SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமத்தின் காவலன்!

2019-07-30@ 12:05:04

நன்றி குங்குமம் டாக்டர்

ஹெல்த் அண்ட் பியூட்டி


‘‘முகத்தில் தோன்றும் பருக்களே பொதுவாக முக அழகை மாற்றி கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இயற்கையாக இவற்றை நீக்கி பழைய தோற்றத்தை பெறுவது என்பதே கடினமான ஒன்று. ஆனால், அதைவிட மன அழுத்தம் தரக்கூடிய ஒன்று திடீரென்று அல்லது இருபதுகளின் பாதியிலேயே ஏற்படும் முதுமை தோற்றம்.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களும் இதில் முக்கிய இடம் பெறுகிறது. ஆரோக்கியமான சருமம் பெற இவற்றை சரி செய்து கொள்வது என்பது மிகவும் அவசியமானதாகிறது. இதற்கு கொலாஜன் அவசியமாகிறது’’ என்கிறார் சரும நல மருத்துவர் செல்வி.

கொலாஜன் என்பது என்ன?

‘‘நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன்(Collagen). இந்த புரதச்சத்து சருமங்களில் அதிகமாக இருக்கும். ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது.

பொதுவாக கொலாஜன் என்பது உடலுக்கு மிக அவசியமாகிறது என்றாலும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. நம் உணவுமுறையில் சில மாற்றங்களை செய்யும்போது நம் உடலில் கொலாஜன் இயற்கையாகவே உற்பத்தியாகும். உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்தாலும் சரியான உணவுமுறையின் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.’’

கொலாஜனின் முக்கியத்துவம் என்ன?

‘‘கொலாஜன் உற்பத்தி நம் உடலில் சீராக இருக்கும்பட்சத்தில் சுருக்கங்கள், முதுமைத் தோற்றம் போன்றவை இருக்காது. கொலாஜன் சருமத்தை மிருதுவாகவும், அழகாகவும், ஈரப்பதத்துடனும், இறுக்கமாகவும் வைக்க உதவுகிறது. சில நேரங்களில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும்போது சருமத்தில் சுருக்கங்கள், தொய்வுகள், நெற்றி மற்றும் கண்களை சுற்றி சிறு சிறு கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும். சருமத்தில் ஆங்காங்கே தொங்கி முதுமை தோற்றத்தையும் உண்டாக்கும். இந்த பிரச்னையை சரியான உணவு பழக்க வழக்கத்தின் மூலம் சரி செய்யலாம்.’’

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா?

‘‘ஃபேஷியல் மசாஜ்கள், மாய்சரைஸர்கள், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவு கொலாஜன் உற்பத்தி ஆகும். வைட்டமின் சி க்ரீம்கள் மற்றும் ரெட்டினால் இருக்கும் க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 15-லிருந்து 20 சதவீதம் வரை கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.

இது தவிர மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க மாத்திரைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. கடைகளில் சில தவறான கொலாஜன் உற்பத்தி மாத்திரைகளும் கிடைக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியம். இது மருத்துவர் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே எடுப்பதால் இதில் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.’’

கொலாஜன் மிகுந்துள்ள உணவுகள் என்னென்ன?

‘‘உணவு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். நேரடியாக உடலில் கொலாஜன் உற்பத்தி குறையும்போது சரியான உணவுப்பழக்கம் கொலாஜனை உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.

பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு போன்றவை கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. வைட்டமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போதும் கொலாஜன் உற்பத்தி தூண்டப்படும்.

இது தவிர அசைவ உணவில் முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகள், சிப்பி மீன் வகைகள் போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். மிக பழமையான மற்றும் அனைவரும் அறிந்த ஆட்டுக்கால் சூப் போன்றவற்றிலும் கொலாஜன் உற்பத்தி மிகுதியாக இருக்கும்.’’

கொலாஜன் உற்பத்தியை கெடுக்கும் உணவுகள் என்ன?

‘‘அரிசி, மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்பு வகைகள், வெள்ளை சர்க்கரை  போன்றவற்றை தொடர்ந்து உண்ணும்போது உடலில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும். எனவே, சருமத்தின் ஆரோக்கியம் காக்க முடிந்தவரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.’’

- மித்ரா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்