SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூறாண்டுகள் நலமோடு வாழலாம்!

2019-06-27@ 15:38:36

நன்றி குங்குமம் டாக்டர்  

இதய சிகிச்சை மருத்துவத்தில் Treadmill Stress Test என்ற மருத்துவச் சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் ட்ரெட் மில் பற்றியாவது தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த பயிற்சி எடைக்குறைப்புக்காகவும், ஃபிட்னஸுக்காகவும் மட்டுமே செய்யப்படுவதில்லை. நூறாண்டுகள் நலமோடு வாழ வழி வகை செய்யும் பயிற்சியாகவும் இதனை வர்ணிக்கலாம்.

ஏனெனில், திடீர் மரணத்தை ஏற்படுத்தும் இதய நோய் தொடர்பான அறிகுறிகளை முன்னரே அறிந்து கொள்ள ட்ரெட் மில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் உதவுகிறது. இதுகுறித்து பரவலாக நம்மிடையே இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஷ்.

ட்ரெட் மில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்றால் என்ன?

‘‘நமக்கு நன்கு தெரிந்த ஒருவர், திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்கிற செய்தி நமக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தரும். ‘நேற்று கூட பேசிக் கொண்டிருந்தேனே’ என்று அங்கலாய்த்துப் போவோம். உண்மையில், இந்த மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் தவிர்க்கக் கூடியவையே! ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததால் அல்லது அலட்சியப்படுத்துவதால்தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்.

இதயக் கோளாறை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு பல்வேறு பரிசோதனைகள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றுதான் Cardiac Stress Test. சிலருக்கு மாரடைப்புப் பிரச்னை ஆரம்ப நிலையில் இருக்கும். ஆனால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. ECG எடுத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ உதவியாக இருக்கும். இதனால் ஆரம்ப நிலையிலேயே இதய அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சையை முன்னதாகவே தொடங்கிவிடலாம்.’’

ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எடுப்பது எப்படி?

‘‘ட்ரெட் மில் இயந்திரத்தில் ஒருவரை நடக்க வைத்து, அவரின் இதயத்துடிப்பு மாறுதல்களை ECG மூலம் கண்டறியும் பரிசோதனை செய்வோம். கம்ப்யூட்டர் மற்றும் இ.சி.ஜி கருவி இணைந்த இயந்திரம் இது. ECG-ன் லீடுகளை(Lead) ஒருவரின் கை, கால்கள், மார்பு போன்ற இடங்களில் பொருத்தி, ட்ரெட் மில்லில் குறைந்த வேகத்தில் நடக்க வைப்பார்கள்.

பின்னர் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும்.இதனால் நோயாளியின் நடை வேகமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும்.

அப்போது இதயத்துடிப்பு, இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றை ECG கருவி வரைபடமாகப் பதிவு செய்யும். நான்கு கட்டங்களாக நடக்கும் இந்தப் பரிசோதனை, 10 முதல் 15 நிமிடங்களில் முடிந்துவிடும்.’’

சோதனையின் அடிப்படை...

‘‘ஒருவர் சாதாரணமாக இருப்பதைவிட கடினமான வேலை செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்கேற்ப இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவில்லை என்றால், அவர்களுக்கு மார்பில் வலி ஏற்படும். அதனால் அவரை வேகமாக நடக்க வைத்து இதயத்துக்குப் பளுவை அதிகப்படுத்தி, நெஞ்சுவலி வருகிறதா என்பதையும், ECG காண்பிக்கிற மாற்றங்களை வைத்தும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிவார்கள். மறைந்திருக்கும் மாரடைப்பையும் அவ்வப்போது வந்து செல்கிற இதய வலியையும் அடையாளம் காட்ட உதவும் முக்கியமான பரிசோதனை இது.’’

யாருக்கு அவசியம்?

‘‘மார்பில் வலி, இறுக்க உணர்வு உள்ளவர்கள், ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரைநோய் உள்ளவர்கள், தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், புகை, மது போன்ற பழக்கம் உள்ளவர்கள் மற்றும், இதய நோய் பாதிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு ECG, ECO CARDIOGRAM போன்ற பரிசோதனைகளுக்குப்பிறகு இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.’’

யாரெல்லாம் செய்யக் கூடாது?

‘‘கடுமையான மாரடைப்பு வந்தவர்களும், நிலையில்லாத மாரடைப்பு வந்தவர்களும், இதயச் செயலிழப்பு உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் செய்யக்கூடாது. இந்த சோதனையின் முடிவு Negative என்று வந்தால், அதைத் தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை. ஆனால், Positive ​வந்தால் கண்டிப்பாக கார்டியாக் சோதனை, ஆஞ்சியோகிராம் போன்றவை செய்ய வேண்டும்.

ட்ரெட் மில் சோதனையில் இதய அடைப்புகளை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் Negative ரிசல்ட் என்றாலும், சின்னச்சின்ன அடைப்புகள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. நீரிழிவு உள்ள வயதான நோயாளிகள், மூச்சுப்பிரச்னை உள்ளவர்களுக்கு ட்ரெட் மில் சோதனை செய்ய முடியாது. இவர்களுக்கு ECG, ECO பரிசோதனைகள் செய்ய வேண்டும். ட்ரெட் மில் சோதனை செய்வதால் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் இருப்பதை முன் கூட்டி சொல்ல முடியாது.’’

- உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tvmalai

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

 • pslv_rocket111

  ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 • sweeden_novbal1

  சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

 • brazil_venom11

  நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

 • canada_seaplanee1

  முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்