கேஸ்ட்ரோபெரசிசுக்கு முக்கிய காரணமாக டயாபட்டீஸ்  கருதப்படுகிறது. டயாபட்டீஸ் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். அதாவது, கடந்த ஐந்து வருடங்களில்  இரைப்பை வாதம் அறிகுறி உள்ள சர்க்கரை நோயாளிகள் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவேதான், சர்க்கரை நோயாளிகளுக்கு கேஸ்ட்ரோபெரசிஸ்  முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. சர்க்கரை நோயை அடுத்து, வைரஸ் தொற்று காரணமாக சில பேருக்கு இரைப்பை வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்  உள்ளன. ஆனால், ஒரு வருடத்துக்குள்ளேயே இந்த நோய் தானாகவே குணம் அடைந்துவிடும்.

ஏனென்றால், அனைத்து வகையான வைரஸ் தொற்றுகளும் தானாகவே சரியாகிவிடும் தன்மை கொண்டவை. முக்கியமாக, இரைப்பை வாதத்தால்  பாதிப்புக்குள்ளான தசைப்பகுதிகளும், நரம்புகளும் பழைய நிலையை அடைந்து, இந்நோய் வந்ததற்கான தடயமே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். வைரஸ்  தொற்றை அடுத்து அல்சர் போன்ற வயிறு தொடர்பான பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்குக் கேஸ்ட்ரோபெரசிஸ் வருவதைக் காண  முடிகிறது. மேலும், வேகஸ்(Vagus) நரம்பில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போதும் ஒரு சில மருந்து, மாத்திரைகள் சாப்பிடும்போதும் இப்பாதிப்பு தற்காலிகமாக  வரும். குறிப்பாக வலி, பிரஷர் ஆகியவற்றிற்கு மாத்திரைகள் எடுத்துகொள்ளும்போதும் கேஸ்ட்ரோபெரசிஸ் வரும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் இரைப்பை வாதம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளாரா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமான விஷயம். ஏனென்றால், இப்போது  சொல்லப்போகிற அறிகுறிகள் நிறைய பேருக்கு இருப்பது போல தோன்றும். சில நீரிழிவு நோயாளிகளுக்கு வாந்தி உணர்வு இருக்கும். கேஸ்ட்ரோபெரசிஸ்  நோயாளிகளில், 99% பேருக்கு இந்த அறிகுறி காணப்படும். அதேவேளையில் இந்த அறிகுறி இரைப்பை வாதத்திற்கு மட்டும் வருவது இல்லை. வயிறு  புண்ணாதல் போன்ற நோய்களுக்கும் இது அறிகுறியாகும். கேஸ்ட்ரோபெரசிஸ் நோய்க்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத இடியோபத்திக் வகையில் நிறைய பேர்  வயிற்றுவலியுடன்தான் வருவார்கள். நீரிழிவு நோயாளிகளில் நிறைய பேருக்கு வயிற்றுவலி இருக்காது.

வாந்தி உணர்வு, வயிற்று வலி, சாப்பிட்ட உடனே வயிறு பெரிதாக தோன்றுதல், சாப்பிடுவதில் விருப்பமின்மை அல்லது குறைவாக சாப்பிடுதல், காலை மற்றும்  மதியம் சாப்பிட்ட உணவு இரவில் வாந்தியாக வெளிப்படுதல் இவையெல்லாம் இரைப்பை வாதத்திற்கான முக்கிய காரணங்கள் ஆகும். இந்த அறிகுறி  உள்ளவர்கள் Over The Counter மாத்திரைகள், சிரப் வாங்கி சாப்பிடுவார்கள் அல்லது வீட்டில் தயாரித்த சுக்கு காபி குடிப்பார்கள். இவர்களுக்கு என்ன  பிரச்னை இருக்கிறது? என்பது தெரியாது. ஏனென்றால், இது ஒரு நாளோ, இரண்டு நாளோ இருக்கிற பிரச்னை இல்லை. வாழ்நாள் முழுவதும் உள்ள பிரச்னை.  உடனடியாக பார்க்காவிட்டால் இது அதிகமாகிவிடுகிற பிரச்னை என்பது அவர்களுக்குத் தெரியாது.

மேலே சொன்ன அறிகுறிகள் இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது நல்லது. கேஸ்ட்ரோபெரசிஸ் வயிற்றை அமுக்கி பார்த்தல்  ஸ்டெதாஸ்கோப் வைத்து பார்த்தாலோ(Physical Examination) பெரிதாக தெரியாது. காலை வேளையில் சாப்பிட்ட உணவு அப்படியே இருப்பதால்,  வயிறு உப்பசமாக தெரியும். இதை வைத்து மட்டும் 100 சதவீதம் இரைப்பை வாதம் என சொல்ல முடியாது. இதற்கென்று சில பரிசோதனைகள் உள்ளன. அந்தப்  பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்னர், எந்த நோயாளி வந்தாலும், எண்டோஸ்கோப்பி செய்வோம். ஏனென்றால், இரைப்பை வாதமும், குடல் அடைப்பும்  ஒரே மாதிரியாகத்தான் வெளிப்படும்.

மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், நோயாளிகளுக்கு மயக்க மருந்து இல்லாமலேயே எண்டோஸ்கோப்பி செய்ய முடியும். இதற்கான  நேரமும் குறைந்து விட்டது. தற்போது, ஒன்றரை நிமிடம் முதல் இரண்டு நிமிடத்துக்குள் எண்டோஸ்கோப்பி செய்து விடுகிறோம். பொதுவாக சாப்பிட்ட ஆறு  மணிநேரம் கழித்துதான் எண்டோஸ்கோப்பி செய்வோம். அப்போது வயிற்றின் உள்ளே உணவு இருப்பது தெரிந்தால் ஏதோ ஒரு அடைப்போ அல்லது ஏதோ ஒரு  பிரச்னை இருப்பது தெரியும். ஆனால், என்ன பிரச்னை என்பது தெரியாது. ஆகவே, எண்டோஸ்கோப்பி சிறுகுடல் இரண்டாவது பகுதி வரை மட்டுமே செல்லும்.  இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டால் சிறுகுடல் மூன்றாவது பகுதி வரை நார்மல் எண்டோஸ்கோப்பி போகும்.

அவ்வாறு எண்டோஸ்கோப்பி செல்லும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் அடைப்பு எதுவும் இல்லையென்றால், முதலில்  கேஸ்ட்ரோபெரசிஸ்ஸாகத்தான் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனையில் கட்டிகள், அல்சரால் சுருக்கம் மற்றும் அடைப்பு இருப்பது தெரிய  வந்தால் நிச்சயமாக குடலில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். அடைப்பு எந்த இடத்திலும் கிடையாது; எண்டோஸ்கோப்பி சிறுகுடல் வரை எந்தவிதமான  தடையும் இல்லாமல் செல்கிறது என்றால், கண்டிப்பாக இரைப்பை வாதம் பாதிப்பு இருக்கிறது என்று முடிவு செய்து அடுத்த கட்ட பரிசோதனைகளை  மேற்கொள்ளலாம். முக்கியமாக, நோயாளிக்கு ஒரு மாவை சாப்பிடக் கொடுத்து, எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.

அதில் அந்த மாவு எவ்வளவு நேரத்துக்குப் பிறகு சிறுகுடலை அடைகிறது என பார்க்க வேண்டும். நாம் சாப்பிடுகிற உணவு வயிற்றில் இருந்து, சிறுகுடலுக்கு 4  மணி நேரத்தில் சென்றுவிடும். திரவ உணவுகள் என்றால், அரை மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களுக்குள் சென்றுவிடும். இதை Gastric Emptying  Time எனச் சொல்வோம். இந்த நேரம் அதிகமாகும்போதுதான், கேஸ்ட்ரோபெரசிஸ் எனச் சொல்வோம். எண்டோஸ்கோப்பி செய்யாமல் இரைப்பை வாதத்தை 90%  கண்டுபிடிக்க முடியும். இதனை Gastric Emptying scintigraphy என குறிப்பிடுவோம். இதற்கு நோயாளிக்கு முட்டையுடன் Radioisotope  கலந்து கொடுப்போம். இதன்மூலம் வயிற்றில் உள்ளவற்றை ஸ்கேன் செய்யலாம். சிறிதளவே கொடுக்கப்படும் Isotope மூலம் கேஸ்ட்ரோபெரசிஸ் இருப்பதை  உறுதிப்படுத்தலாம்.

Isotope மூச்சுகுழாய் வழியாக வெளியேறிவிடும். இதனால், பாதிப்பு எதுவும் வராது. சாப்பாடு வயிற்றில் தங்குவதை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்.  ஏனென்றால், இதனால் பாதிப்புகள் அதிகம். ஏற்கனவே சொன்ன மாதிரி சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் பிரச்னைகள் அதிகம். சாப்பாடு வயிற்றில் தங்குவதால்  பாக்டீரியாக்கள் உருவாகும். அதன் காரணமாக மற்ற நோய்கள் வரும். துர்நாற்றம் வீசும். அடுத்த வேளை சாப்பிட முடியாது. உணவில் இருந்து கிடைக்க  வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. குளுக்கோஸ் அளவு மாறிக் கொண்டே இருக்கும். நீர்ச்சத்து குறையும். எனவே, சர்க்கரை நோயாளிகள் சோர்வு அடைய  வாய்ப்பு உண்டு. செரிக்காத உணவுப்பண்டங்கள் வயிற்றின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்.

இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க, வயிற்றில் இருந்து வெளியேறுவது கஷ்டம். பின்னர், அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டி இருக்கும். இரைப்பை  வாதம் பாதிப்பு உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வரும்போது, என்னென்ன உ ணவு சாப்பிட வேண்டும்? என்னென்ன மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ள  வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்துவோம். எளிதில் ஜீரணமாகாத உணவு வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள், கொழுப்பு நிறைந்த  உணவுப்பண்டங்கள், மது ஆகியவற்றை முழுவதும் தவிர்க்க சொல்வோம். திரவ உணவு வகைகளில், ஊட்டச்சத்து நிறைய உள்ளவற்றை குடிப்பது பயன் தரும்.  உதாரணத்துக்குத் தண்ணீருக்குப் பதிலாக இளநீர் அருந்துவது சிறந்தது.

உடற்பயிற்சிகள் செய்வதால், உடல் எடை குறைந்து, இப்பாதிப்பு தானாகவே சரியாகும். கடைசியாகத்தான் மாத்திரைகள் சாப்பிட சொல்வோம். முக்கியமாக,  இரைப்பையின் தசைகளின் இயக்கத்தை அதிகரிக்கும் மருந்து கொடுப்போம். உணவு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு  அறுவை சிகிச்சைத்தான் தீர்வு. இவர்களுக்கு  லேப்ரோஸ்கோபி மூலம் லைலோரஸ் (சிறுகுடலையும் இணைக்கும் பகுதி) பெரிது படுத்துவோம்  இரைப்பை  வாதத்திற்கான சிகிச்சை முறையில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ரொம்ப முக்கியம். இவை அனைத்தையும்விட, மக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்துவது ரொம்ப முக்கியம்.’’

- விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்