SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோபத்தை கையாள்வது எப்படி?!

2019-05-09@ 15:45:19

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் பழைய பழமொழிதான். ஆனாலும், அது நம் வாழ்க்கைக்கு இன்றும் பொருந்தத்தான் செய்கிறது. நமக்கு கோபம் வந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது நமது எதிரில் இருப்பவர்களை விட, நம் உடல் நலமும், மனநலமும்தான். அதனால் அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய உணர்வு கோபம். கோபத்தைக் கையாள உளவியல் ஆலோசகர்கள் Anger management என்ற டெக்னிக்கைப் பின்பற்றச் சொல்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்...

கோபம் மாரடைப்பு முதலான இதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்துவிடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அதிகம் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது.

கோபத்தால் மாரடைப்பு எப்படி வரும்?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்தான். மூளையைத் தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன. கோபத்தை உள்ளுக்குள் போட்டு அடக்காதே. அதை கொட்டிவிடுவதுதான் நல்லது என்பார்கள். ஆனால், கோபத்தை உள்ளே அடக்குவது, வெளியே கொட்டுவது இரண்டுமே ஆபத்தானது. அதற்காக, யாரிடம் போய் கோபத்தில் வெடிக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ளலாம்.

இதேபோல் நான் எனக்குக்கீழ் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால் என்னை ஏறி மிதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் பலருக்கு உண்டு. கோபத்தை அடக்கி சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதற்கு மிகுந்த நெஞ்சுரம் தேவை. நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

நான் கோபப்படவில்லையென்றாலும், ஒண்ணுமில்லாத விஷயத்துக்குக்கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து நம்மை டென்ஷனாக்குவதற்கென்றே சிலர் இருக்கிறார்களே... அப்படி நம்மை சீண்டுகிறவர்களிடம் எப்படி கோபப்படாமல் நிதானமாக இருக்க முடியும்?
 இந்தக் கேள்வி நியாயமானதுதான். உங்கள் கோபம் சரியானதாக இருந்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உண்மையில், கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடத்தில்தான் கோபத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

அடிக்கடி ‘மூட் அவுட்’ ஆவது உங்களது சுபாவமாக இருந்தால், இதுவரை உங்களுடைய கோபத்திற்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தியிருக்கலாம். அவர்கள்தான் என்னை கோபப்பட வைத்தார்கள் என்று உங்களுடைய உணர்ச்சிகளின் ரிமோட் கன்ட்ரோலை மற்றவர்களிடம் கொடுத்திருப்பீர்கள். இனி அந்த ரிமோட் கன்ட்ரோலை உங்கள் கைக்கு கொண்டுவந்துவிடுங்கள். அதற்கு முதலில், ‘நான்தான் ஆத்திரப்பட்டுவிட்டேன். இதற்கு முழுவதும் நான் மட்டும்தான் காரணம்’ என்று உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சூழலை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும்.

உங்களை நீங்களே கவனியுங்கள்

உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழல் எது? அப்போது என்ன நடந்தது? கோபம் வரும்போது எப்படி நடந்துகொண்டீர்கள்? எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டால், அடுத்த முறை அதேபோன்ற சூழல் வரும்போது அதை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.

யோசித்துப் பேசலாம்

யாராவது நம்மை கோபப்படுத்தினால் சட்டென்று யோசிக்காமல் எதையும் பேசாதீர்கள். நிதானமாக யோசித்துப் பிறகு பேசலாம். மூச்சை நன்றாக இழுத்துவிட்டோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டோ பிறகு பேசலாம். அப்போது கோபம் அடங்கி நிதானமாக பேச முடியும்.

மற்றவர்களையும் யோசியுங்கள்

ஏதாவது பிரச்னை வரும்போது உங்கள் பக்கத்திலிருந்து மட்டும் யோசித்திருப்பீர்கள். எதிரில் இருப்பவரின் சூழலையும் யோசிக்க வேண்டும். பிரச்னையை அவருடைய கோணத்திலிருந்து யோசித்து பார்க்கலாம். குறிப்பாக சின்ன விஷயமாக இருந்தால் பெரிசு பண்ண
வேண்டாமே…

பிரச்னையை எதிர்பாருங்கள்

எதிரில் இருப்பவர் என்ன பேசினால் நமக்கு கோபம் வரும்? எந்தச் சூழலில் எனக்கு கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது? என்பதை முன்கூட்டி கணித்து விட்டால் அதற்கு எப்படி நாம் எதிர்வினையாற்றுவது என்பதை தீர்மானித்து வைத்துக் கொண்டால் பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம் அல்லது அந்த சூழல் வரும்போது, அங்கிருந்து நகர்ந்து விடலாம். அது சூழலின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும்.

சில நேரங்களில் அலுவல் ரீதியான கோபத்தையோ, வயதில் மூத்தவரிடம் உண்டாகும் கோபத்தையோ வெளிக்காட்ட முடியாது. அதற்கு சிறந்த வழி. ஒரு பேப்பரில் அவரைத் திட்ட நினைப்பதையெல்லாம் எழுதி, அதை கிழித்தெறிந்து விடுங்கள்.

இந்த சூழல்களெல்லாம் தவிர, சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுகிற குணம் எனக்கு உண்டு என்று தோன்றினால் கோபத்தை குறைக்க சில டிப்ஸ்…

*மூச்சை நன்கு இழுத்து விட்டு, 10 லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணஆரம்பியுங்கள்.
*ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு மனதிற்குப் பிடித்த இசையை கேளுங்கள்.
*ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
*ரிலாக்ஸாக கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம்.
*மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை மனதை அமைதிப்படுத்தும்.
*கண்களை மூடி கவனத்தை வேறு ஒரு செயலில் திருப்பலாம்.
*‘வசூல் ராஜா’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் மாதிரி சத்தம் போட்டு சிரிக்கலாம்.
*ஐஸ்க்ரீம், சாக்லேட் என மனதுக்குப் பிடித்தவற்றை சாப்பிடலாம்.
*கோபம் இல்லாத நேரங்களில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.சிலருக்கு மறதிநோய், தைராய்டு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றாலும் கோபம் அடிக்கடி வரலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் கோபத்தை குறைத்துவிட முடியும். அதனால் அடிக்கடி கோபம் வருகிறது என்கிற பட்சத்தில் உளவியல் ஆலோசனை பெறுவதும் சிறந்தது.

- உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2019

  21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்