SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோமியோபதி மருத்துவத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

2019-04-25@ 15:32:22

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்பெஷல்

‘‘ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒரே பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை.

ஒவ்வொரு உயிரும் அதற்கேற்ப உரிய பிரத்யேக உயிர் சக்தியால் கட்டுப்படுத்தப்படவும், நிர்வகிக்கவும் படுகிறது. இதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி., பட்டம் பெற்றவர். ஒத்த நோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது போல) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியினால் ஹோமியோபதி மருத்துவம் 250 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது’’ என்கிற ஹோமியோபதி மருத்துவர் சங்கர் அதன் சிறப்புகள் பற்றி இங்கே பேசுகிறார்.

‘‘அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் குறித்து பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு ஹோமியோபதி மருத்துவம் பெரும் மன நிம்மதியைத் தந்தது. முள்ளை முள்ளால் எடுப்பது என்பது எந்தப் பொருள் எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்று வித்ததோ அந்தப் பொருளை தூய்மையான நிலையில் கொடுத்தால் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதே ஓமியோபதியின்
அடிப்படை கோட்பாடு.

ஹோமியோபதி மருத்துவ முறையைப் பொருத்தவரை, நோயின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து அளிக்கப்படுவதில்லை. ஒரு நோயாளியைக் குணப்படுத்த நோயாளியின் உடல், உளவியல் பண்புகள் விசாரிக்கப்படுகின்றன. ஒரே நோய் காரணமாக பலர் அவதிப்படுபவர்களாக இருக்கலாம். ஆனால், அந்த நோயால் ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். அந்தக் காரணியையே ஒரு ஓமியோபதி மருத்துவர் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். இதுதான் மற்ற மருத்துவ முறைகளிலிருந்து ஹோமியோபதியை வித்தியாசப்படுத்துகிறது.

ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவுப் பழக்க வழக்கங்கள் மூலமும், அவருக்கு நிகழ்ந்த மன அழுத்தம், கவலை, துக்க வரலாறு மூலமும் மற்றும் மனம் சார்ந்த மற்ற நிகழ்வுகள் மூலமும் அறிய வேண்டும். இதை ஹோமியோபதி மருத்துவர் துல்லியமாக பரவ விடாமல் குணப்படுத்துகிறது. இந்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் கிடையாது.

மேலும் செலவு மிகவும் குறைவான மருத்துவம் என்பதால் அனைவராலும் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. எனவே, இதன் பெருமையைப் புரிந்து பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இயற்கையாக வரும் எல்லா நோய்க்கும், எல்லா வயதினருக்கும் (6 மாத குழந்தை முதல்) இதில் மருந்து உள்ளது. ஒரு நோயினைக் குணமாக்க பல வகையான மருந்துகளை உண்ண வேண்டிய அவசியமில்லை. ஒரு நோய்க்கு பல வித அறிகுறிகள், பலவித காரணமோ இருந்தால் ஒரு மருந்து எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ காரணங்களோ இருந்தால் அதற்கு தகுந்தாற்போல மருந்து என நோய் வாய்ப்பட்ட நோயாளிகளிடம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் நோய்க்குறிகளை கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு Allium cepa என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இது வேறொன்றுமில்லை. வெங்காயம்தான். அதிகப்படியாக வெங்காயத்தை உரிக்கும்போது ஏற்படும் விளைவுகள், மூக்கிலும் கண்களிலும் நீர் வழிந்தோடும். கண் எரியும், தும்மல் ஏற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோய்க்குறிகளை கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவமுறையில் மருந்தின் அளவு மிக குறைவாக கொடுக்கப்படுகிறது. மருந்தை வீரியப்படுத்துதல் மருந்தின் செறிவை குறைக்க குறைக்க வீரியம் அதிகரிக்கும் என்பது ஹோமியோ உலகில் பிரபலமான தத்துவம். இவ்வாறு தயாரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் தடுக்கப்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவ முறையானது ஐரோப்பியா, அமெரிக்கா, ஆசியாவை உள்ளிட்ட 85 நாடுகளுக்கும் மேலானவற்றில் நடைமுறையில் உள்ளது. ஹோமியோபதி இந்தியாவில் மத்திய கழகச் சட்டம் 1973-ன் கீழ் ஹோமியோபதியை தேசிய மருத்துவ முறைகளில்
ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

ஹோமியோபதி மருத்துவர் உடல் மனம், உணர்வுகளுக்கும், ஆரோக்கியம், நோய் மற்றும் சிகிச்சைக்கும் சம்பந்தம் உள்ளது என்று முழுமையாக புரிந்து கொண்டு நோயாளியின் உடல், மனம் சமூக ஆன்மிகத் தன்மைகளுக்குப் பொருந்தும் வண்ணம் இயற்கையில் இருந்து உருவாக்கப்படும் மருந்துகளை பயன்படுத்தி உடல் தன்னைத்தானே  குணப்படுத்தும் ஆற்றல்களைத் தூண்டிவிடுகிறார்.

தலைவலி, காய்ச்சல், மன அழுத்தம், கீல்வாதம், தாய் சேய் பிரச்சனைகள், சொறி, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கும் ஓமியோபதி மருத்துவ முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஓமியோபதி மருந்துகள் தனியாகவும் பிற சிகிச்சை முறை மருந்துகளுடன் இணைத்தும் பயன்படுத்தபடுகிறது.

அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடிய சிறுநீரக கற்கள், கர்ப்பப்பை நோய்கள், இதய நோய்கள், மார்பக க்கட்டிகள், சைனஸைடிஸ், ப்ராஸ்டேட் வீக்கம் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து ஹோமியோபதி மருத்துவ முறையால் குணமளிக்க முடியும். நீண்ட கால நோய்களான தும்மல், சைனஸ், ஆஸ்த்துமா, குடற் புண், டான்சில், நெஞ்செரிச்சல், தீராத தலைவலி, சைனஸ் தலைவலி, ஒற்றை தலைவலி, வாயுகோளாறுகள், அஜீரண கோளாறுகள், மலச்சிக்கல், சிறுநீரக்கல் மற்றும் சிறுநீரக நோய்கள், கர்ப்பப்பை கட்டிகள், ப்ராஸ்டேட் வீக்கம், மாதவிலக்குப் பிரச்னைகள், குழந்தை பேறின்மை, ரத்த சோகை, வயிற்றுப் போக்கு, கண் நோய்கள் போன்றவை குணமாகும்.

குறுகிய கால நோய்களான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல், வயிற்று வலி போன்றவையும் உடனடியாக குறைக்க முடியும். நோயை அல்லாமல் நோயாளியின் அறிகுறிகளை வைத்து மருந்து கொடுப்பதால் எந்த நோயாக இருந்தாலும் ஹோமியோபதியில் சிகிச்சையளிக்க முடியும்.

ஹோமியோபதி மருந்துகள் ஆரோக்கியமான நலம் பொருந்திய மனிதரிடம் கொடுத்து அவை தோற்றுவிக்கும் நோய்க்குறிகள் வரும்போது கொடுத்துத் துயர் நீக்கி முழு நலம் அடைய செய்பவை. இம்மருத்துவமுறையில் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி என மேலோட்டமாக பார்த்து மருந்து கொடுக்காமல் நோயாளியின் முழுமையாக மன உளவியல் குறிகளை வைத்து மருந்து வழங்கப்படுவதால் நோயாளி முழுமையான குணமடைதலை இம்மருத்துவ முறையினால் காண முடியும்.’’

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்