SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

க்ரீன் டீ எல்லோருக்கும் உகந்ததல்ல!

2019-07-11@ 14:11:52

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்பெஷல்


உடல் எடை குறைய, உடலை மெருகேற்ற, சருமம் பளபளக்க என சகல உடல் அழகுக்கும் க்ரீன் டீ குடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்படி க்ரீன் டீ குடிப்பதால் உண்மையாகவே உடல் எடை குறைகிறதா, உடல் மெருகேருகிறதா அல்லது அழகு கூடி விடுகிறதா?
டயட்டீஷியன் கோமதி கௌதமனிடம் கேட்டோம்...

க்ரீன் டீ-க்கு மட்டும் அப்படி என்ன பெருமை?

உடல் ஆரோக்கியமாக இருக்க உடலினுள் இருக்கும் Toxins என்கிற நச்சுக்கள் நீங்க வேண்டும். இதையே டீடாக்ஸிஃபிகேஷன் என்கிறார்கள். இதற்கு க்ரீன் டீ உதவுகிறது. அதேபோல் உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் க்ரீன் டீ உதவுகிறது.

இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களாகவும், அழகுணர்ச்சி காரணமாக ஸ்லிம்மாக விரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் க்ரீன் டீக்கு தானாகவே ஒரு பெருமை வந்துசேர்ந்துவிட்டது. இதுவே நாகரிகத்தின் அடையாளமாகவும் மாறிவிட்டது.

உடல் குறைப்பில் க்ரீன் டீயின் முக்கியத்துவம் என்ன?

க்ரீன் டீ அருந்தும்போது கெட்ட கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் பருமன் மிக அதிகமாக உள்ளவர்கள் அல்லது தனது சரியான உடல் எடையில் அளவிலிருந்து 20 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் இதை தொடர்ந்து அருந்தும்போது உடலில் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய இது மிகவும் உதவுகிறது. க்ரீன் டீ அருந்துவதால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.

யாரெல்லாம் க்ரீன் டீ அருந்தக் கூடாது?

உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.

உடல் மெலிந்தவர்கள் அல்லது சரியான உடல் எடையில் உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடல் மெலிந்தவர்கள் உடலில் தேவையற்ற கொழுப்பானது இருக்காது. ஆனால், இதை அறியாமல் அவர்கள் க்ரீன் டீயை தொடர்ந்து அருந்தும்போது அவர்கள் உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை க்ரீன் டீயில் உள்ள வேதிப்பொருள்கள் மொத்தமாக வெளியேற்றிவிடும். உடலில் கால்சியம் போன்ற சத்துகள் உறிஞ்சப்பட்டு எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். ஹீமோகுளோபின் அளவும் குறையத் தொடங்கும். எனவே, அதிக உடல் பருமன் உள்ளவர்கள்
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை உண்டு.

அதேபோல் நீரிழிவுடன் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உட்பட அனைவருமே மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே க்ரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அல்லாதவர்கள் தினமும் காலையில் சூடான தண்ணீரில் 5 அல்லது 6 சொட்டு எலுமிச்சை சாறும், 1 டீஸ்பூன் தேனும் கலந்து குடித்து வர வயிறு சுத்தமாகும். இதற்கு வரைமுறை இல்லை. யார் வேண்டுமானாலும் அருந்தலாம்.

க்ரீன் டீயில் என்னென்ன பொருட்கள் உள்ளடங்கியுள்ளன?

க்ரீன் டீயில் புதினா, துளசி, இஞ்சி, கருஞ்சீரகம் போன்ற பொருட்களின் தன்மை உள்ளதால் அவை உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து நச்சை வெளியேற்றுகின்றன. தற்போது வரும் க்ரீன் டீயில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. முக்கியமாக கொடம்புளி. இது கேரளாவில் விளைகிற ஒரு வகையான புளி. இது நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எளிதில் கரைக்கக் கூடியது. இதை கொண்டும் க்ரீன் டீ வகைகள் தயாரிக்கப்படுகிறது.

க்ரீன் டீ எடுத்துக் கொள்ளும் முறை பற்றி...
அதிக அளவு உடல் பருமன் உள்ளவர்கள் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் க்ரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவிற்குப் பிறகும் சூடான க்ரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். இது நாம் உண்ட உணவின் மூலம் சேர்ந்த தேவையற்ற கொழுப்புகளை உடனே கரைக்கும் தன்மையுடையது.

க்ரீன் டீயினை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

கடைகளில் க்ரீன் டீ இலைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி தண்ணீர் கலந்து அவற்றுடன் நமக்குத் தேவையான புதினா, துளசி, கொடம்புளி, பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து தயாரித்து அருந்தலாம். இது கடைகளில் கிடைக்கும் க்ரீன் டீ பாக்கெட்டுகளை விட ஆரோக்கியமானதாகும். உடல் பருமனுக்கு நல்ல பலன் அளிக்கும்.

க்ரீன் டீ அருந்துவதால் சரும பளபளப்பு ஏற்படுமா?

க்ரீன் டீக்கும் சருமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. க்ரீன் டீ அருந்துவதால் சருமம் பளபளப்பு பெறும் என்பதில் எந்தவித உண்மையும் இல்லை.

- மித்ரா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்