SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை!

2019-05-22@ 14:09:18

நன்றி குங்குமம் டாக்டர்

தெரிந்துகொள்வோம்

‘‘நம்முடைய வாழ்க்கையில் நம் உடல் இயங்க இயற்கையிடம் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறோம். அந்த உணவு இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று பசியை போக்கும் வண்ணமும், உடல் நோயை தீர்க்கும் வண்ணமும் இருக்கிறது. பசியை போக்கும் உணவு வகைகளை அன்றாடம் எடுத்துக் கொள்கிறோம்.

உடல் பிணியை போக்கும் மருந்து வகைகளை உடலுக்கு பிணி ஏற்படும்போது எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில் எண்ணிலங்கா மூலிகைகளை நம்முடைய பாரம்பரியத்தில் ஆதி காலம் தொட்டே பயன்படுத்தி வருகிறோம். அப்படி பயன்படுத்தி வந்த அரியவகை மூலிகைதான் இந்த தேற்றான் கொட்டை’’ என்கிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

‘தேற்றாங் கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’
- சித்த மருத்துவ உலகில் பெரிதும் புழக்கத்தில் இருக்கும் சிறந்த மருத்துவச் சொற்றொடர் ஆகும். இதில் குறிக்கப்பட்ட மருந்துப் பொருள் ‘தேற்றான்’ என்று கூறப்படும் ஒரு மூலிகை மருந்து ஆகும்.
கதகம், இல்லம், சில்லம், தேறு என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum. இதன் தாவரவியல் குடும்பம் Loganiaceae ஆகும். மர வகையைச் சார்ந்த தேற்றான் கொட்டை எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட.

இந்தியாவின் பல பகுதிகளில் தேற்றான் மரம் காணப்பட்டாலும், தென்னிந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இம்மரத்தின் பழம் மற்றும் விதைகள் மருத்துவத்தில் பயன்படுகிறது. கைப்பு சுவையையும், வெப்பத்தன்மையும், கார்ப்பு பிரிவையும் உடையது. இதன் பழங்கள் சுவை மிகுந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும், மருத்துவ குணம் கொண்டது. சீத பேதியை கட்டுப்படுத்த வல்லது. இருமல் மற்றும் இரைப்பு போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யக் கூடியது.

நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலையும் வலிமையாக மாற்றி தேற்றும் வல்லமை கொண்டது தேற்றான் கொட்டை. அதனாலேயே இதனை உடலுரமாக்கி, பசித்தீத்தூண்டி ஆகிய செய்கைகளை உடையது என்கிறார்கள் மருத்துவர்கள். தேற்றான் விதைகள்
கண்ணுக்கு நன்மருந்தாகும்.

தேற்றான் கொட்டை மருத்துவ பயன்கள்

தற்காலத்தில் குடிக்கும் நீரைச் சுத்திகரிக்க பலவிதமான செயற்கை கருவிகள் காணப்பட்டாலும், இயற்கை நமக்கு அளித்த சுத்திகரிப்பான் தேற்றான் விதைகளாகும். தேவையான அளவு தேற்றான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேற்றான் கொட்டை ஊறிய நீரில் நுரை பொங்கத் தேய்த்துத் தூய்மை செய்வர்.

தேற்றான் கொட்டைகளை பசுவின் பாலில் அரை மணி நேரம் ஊறப்போட்டு, பின் நீரால் கழுவி உலர்த்திக் கொள்ளவும். பிறகு அதன் எடைக்கு நான்கு பங்கு சிறுகீரைச் சாற்றை விட்டு அரைப் பாகம் சுண்ட எரித்து, நீரில் கழுவி எடுக்க சுத்தி ஆகும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட தேற்றான் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும், தேற்றான் விதையினால் வெள்ளை நோய், வெட்டை  நோய், உட்சூடு ஆகியவை குணமாகும்.

இளைத்த உடம்பை தேற்றும்; உயிரணுக்களை அதிகரிக்கும். இதனால்தான் ‘தேற்றாங் கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ என்று இதுகுறித்து புகழ் பாடினார்கள். தேற்றான் விதைகளைப் பொடித்து பாலில் கலந்து கொடுக்க நீர்ச்சுருக்கு, வெட்டை முதலிய நோய்கள் தீரும். விதைகளைப் பொடித்து தேனில் கலந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டிகள் பழுத்து உடையும். விதைகளில் Brucine என்ற அல்கலாய்டு காணப்படுகிறது. விதைகள் ஈரல் நோய்களை குணமாக்க கூடியது.

விதைகளுடன் இந்துப்பைச் சேர்த்து அரைத்து கண்ணிலிட கண் சிவப்பு நீங்கும். மேலும் விதைகளுடன் கற்பூரம் சேர்த்து தேன் விட்டு அரைத்து மெழுகாக செய்து கண்ணில் பற்று போட கண்களில் பீளை சேர்தல், நீர் வடிதல் ஆகியவை போகும்.

தேற்றான் விதைகளை முதன்மையாக வைத்து செய்யப்படும் லேகியமானது மெலிந்த உடலை தேற்றி உடலுக்கு ஊட்டம் அளிக்க வல்லது. தேற்றான் விதையினால் செய்யப்படும் குடிநீரானது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். இத்தனை பயன்களைக் கொண்ட தேற்றான் என்ற மருந்தானது இயற்கை மனிதனுக்கு அளித்த சிறந்த கொடையாகும்.

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்