SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மை பற்றி விழிப்புணர்வு தேவை!

2019-05-16@ 14:51:06

நன்றி குங்குமம் டாக்டர்

அம்மை நோய்கள் இன்றும் மனித இனத்தை அச்சுறுத்தும் மிகப் பெரிய காரணியாகவே இருந்து வருகிறது. காரணம் வேறு ஒன்றும் இல்லை. பரவலாக, நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்! இவ்வகை நோய்கள் பற்றி, முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நம்பிக்கைகளும், காலங்காலமாக அவற்றைத் தவறாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் இவை குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததும்தான் முக்கிய காரணங்கள் என்று கொள்ளலாம். மருத்துவம் அடிப்படையில், இந்த நோய்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டாலே, ஓரளவு பயன் கிடைக்கும்.

* தட்டம்மை(மணல் வாரி), சின்னம்மை(சிக்கன்பாக்ஸ்), பெரியம்மை(வைசூரி நோய்), அம்மைக் கட்டு(பொண்ணுக்கு வீங்கி) என இந்த நோய்கள் பலவிதமான பெயர்களில் மருத்துவர்களால் குறிப்பிடப்படுகின்றன. வைரஸ் நுண்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவதால் இவை உண்டாகின்றன.

* அம்மை நோயின் பாதிப்புக்கு உள்ளான பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, சிறுவர், சிறுமியர் வரை உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதேபோன்று முதுமைப் பருவத்தினர் உடல் நலனிலும் அக்கறை கொள்வது நல்லது. ஏனென்றால், இவர்களின் தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக காணப்படும். எனவே, இந்நோயில் இருந்து விரைவாக குணம் அடைய திட, திரவ உணவு வகைகளை இவர்களுக்கு நிறைய கொடுத்து வர வேண்டும்.

*  யூனிசெஃப் நிறுவனத்தின் உலகக் குழந்தைகளின் நிலை - 2009 என்ற அறிக்கையில் இடம்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில், உயிர்க்கொல்லி நோயான தட்டம்மை காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு தொடர் கதையாக இருப்பது தெரிய வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 67% மட்டுமே உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

* தட்டம்மை, சின்னம்மை மற்றும் பொண்ணுக்கு வீங்கி முதலான நோய்கள் தொற்று காரணமாக, ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு வழி ஏற்படுத்தும் வைரஸ்கள், பாக்டீரியாக்களைக்காட்டிலும் மிகச்சிறிய நுண்கிருமிகள் ஆகும்.

* மிதமான ஜுரம், பசியுணர்வு இல்லாமை, உடல் பலவீனமாக காணப்படுதல் போன்ற அறிகுறிகளால் வெளிப்படும் சிக்கன்பாக்ஸ் என்ற சின்னம்மை விரைவாகவும் மிக எளிதாகத் தொற்றும் தன்மை கொண்ட வைரஸினால் உண்டாகும். இந்த நோய்தொற்று இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் ஒரு நபரிடம் இருந்து அடுத்த நபருக்கு இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.

* சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் முழுவதும் ஆங்காங்கே முதலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படும். நாளடைவில், இவை கொப்பளங்களாக உருமாறி உடல் முழுவதும் பரவத் தொடங்குகின்றன.     சில சமயங்களில், சிரங்கு, புள்ளிகள் மற்றும் கொப்பளங்கள் ஒரே சமயத்தில் உடலில் தென்படலாம்.

* சிக்கன் பாக்ஸால் ஒருவிதமான நமைச்சல் தோன்றும். இதனைக் கட்டுப்படுத்த சுத்தமான தண்ணீரில் வேப்ப இலைகளைப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர், அந்த நீரில் வெள்ளை நிற துணியை நனைத்து உடல் முழுவதும் போர்த்திட, நமைச்சலின் தீவிரம் மெல்லமெல்ல குறையத் தொடங்கும்.

* குழந்தைகளுக்குத் தட்டம்மை(Measles), சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுத்திட எளிய வழி ஒன்று உள்ளது. அதாவது, குழந்தை பிறந்து ஒன்பதாவது மாதம் தொடங்கும்போது மீசில்ஸ் நோய்க்கான தடுப்பூசியையும், 12 முதல் 15 மாதங்களுக்குள் தவறாமல் சின்னம்மை நோய்க்கான தடுப்பூசியை போட்டுவிட வேண்டும்.

* தட்டம்மை(Measles) என்ற இந்த தொற்றுநோய் மிகவும் ஆபத்தானது. ஊட்டச்சத்து குறைபாடு உடைய மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எளிதாகவும், விரைவாகவும் தாக்கக் கூடியது. இந்த வகை அம்மையை ஜுரம், பசி இல்லாமை, மூக்கில் நீர் வடிதல், கண்கள் சிவந்து காணப்படுதல், அடிக்கடி வாந்தி எடுத்தல் முதலான அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

* இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கணிசமான அளவு குறைந்து, சீதபேதி(Dysentery), நிமோனியா காய்ச்சல் போன்ற அபாயகரமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.    

* மணல்வாரி எனக் குறிப்பிடப்படுகிற தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் காணப்படுகிற கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்து கீழே விழும்வரை, அவர் பேருந்து மற்றும் ரயில் நிலையம், அலுவலகம் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* ரூபெல்லா எனவும், ஜெர்மன் மணல்வாரி எனவும் குறிப்பிடப்படுகிற இந்த வகை அம்மையால், பாதிக்கப்பட்ட நபருக்குப் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தாய்மை அடைந்த பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது பாதுகாப்பானது.

* கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்குள், பெண்களுக்கு இந்த வகை அம்மை ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகள் உடற்குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டவாறு நடைபெறும் சூழலில், கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி கருவைக் கலைப்பது
பாதுகாப்பானது.    

* உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான அவசியமாக திகழ்கிற உமிழ்நீர் சுரப்பிகளில் உண்டாகுகின்ற வைரஸ் தொற்றே, மருத்துவர்களால் ‘பொண்ணுக்கு வீங்கி’ என குறிப்பிடப்படுகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காதுகளின் பின்புறம் மற்றும் தாடைப்பகுதி, கழுத்து ஆகியவை சேரும் இடத்தில் மெல்லிய வீக்கம்(Swelling) ஏற்படும். அது மட்டுமில்லாமல் ஆடவருக்கு விரைப்பகுதியிலும், மகளிருக்கு மார்பகங்களிலும் வீக்கம் உண்டாகலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் இவ்வீக்கத்தினால், ஏற்படுகின்ற வலியின் வீரியத்தைக் குறைக்க உதவும்.

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்