SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளழகை உலகறிய செய்யுங்கள்!

2019-04-15@ 17:15:55

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘குண்டாக இருப்பதும், மிக மெலிந்து காணப்படுவதும், கருப்பாக இருப்பதாக நினைப்பதும், முக வசீகரமற்றவராகவும், உங்கள் பார்வைக்கு அழகற்றவராக காட்டுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் தோற்றத்தைப்பற்றிய குறைந்த மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் உளவியல் மருத்துவர் லீனா ஜஸ்டின். உடல் தோற்றம் பற்றிய மதிப்பீடுகள் எப்படியெல்லாம் ஒரு மனிதரை பாதிக்கிறது என்பதையும், அதிலிருந்து வெளிவரும் வழிகளையும் இங்கே விளக்குகிறார்.

‘‘தோற்றத்தைப் பற்றிய நல்ல சுய மதிப்பீடு தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது என்பதை உளவியலும் சொல்கிறது. தோற்றப்பொலிவு என்பது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே உருவத்துடன், நிறத்துடன், முக அமைப்புடனேயே உங்களை அழகாக உணர்த்துவதேயாகும். மாறாக தோற்றத்தை மேம்படுத்துவதாக நினைத்து தங்கள் நிஜத்தையே இழப்பது இல்லை.

அழகற்றவர் என்று யாருமில்லை தன்னை அழகாக உணர தெரியாதவர்கள்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமாகி வரும் அழகின் அட்லஸ்(Atlas of beauty) என்ற புத்தகத்தின் எழுத்தாளரும் புகைப்பட கலைஞருமான மிஹல்லா நோராக் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள பலதரப்பட்ட பெண்களையும் புகைப்படம் எடுத்து அதை தம் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். பெண்கள் தம் இயல்பான அழகில் இருப்பதே சிறந்தது என்பதையே அவரது இந்த புத்தகம் பதிவு செய்துள்ளது.  

தாம் அழகற்றவர் என்ற எண்ணமே ஒருவரது தன்னம்பிக்கையை தகர்த்து விடும் என்பதுதான் பலரது வாதம். நிறம் தன்னம்பிக்கையூட்டுவதாக ஒரு விளம்பரம் 1970-ம் ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. அழகற்றவராக இருந்தாலும் தம் திறமையை நிரூபிக்கும் ஒவ்வொரு கணமும் தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்க துவங்கி, நாம் அடையும் வெற்றியின் மூலம், புற அழகை உலகம் ஒரு பொருட்டாகவே பார்க்காமல் போகச் செய்து விட முடியும். அதற்கு சார்லி சாப்ளின் மிக சிறந்த உதாரணம்.

நீங்கள் பிறரை சந்திக்கும் முதலிரண்டு மூன்று நிமிடங்கள் தான் உங்கள் புறத்தோற்றம் பேச வேண்டும். அதன் பிறகு, உங்களுக்குள் இருக்கும் விஷய ஞானம்தான் வெளிப்பட வேண்டும். பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் அழகை மேம்படுத்த நீங்கள் எடுத்த முயற்சியே வெளியில் தெரியுமானால் உங்களிடம் சரக்கு இல்லை என்றுதானே பொருள்.

உளவியல் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம் கல்வி. உலக அறிவில் சிறந்த மனிதர்கள் தங்களது புற அழகைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. மாறாக, மிகச்சிறந்த மனநலத்துடன் இருக்கிறார்கள். அதே நேரம் அழகானவர்கள் என்று உலகம் ஆராதிக்கும் நபர்கள் மிக மோசமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கு பல நிரூபணங்கள் இருக்கின்றன.  

அதேபோல ஒருவரின் உருவ அமைப்பை கேலி செய்து சொல்லப்படும் வார்த்தைகள் அவரின் திறமையை வெளிக்காட்டுவதை தடுக்கக்கூடாது. உடல் பருமன் என்பது ஏதோ உலக மகா குற்றம் போல் இன்றைய விளம்பர உலகில்  காட்சிப்படுத்தப்படுகிறது. மெலிந்த உடல் தோற்றம் வேண்டி தொடர்ந்து பல முயற்சியெடுக்கும் ஒருவர் அனோரெக்சியா நெர்வோசா என்ற தீவிர மன நோய்க்கு ஆளாகும் அபாயமுள்ளது. தங்களை அழகாக்கும் முயற்சியால்
உயிரிழந்தவர்களும் கூட உண்டு.

