SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்!

2019-06-11@ 15:45:57

நன்றி குங்குமம் டாக்டர்

மகிழ்ச்சி


‘தொலைதூரத்தில் எங்கோ கேள்விப்பட்ட நோய், இப்போது அடிக்கடி கேள்விப்படும் வார்த்தையாகிவிட்டது. உணவுகளில் உள்ள செயற்கை ரசாயனங்களின் தாக்கம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம், நெறிப்பிறழ்ந்த தவறான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மரபணு மாற்றப்பட்ட உணவுகள் என பல காரணங்களைப் புற்று நோய்க்கு அடிப்படையாகக் கூறலாம். இந்நிலையில் உணவுகளின் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

நாம் செய்யும் அல்லது செய்த மிகப்பெரிய தவறு, நம்மிடையே புழக்கத்திலிருந்த அஞ்சறைப் பெட்டி பொருட்களுக்கு மாற்றாக ரெடிமேட் உணவு ரகங்களை நாடி சென்றதுதான். பதப்படுத்திகள், நிறமூட்டிகள், செயற்கைக் கலவைகள் என பல்வேறு கலப்படங்களுக்குப் பிறகுதான் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு மூலப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மஞ்சள், மிளகு, சீரகம்

ஒரு விஷயம் தெரியுமா... சமையலில் நாம் மஞ்சள், மிளகு, சீரகம், கருஞ்சீரகம் போன்ற அஞ்சறைப் பெட்டி பொருட்களை தாராளமாக உபயோகித்ததால்தான், குடல் புற்றுநோய்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிகவும் குறைவு என்கிறது ஓர் ஆய்வு.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்திலிருக்கும் Thymoquinone எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று செல்கள் எட்டிப்பார்க்காமல் பார்த்துக்கொள்ளும். வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்று நோயைத் தடுக்கும் வன்மை சீரகத்திற்கு இருக்கிறது. சீரகத்திலுள்ள Cymene பூஞ்சைத் தொற்றுக்களையும் செரிமானப் பாதையில் சஞ்சரிக்கத் துடிக்கும் தீயக் கிருமி ரகங்களையும் வலுவாக எதிர்க்குமாம்.

மஞ்சள்

கலப்படமில்லா மஞ்சளில் குடிகொண்டிருக்கும் Curcumin எனும் வேதிப்பொருள், நேரடி புற்றுநோய் எதிர்ப்பாளர். லவங்கப் பட்டையிலுள்ள சின்னமால்டிஹைடு(Cinnamaldehyde) பெருங்குடல் புற்று மற்றும் சருமப் புற்றுநோய்க்கு சிறப்பான மருந்து என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி நமது பாரம்பரிய சொத்துக்களான அஞ்சறைப் பெட்டி பொருட்களை சமையலில் முறையாக உபயோகித்தாலே புற்றுநோய் ரகங்கள் நம்மை வாட்டாமல் தடுக்க முடியும். இவை தவிர்த்து கிராம்பு, ஏலம், ஓமம், சோம்பு என நறுமணமூட்டிகள் அனைத்தும் நோய் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெறும் உட்காரணிகளை தூண்டக் கூடியவை!

காய கற்பம்

சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காயகற்ப மூலிகைகள் மருந்துகள் அனைத்தும் புற்றுநோய்களுக்கு எதிரானவைதான். நெல்லிக்காய், இஞ்சி, கரிசாலை, கடுக்காய், கீழாநெல்லி என எண்ணிக்கைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அறிவியல் ரீதியாக பார்த்தால், காயகற்பம் என்று சொல்லப்பட்ட பொருட்களில் எதிர்-ஆக்ஸிகரணித் தன்மை மிகவும் அதிகமாக இருக்கும். உடலுக்கு கேடு விளைவிக்கும் Free radicals-களை அழிக்கும் திறன் இவற்றுக்கு இருப்பது சிறப்பு. ‘காலை இஞ்சி... கடும்பகல் சுக்கு... மாலை கடுக்காய்...’ இந்த உணவியல் சூத்திரத்திற்கு பின் இருப்பது புற்றுநோயை எதிர்க்கும் அறிவியல்தான். இப்படி பல மருத்துவ சூத்திரங்கள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றன.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

வண்ண வண்ண காய்களிலும் பழங்களிலும் பொதிந்துள்ள ஃப்ளேவனாய்டுகள், சிறுதானியங்களில் அடங்கிக்கிடக்கும் நுண்ணூட்டங்கள், கீரைகளுக்குள் உறைந்துக்கிடக்கும் தாதுப்பொருட்கள் என அனைத்தும் புற்றுசெல்கள் வீரியமடையாமல் பாதுகாக்கும் அமிர்தங்கள்தாம். ஆனால், அவை செயற்கை ரசாயனங்களின் தாக்கம் இல்லாமல் விளைந்திருக்க வேண்டும்.

உலகில் தயாரிக்கப்படும் புற்று நோய் மருந்துகளின் ஆதிமூலம் மூலிகைப் பொருட்களில் இருந்துதான். புற்றுநோய் மருந்திற்கான அடிப்படை நித்ய கல்யாணி எனும் தாவரம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?! கொடிவேலி, அமுக்கரா, சீந்தில் மிளகு என பலவற்றிலும் புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்கள் இருக்கின்றன. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தை முறையாய் பயன்படுத்த அருமையான நோய்த் தடுப்பு மருந்தாக செயல்படும்.

புற்றுசெல்கள் வீரியமடையாமல் தடுக்க...
குளிர்பதனப் பெட்டியில் நீண்ட நேரம் வைத்த உணவுப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி ரகங்களை தவிர்த்திடுங்கள். மலக்கட்டு உண்டாகும் உணவுப் பொருட்கள் வேண்டாம். இயற்கை முறையில் விளைந்த உணவு ரகங்கள் நல்லது.

புகையும் மதுவும் நேரடி புற்றுக் காரணிகள். புற்றுநோயின் தன்மை மற்றும் வீரியம் சார்ந்து, சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம், யோக மருத்துவம் என ஒருங்கிணைந்த மருத்துவத்தை மேற்கொண்டால் புற்றையும் வெல்லலாம், தடுக்கலாம்!

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்