SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பற்கள் பத்திரம்

2019-07-15@ 15:06:52

நன்றி குங்குமம் டாக்டர்

பற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா?

அது எப்படி இருக்க முடியும்? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடற மாதிரி இருக்கே என்பார்கள் பலரும். ஆனால், மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் தொடர்புண்டோ இல்லையோ, எலும்புகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கும்
பற்கள் இழப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மென்மையாகிற நிலை. கடினமான எலும்புகள் ஸ்பான்ஜ்போல மாறும். எளிதில் உடையும். இந்தப் பிரச்னை உடலின் எந்த இடத்திலுள்ள எலும்புகளையும் தாக்கலாம். அவற்றில் இடுப்பு, மணிக்கட்டு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள எலும்புகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். சமீபத்திய ஆய்வுகள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு தாடைப் பகுதியையும் அதிகம் தாக்கலாம் என்கின்றன.

தாடை எலும்புகள்தான் பற்களைத் தாங்கிப் பிடிக்கிற நங்கூரம் போன்றவை. தாடை எலும்புகள் பலவீனமடையும்போது, அவை தாங்கியிருக்கும் பற்களின் அஸ்திவாரமும் ஆட்டம் காணும். ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பின் உச்சமாக பற்கள் இழப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலும் இந்தப் பிரச்னை முதியவர்களிடமே காணப்படுகிறது.

பற்களைத் தாங்கியிருக்கும் தாடை எலும்புப் பகுதிக்கு ஆல்வியோலர் (Alveolar) என்று பெயர். இந்த எலும்பு பாதிக்கப்படும்போது அதன் தொடர்ச்சியாக பற்கள் தளர்வடைவதையும், பற்கள் விழுவதையும் பல ஆய்வுகளும் உறுதி செய்திருக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்கு, அந்த பாதிப்பு இல்லாதவர்களைவிட 3 மடங்கு பற்கள் இழப்பு அதிகமிருப்பதும் தெரிகிறது.

அடுத்து தாடை எலும்புகனின் அடர்த்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. பெரியோடாண்டிட்டிஸ்(Periodontitis) என்றொரு பிரச்னை இருக்கிறது. ஈறுகளையும், பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புகளையும் தாக்கும் தீவிரமான தொற்று இது. பாக்டீரியா தொற்று மற்றும் உடலின் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இரண்டும் பற்களை அவற்றின் இடங்களில் பிடித்துவைத்திருக்கிற இணைப்புத் திசுக்களை அழித்துவிடும்.

அதனால் பற்கள் லூசாகலாம், விழலாம் அல்லது அவற்றை அகற்றும்நிலை ஏற்படலாம். பெரியோடாண்டிட்டிஸ் என்கிற தொற்றுதான் பிரதான காரணம் என்றாலும், எலும்புகளின் அடர்த்தி குறைவதும் மறைமுகமாக இந்தப் பிரச்சனைக்குக் காரணமாகிறது. எலும்பு இழப்பு, பெரியோடாண்டிட்டிஸ் மற்றும் பற்கள் இழப்பு - இந்த மூன்றுக்கும் நெருங்கிய, நேரடித் தொடர்பு இருப்பதையும் சில ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

ஆல்வியோலர் எலும்பின் அடர்த்தி குறையும்போது பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு கள் அதிகரிப்பதாகவும், பற்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அவை சொல்கின்றன.

பற்களைப் பார்த்து எலும்புகளின் ஆரோக்கியம் அறியலாம்!

‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் மஸ்குலோஸ்கெலிட்டல் அண்ட் ஸ்கின் டிசீசஸ்’ அமைப்பின் ஆய்வாளர்கள் ஒரு தகவலை வலியுறுத்துகிறார்கள்.

பற்களில் எடுக்கப்படும் எக்ஸ் ரே மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பைக் கண்டறியலாம் என்பதே அது. எலும்பு அடர்த்தியில் குறைபாடு இல்லாதவர்களுக்கும், குறைபாடு உள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பற்களில் தெரியும் வித்தியாசமே எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார்கள்.

எலும்பு மருத்துவர்களை சந்திப்பதைவிடவும் அடிக்கடி பல் மருத்துவர்களை சந்திக்கிற வழக்கம் பலருக்கும் உண்டு. பல் பரிசோதனைக்குச் செல்லும்போது பற்களில் தெரிகிற வித்தியாசத்தை வைத்து, எலும்புகளில் பாதிப்பு இருக்கலாம் என்று குறிப்பு கொடுப்பார்கள் பல் மருத்துவர்கள்.

பற்கள் தளர்வாக இருப்பது, ஈறுகள் விலகுவது, பொருந்தாத பல்செட் அல்லது அடிக்கடி கழன்று வருகிற பல்செட் போன்றவை எல்லாம் எலும்புகளின் ஆரோக்கியமின்மையை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். சரி.... பற்களை வைத்து எலும்புகளின் ஆரோக்கியமின்மையை அறிந்துகொண்டாயிற்று. அடுத்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கு அளிக்கப்படுகிற சிகிச்சைகளே பற்களையும் சரி செய்துவிடுமா என்கிற கேள்வி எழலாம்.

இதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கொடுக்கப்படும் சிகிச்சைகளின் பிரதிபலிப்பாக, பற்களின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் காப்போம்

* முழுத்தானியங்கள், புரதம், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உணவில் இடம்பெறட்டும்.

* உங்கள் உயரத்துக்கேற்ற எடையைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

* தினமும் 1000 முதல் 1200 மி.கி கால்சியம் கிடைக்கும்படி உங்கள் உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.  மருத்துவரை ஆலோசித்து தேவையெனில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* புகைப் பழக்கம் வேண்டவே வேண்டாம்.

* புகை வேண்டாம் என்றால் மதுவும் ஆபத்துதான் என்பதை அறிந்து அதையும் முற்றிலும் தவிருங்கள்.

* உங்கள் வீட்டைப் பாதுகாப்பானதாக மாற்றுங்கள். அதாவது பாத்ரூம் உள்ளிட்ட எந்த அறையின் தரைகளும் வழுக்கக்கூடாது. சொரசொரப்பான தரையாக மாற்றுங்கள்.

* வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை கால் இடறி உங்களை விழச் செய்கிறபடி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* குளியலறை மற்றும் கழிவறைகளில் கைப்பிடிகள் இருக்கட்டும். சிக்கலான தாழ்ப்பாள்களைத் தவிர்க்கவும்.

* பற்களில் கூச்சமோ, சொத்தையோ, வலியோ ஏற்பட்டால் மட்டுமே பல் மருத்துவரை சந்திப்பது என்றில்லாமல், வருடம் ஒருமுறை பல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

* மென்மையான முனைகள் கொண்ட பிரஷ்ஷினால் தினமும் இருவேளை பல் துலக்குங்கள். ஃப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள்.

* பல் துலக்குவது மட்டுமே போதாது, டென்ட்டல் ஃபிளாஸ் உபயோகித்து தினமும் பல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

* மூன்று மாதங்களுக்கொரு முறை டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்.

* பல் செட் பயன்படுத்துபவர் என்றால் அவை சரியாகப் பொருந்துகிறதா அல்லது திடீரென லூசாகிவிட்டதா என்று பாருங்கள். பல் செட்டை சுத்தமாகப் பராமரியுங்கள்.

* பற்களிலும் ஈறுகளிலும் தெரியும் எந்த வித்தியாச அறிகுறியையும் அலட்சிப்படுத்தாதீர்கள். உடனே பல் மருத்துவரை அணுகுங்கள்.

(விசாரிப்போம் !)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்