அழகற்றவர்கள் என்று ஒதுக்கப்படுபவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து ஒரே விதமான விமர்சனங்கள் சொல்லப்படும்போது அதையே தம் குறைவாக நினைத்து தாழ்வு மனப்பான்மையில் குறுகிப்போகிறவர்கள் ஏராளம். எனவே, இன்றிலிருந்து யாரையும் உருவத்தை வைத்து விளையாட்டாகக் கூட இழிவாக பேச மாட்டேன் என உறுதியெடுங்கள். எதிர்மறையாக சொல்லப்படும் வர்ணனைகள்(சப்பை மூக்கு, தெற்றுப்பல், ஒன்றரைக்கண்) எல்லாவற்றையும் அதிர்ஷ்டம் என்றே நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

இப்படி உடல் எடையை குறைப்பதிலும், தோற்றப்பொலிவை அதிகரிக்கவும் நாம் எடுக்கும் மெனக்கெடல்களில்  மனப்பதற்றத்தில் சிக்கிக்கொண்டு வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. இசை கற்பது, பேட்மின்டன் விளையாடுவது அல்லது புத்தகம் வாசிப்பது என்று பல ஆசைகள் இருக்கும். எழுத்தாளனாகவோ, விளையாட்டு வீரனாகவோ, இசைக்கலைஞனாகவோ வர வேண்டும் என்ற லட்சியங்கள் உங்களுக்கு இருக்கலாம் அல்லது அடுத்த 10 வருடங்களில், ஒரு உயர் பதவியில் உட்கார வேண்டும் என்ற குறிக்கோளாகக்கூட இருக்கலாம்.

இதையெல்லாம் மறந்துவிட்டு, நம் தோற்றத்தைப் பற்றிய மன உளைச்சலிலேயே உழன்று கொண்டு, வாழ்க்கையின் பெரும்பகுதியை அதிலேயே தொலைத்துவிடுவோம். தோற்றம் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.தோற்றத்தைக் குறித்த விமர்சனங்களால் மனம் சோர்வடைத்திருக்கிறீர்களா? அதிலிருந்து வெளிவர நீங்கள் செய்ய வேண்டியவை இதோ…

* உங்களது பலம், திறமை என்ன என்பதை ஒரு தாளில் எழுதுங்கள். அதில் உங்கள் நற்குணங்கள் தவறாமல் இடம் பெறட்டும்.

* உங்களுக்குள் இருக்கும் பெரிய பலம் என்ன என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆமாம் என்றால் அதை உலகிற்கு நிரூபிக்க என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள் என்று எழுதுங்கள் இல்லை என்றால் இன்றைக்கு ஒரு சுய தேடலை துவங்குங்கள்.

* உங்களால் உங்கள் உறவுகள் நட்பு வட்டாரம் அடைகிற நன்மைகளை எழுதுங்கள். நீங்கள் இந்த உலகுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணருங்கள்.

* நீங்கள் அழகற்றவர் என்ற நினைவை ஏற்படுத்தும் நபர்களின் பெயர்களையும் அவர்களது விமர்சனங்களையும், எழுதுங்கள். அதில் உங்களை முன்னேற்றும் விமர்சனங்களை மட்டும் பிரித்தெடுங்கள். அதை சரி செய்ய நீங்கள் எடுக்கப்போகும் முயற்சிகளையும் எழுதுங்கள்.

* உங்கள் தன்னம்பிக்கையை கெடுக்கும் மற்ற விமர்சனங்களையும், அதை சொல்பர்களின் பெயர்களையும் எழுதி நன்றாக படித்து பார்த்தபின் கிழித்து போடுங்கள்.

லட்சோபட்ச உயிரணுவின் போட்டிக்கிடையே, மனிதனாய் மண்ணில் பிறந்துள்ள உங்களை அழகற்றவர் என்று குறைத்து மதிப்பிடுபவர் முன் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் வாயடைத்து விடுங்கள். உங்களுக்குள் இருக்கும் உள்ளழகை உலகறியச் செய்யுங்கள். எண்ணங்கள் அழகானால் எல்லாமும் அழகாகி விடாதா?!

- என்.ஹரிஹரன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்