SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்திலீன் மாம்பழம்!

2019-05-24@ 15:21:24

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழம், கிர்ணி, தர்பூசணி என பழங்களின் வரத்தும் அதிகரித்துவிடும். கூடவே, பழுக்க வைக்கும் விதம் பற்றிய ஏராளமான சர்ச்சைகளும் வெளிவரும். அவற்றில் ஒன்றுதான் செயற்கை முறையில் பழுக்க வைத்தல். அதிலும் கார்பைட் கற்களால் பழுக்க வைக்கக் கூடாது என்று அரசு ஒவ்வொருமுறை எச்சரிப்பதும், அதனால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து விவரிப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த முறை எத்திலீன் உதவியுடன் பழுக்க வைக்குமாறு உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகளே வலியுறுத்துவதுடன், செயல்முறை விளக்கமும் அளித்து வருகிறார்கள். அது என்ன எத்திலீன் முறை, இதனால் கெடுதல்கள் எதுவும் வராதா, வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்குமா, கால்சியம் கார்பைட் முறை ஏன் ஆபத்தானது?தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவனிடம் பேசினோம்...

‘‘எத்திலீன்(Ethylene) முறை என்பது கார்பைட் கற்களில் பழுக்க வைப்பது போன்று ரசாயன முறை அல்ல. காய்கள் இயற்கையிலேயே பழமாக மாறும்போது எத்திலீன் வாயு என ஒன்று உருவாகிறது. ஒரு காய் உருவானதற்குப் பிறகு, எத்திலீன் வாயுவை அந்தக் காயே சுரக்கும். அந்த வாயுவின் உதவியுடனே காய்கள் பழுக்கும். இது எந்தவிதமான செயற்கையான தூண்டுதலும் இல்லாமல், இயற்கையாக நடைபெறக் கூடிய
செயல்.

கால்சியம் கார்பைட்(Calcium carbide) என்பது ஒரு ரசாயனத் தயாரிப்பு. இது உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவதற்கானது அல்ல. கேஸ் வெல்டிங் அல்லது ஆர்க் வெல்டிங்கில் பயன்படுத்தப்படுகிற ஒரு வகையான ரசாயனம்தான் கால்சியம் கார்பைட். அது மட்டுமில்லாமல் இந்த ரசாயனம் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற இண்டஸ்ட்ரியல் கிரேட் என்பதால், 100 சதவீதம் தூய்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கலப்படமும் ஏராளமாக இருக்கும். அவற்றில், ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸும் இருக்கும். ஹெவி மெட்டல்களான இவை இரண்டுமே மனித இனத்திற்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் ஆகும்.

கால்சியம் கார்பைட் என்ற இண்டஸ்ட்ரியல் கிரேட் அசிடிலின்(Acetylene) என்ற வாயுவை வெளிப்படுத்தும். இந்த வாயு காய்களைப் பழுக்க வைப்பதுபோல் தெரியும். ஆனால், உண்மையில் நிறம் மட்டுமே இதனால் மாறும். அதாவது காயின் பச்சை நிறம் என்பது மாறி, பழத்தைப் போல தோற்றமளிக்கும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பது மட்டுமே அசிடிலின் செய்கிற வேலை. பார்க்கும்போது முழுவதுமாக கனிந்த கனி போல தெரியும். ஆனால், உள்ளே காயாகவே இருக்கும்.

இயற்கையாக பழுக்கும் முறையில் ஒரு காயின் காம்ப்ளக்ஸ் சுகர், கனியாக மாறும்போது சிம்பிள் சுகராக மாற்றமடைகிறது. அப்போதுதான் செரிமானம் ஆகும். ஆனால், கார்பைட் முறையில் காயின் காம்ப்ளக்ஸ் சுகர் மாற்றமடைவதில்லை. இது செரிமான பிரச்னையை உண்டுபண்ணும். எனவேதான் எத்திலீன் வாயுவை 100 ppm என்ற அளவில் பயன்படுத்த சொல்கிறோம்.

பெரிய அளவில் பழ வியாபாரம் செய்கிறவர்கள் எத்திலீன் சேம்பர் அமைத்து பழுக்க வைக்கலாம். சிறு வியாபாரிகளுக்காக ஷாம்பூ பாக்கெட் வடிவில் எத்திலீன் வாயு கிடைக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். இந்த வாயு நேரடியாகப் பழங்களின் மீது படாதவாறு, தண்ணீரில் உள்ள பாத்திரத்தில் இந்த பாக்கெட்டைப் போடவும். அப்போது வெளிவரும் ஆவி மாங்காய்களின் மீது பட்டு பழமாகிறது இவ்வாறு செய்வதால் காய்கள் இயல்பாக பழுக்கும்.

10 கிலோவுக்கு ஒரு பாக்கெட் என பயன்படுத்தலாம். இது கார்பைட் கற்களின் மூலம் பழுக்க வைப்பதைவிட எத்திலீன் முறை எளிதானது. பாக்கெட் வடிவ எத்திலீன் வாயுவை புதுடெல்லியில் இருக்கும் உணவுப் பாதுகாப்பு ஆணையரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதனையே தமிழகத்தில் அமல்படுத்துகிறோம்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால், ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பழங்களை நன்றாக கழுவி, மேல் தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். தரமான கடைகளில் வாங்குவதும் பயன் தரும். எங்கேயாவது சட்டத்துக்கு விரோதமாக காய்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது தெரிந்தால் உணவுப் பாதுகாப்பு துறையின் புகார் எண்ணான 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்’’.

- விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்