SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்துக்கு வந்திருக்கும் வியட்நாம் சர்ச்சை மீன்லயும் பிராய்லர்?

2019-03-14@ 14:14:43

நன்றி குங்குமம் டாக்டர்

‘பிராய்லர் கோழி’ பற்றி அவ்வப்போது திடீர் சர்ச்சைகள் எழுவதும், பின்பு அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல் இப்போது புதிதாகக் கிளம்பியுள்ளது ‘பிராய்லர் மீன்’ சர்ச்சை. பெருகி வரும் மக்கள் தொகையின் அசைவ தேவையை நிறைவு செய்ய கறிக்கோழிக்கென்று சந்தை உருவானது.

இதில் அதிக லாபத்தை ஈட்ட ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு, நோயில்லாத ‘பிராய்லர்’ கோழியை உருவாக்குகிறார்கள் என்று தொடர்ந்து மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. இப்போது அதேவழியில் சர்ச்சைக்கு விதை போட்டிருக்கிறது வியட்நாமில் இருந்து இறக்குமதியாகியிருக்கும் Basa fish.

Pangasius fish என்றும் குறிப்பிடப்படும் இந்த மீன் ஆன்ட்டிபயாடிக் இன்ஜக்‌ஷன், எடையைக் கூட்ட ஹார்மோன் ஊசிகள் செலுத்தியும், பதப்படுத்துவதற்காக ஏகப்பட்ட ரசாயனங்களில் ஊறவைப்பதோடு, அதை பனியில் உறையச் செய்து ஃப்ரோஸன்(Frozen) மீனாக பெரிய, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பதாகவும் தெரிகிறது.

இதுவும் பிராய்லர் முறையிலேயே வளர்க்கப்படுவதாகவும், விற்பனையாவதாகவும் செய்திகள் வருகின்றன. மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் இந்த மீன் கேடு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். இதன் அபாயம் உணர்ந்து பெரிய ஓட்டல்களில் சமைப்பதை நிறுத்திவிட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

விதையில்லா திராட்சை, மாதுளை என்று பழங்களில் இருப்பதைப் போலவே முள்ளில்லா மீன் என்ற சிறப்பு அந்தஸ்து, நம்மூரின் வஞ்சிரம், கெளுத்தி போன்ற மீன்வகைகளின் விலையை விட மிகவும் மலிவு, அதிக எடை, என்ற பலப்பல காரணங்களால் குறுகிய காலத்தில் மக்களிடையே மிகப்பிரபலமும் அடைந்துவிட்டது இந்த ‘பாஸா மீன்’.

பொதுவாகவே, மருத்துவர்கள் அசைவ உணவிலேயே மிகவும் சத்துமிக்கதும், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிகுந்தும் உள்ள மீனை சிறந்த உணவாக பரிந்துரைப்பார்கள். இதனால் மீன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, அதற்கான தேவையையும் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மீன் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அதிக எடையுடன், விற்பனையில் கூடுதல் லாபம் பார்க்க முடிவதால் மீன் வியாபாரிகளிடத்திலும் ஸ்டார் வேல்யூவை பெற்றிருக்கிறது இந்த ‘பாஸா மீன்’.

நம்மூர் மீன்களைப்போல் இல்லாமல், பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று, மீனுக்குரிய வாசனையே இல்லாமல், முட்கள் இல்லாமல் எந்த நிறத்திலும், எத்தகைய சுவையிலும் விதவிதமாக சமைக்க முடிகிறது என்பதால் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலும் இதற்கு மவுசு
அதிகம் என்கிறார்கள்.

இப்படி அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ள பாஸா மீனை ஒரு மாதத்திற்கு சுமார் 5000 டன் வரை நம்நாட்டிற்கு இறக்குமதி செய்கிறோம். கடல்சூழ் நாடான நம் நாட்டிலேயே கிட்டத்தட்ட 3000 வகை மீன்கள் கிடைக்கும்போது, வியட்நாம், தாய்லாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. கூடவே, இதில் கொழுப்புச்சத்து அதிகம். மீனில் இருக்க வேண்டிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் இல்லவே இல்லை. தொடர்ந்து உண்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பன போன்ற ஆரோக்கியம் சம்பந்தமான சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதன் தரம், ஊட்டச்சத்து, கலக்கப்படும் ரசாயனங்கள், அதனால் வரும் நோய்கள் போன்ற சந்தேகங்களை தீர்க்கிறார்கள் துறைசார்ந்த வல்லுநர்கள்…
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய அலுவலர் கதிரவனிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘விவசாய விளைபொருள் அல்லது மீன் வளர்ப்பு போன்றவை தயாரிப்பு நிலையில் இருக்கும்போது முதல்நிலை உணவாக (Primary food) இருப்பதால் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்குள் வராது. அந்தப் பொருள் விற்பனைக்கு வரும்போதுதான் நாங்கள் தலையிட்டு தரத்தை சோதிக்க முடியும். பண்ணையில் மீன் உற்பத்தி செய்யும் நிலையில், அது முதல்நிலை உணவாகிறது என்பதால், மீன்வளத்துறை அமைச்சகம்தான் சுத்தமான தண்ணீரில் வளர்க்கிறார்களா? தரமான தீவனம் போடுகிறார்களா மற்றும் ஆன்ட்டிபயாடிக், ஹார்மோன் ஊசிகள் மீன்களுக்கு போடப்படுகிறதா? போன்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே மீன் விற்பனைக்கு வரும்போது, ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து சேர்க்கப்பட்டிருக்கிறதா? அல்லது கன உலோகங்கள் இருக்கிறதா போன்றவற்றின் நிலையை நாங்கள் சோதிக்க முடியும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மீனில் பாமாலின் தடவி விற்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்தபோது, நாங்கள் எல்லா கடைகளிலும் சோதனை மேற்கொண்டோம். கடை, மீன்சந்தைகளில் விற்கப்படும் மீன்களில் இதுபோல் ரசாயனம் சேர்த்திருக்கிறார்களா? அல்லது பதப்படுத்தலில் ப்ரிசர்வேடிவ் சேர்த்திருக்கிறார்களா என்று சோதனை மேற்கொள்வோம். பாதரசம் போன்று ஏதாவது கலப்படம் (Contamination) ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் சோதிப்போம்.

