SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சம்மர்லாம் எங்களுக்கு சாதாரணமப்பா....

2019-04-25@ 15:29:58

நன்றி குங்குமம் டாக்டர்

சம்மர் ஸ்பெஷல்


தமிழகத்தில் ஏற்கெனவே வெயில் 100 டிகிரியைத் தாண்டிவிட்டதுதான். ஆனாலும், அதனை சமாளிக்க நம்மிடம் அருமருந்துகள் பலவும் உள்ளன. உணவாகவும், மருந்தாகவும் நம்மைக் காக்கும் அத்தகைய கவசங்களில் முலாம் பழமும் ஒன்று.
உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்து வெயில் காலத்தில் ஆரோக்கியம் நல்கும் வல்லமை கொண்டது முலாம் பழம். நம்முடைய அன்றாட வாழ்வில் முலாம் பழத்துக்கும் ஓர் இடம் இருந்தால் ‘சம்மர்லாம் எங்களுக்கு சாதாரணமப்பா’ என்று கேஷுவலாக அக்னி நட்சத்திரத்தை நம்மால் கடக்க முடியும்.

அப்படி என்னென்ன முலாம்பழத்தில் இருக்கிறது?!

* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துக்கள் முலாம்பழத்தில் அதிகம் காணப்படுகிறது என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் இதனை பரிந்துரை செய்கிறார்கள். இதனால் Vitamins factory என்றும் முலாம்பழத்தினை செல்லமாக சொல்வதுண்டு.

* முலாம்பழத்தில் நீர்ச்சத்து ஏராளமாக உள்ளது. எனவே, இதை உட்கொள்பவர்களின் உடலில் நீர்ச்சத்து அளவு சமமான நிலையில் பராமரிக்கப்படும். இதன் காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து விடாமல், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும்.

* நமது உடலில் சேர்கிற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிற Detoxification பணியையும் செவ்வனே செய்கிறது முலாம்பழம். புகை பிடிப்பவர்களுக்கு நிக்கோட்டினால் ஏற்படுகிற பாதிப்புக்களில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கவும் இக்கனி உதவுகிறது.

* பலவிதமான மருத்துவ குணங்களை உடைய இந்தக்கனியில் குளுக்கோஸ் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். இன்னொரு கூடுதல் தகவல், உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் இதில் சிறிதும் இல்லை.

* Power house of health என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு, அதிக எனர்ஜியைத் தரும் பழம் இது. கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புக்கு ஈடு கொடுத்து சக்தியை கொடுப்பதில் முலாம்பழம் மிகச்சிறந்ததாக இருக்கிறது.

* வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றல் உடைய முலாம்பழத்துக்குச் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் சான்று அளிக்கின்றனர்.

* Adenosine என்ற வேதிப்பொருள் ரத்த செல்கள் கட்டியாக மாறுவதைத் தடுக்கிறது. இந்த அடினோசின் முலாம்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. எனவே, இதய நோய்கள் நம்மை நெருங்காமல் காத்து நீண்ட ஆயுளைத் தரவும் இக்கனி வாழ வழி செய்கிறது.

* பலா, மாம்பழம், வாழை என மற்ற கனிகளில் இருப்பதைவிட, முலாம்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆகவே, அளவுக்கு அதிகமான உடல் எடையால் அவதிப்பட்டு வருபவர்கள், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும் என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

* வெயில், மழை, பனி முதலான இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து, நம்மைக் கண்ணும்கருத்துமாகப் பாதுகாப்பது நம்முடைய சருமம். இத்தகைய சரும நலனைக் காக்கும் நண்பனாக இதிலுள்ள கொலஜன் என்ற வேதிப்பொருள் பயன்படுகிறது. உடலில், ஆங்காங்கே ஏற்படும் காயங்கள், சொறி மற்றும் சிரங்குகளை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

* உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி முலாம்பழத் துண்டுகளை, 3 கப்புக்கும் மேலாக ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், பார்வை இழப்பை உண்டாக்குகிற Macular degeneration முதுமைப்பருவத்தில் வராது என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

* முலாம்பழச் சாறுடன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டு வர கீல்வாதம் சரியாகும். இதில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளதால் கோடைக்காலத்தில் உடல் சூட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் மூளைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தொடர்ந்து அனுப்பி, அந்த உறுப்பு சோர்வடையாமலும் பார்த்துக் கொள்கிறது.

* கண்களின் நலம் காக்க அதிகளவில் தேவைப்படும் வைட்டமின்-ஏ என்பது நாம் அறிந்த விஷயம்தான். இந்த வைட்டமின் ஏ முலாம்பழத்தில் பீட்டா கரோட்டின் வடிவத்தில் காணப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதில் காணப்படுகிற வைட்டமின்-பி உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

* வைட்டமின்-சி எனும் ஆன்டி ஆக்சிடண்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகின்றன.  

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு குளுக்கோஸ் மற்றும் கலோரி உள்ள உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், எந்த நேரமும் சோர்வாகக் காணப்படுவார்கள். அக்குறைபாட்டைச் சரி செய்ய டாக்டர்கள் இவர்களுக்குக் கிர்ணி பழத்தைப் பரிந்துரை செய்கிறார்கள்.  

* பசி இன்மை, உடல் எடை குறைதல், மலச்சிக்கல், அல்சர் முதலான குறைபாடுகளைச் சரி செய்யும் ஆற்றல் வாய்ந்தது இக்கனி. எனவே, எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் முலாம்பழத்தை அடிக்கடி தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

* முலாம்பழத்துடன் இஞ்சி சாறு, சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வர, நாள்பட்ட குடல்நோய் மற்றும் வயிற்றுப்பொருமல் ஆகியவை குணப்படுத்தப்படும்.

* முலாம்பழத்தின் விதைகளைத் தேனில் ஊற வைத்து, தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் மெல்லமெல்ல மறையத் தொடங்கும் எனவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டு உள்ளது.

தொகுப்பு : விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்