மீன் பண்ணைகளில் வைத்து மீன்கள் வளர்க்கப்படும் நிலையில்தான் தவறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நம் நாட்டு மீன் வகைகளான வஜ்ரம், மத்தி போன்ற மீன் வகைகளில் இல்லாத சத்து இந்த பாஸா மீன் வகைகளில் கிடைத்துவிடப் போவதில்லை. மேலும் இவ்வகை மீன்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால், அதன் நீண்ட நாள் பாதுகாப்பிற்காக, கண்டிப்பாக ப்ரிசர்வேடிவ் கலக்காமல் இருக்க முடியாது.

அதற்கு பதில், நம் நாட்டில், நம் அருகில் கிடைக்கக்கூடிய மீன் வகைகளை உணவில் எடுத்துக் கொள்வது நமக்கு மிக பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வகை மீன்களை இப்போது ஆந்திரா மாநிலத்தில் பண்ணைகளில் வளர்த்து சந்தைக்கு கொண்டுவருவதாகத் தெரிகிறது. அங்கு உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமானதாக இருக்கிறதா? கொடுக்கும் தீவனங்களும் கழிவுப்பொருட்களாக இருக்குமோ? என்பதும் சந்தேகத்திற்கு இடமான விஷயமாக இருக்கிறது’’.

புற்றுநோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சியாளருமான மருத்துவர் விதுபாலாவிடம் பாஸா மீன் பற்றி கேட்டோம்...‘‘கோழி நல்லதா கெட்டதா? என்று கேட்டால் கோழி நல்லதுதான். கோழி மாதிரி வளர்க்கிற பொருள்தான் கெட்டது. அதுமாதிரிதான் பாஸா மீனில் தவறில்லை. அதை வளர்ப்பதில்தான் தவறு உள்ளது. நிறைய ரசாயனங்களை கலந்து, கிட்டத்தட்ட பிராய்லர் கோழியை எப்படி வளர்க்கிறார்களோ அதேபோல்தான் இந்த மீனையும் வளர்க்கிறார்கள். எந்த ஒரு சத்தும் கிடைப்பதில்லை.

ஆறு, கடல், குளங்களில் தானாக வளரும் மீனில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிகமாக லாபம் ஈட்ட நினைக்கும் சில வியாபாரிகள், எப்படி கெமிக்கல் உரங்களைப் போட்டு பயிர்களை வளர்க்கிறார்களோ, அதைப்போலவே செயற்கை குளம் கட்டி, பண்ணைகளில் மீன்களையும் வளர்க்கிறார்கள்.

இதுபோல் பண்ணையில் வளர்க்கும் மீன்களுக்கு கட்டுப்பாடான சூழலில், கட்டுப்பாடான உணவுகளைக் கொடுத்துதான் வளர்க்க முடியும். 4 மாதத்தில் குறிப்பிட்ட எடை வர வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் மீறி லாபமும் எடுத்தாக வேண்டும் என்கிறபோது இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள். மற்ற மீன்களைவிட அதிக லாபம் கொடுக்கும் என்பதால் பாஸா மீன்களை வளர்க்கிறார்கள்.

இப்போது கல்கத்தா மற்றும் ஆந்திராவில் சில நகரங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக மீனில் புரதம்தான் அதிகம் இருக்கும். ஆனால், இதில் முழுவதும் கொழுப்பு சத்துதான் அதிகம் உள்ளது. இறக்குமதி செய்யப்படுவதில் ஹைப்போதலமஸ் என்ற வகைதான் பெருமளவில் இருக்கிறது.

மீன் என்றாலே முள்தான். ஆனால், பாஸா மீனில் முள்ளே கிடையாது. வெறும் சதைப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து  இறக்குமதி செய்கிறார்கள். கலரை ப்ளீச் செய்து எடுத்து வெள்ளையாக்கிவிடுகிறார்கள். இதற்கு காரணம் ஹோட்டல்களில் நினைத்த நிறத்தில், நினைத்த வெரைட்டியில் மெனு தயாரிக்க முடியும் என்பதே. இந்த மீனை வைத்துதான் ஃபிங்கர் ஃபிஷ், ஃபிஷ் டிக்கா போன்ற வெரைட்டிகளை தயார் செய்வதாக சொல்கிறார்கள்.

பொதுவாக இந்த வகைமீன்கள் எது கிடைக்கிறதோ அதை அதிகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டது. தனக்கு அருகில் இருக்கும் கழிவுகளைக்கூட சாப்பிட நேரிடும் என்பதால் அதன் மூலம் நமக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புண்டு. மீன் வளர்ப்பில் Soaking என்று ஒரு முறை உள்ளது. சோடியம் ட்ராபலிலிபாஸ்பேட்(STPP) என்னும் ரசாயனம், துப்புரவுப் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு சிகிச்சை ஆகியவற்றின் உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பாஸ்பேட் கெமிக்கலை போட்டு 12 மணிநேரம் வரை  மீன்களை ஊற வைப்பார்கள்.

அப்படி ஊற வைக்கும்போது செதில்கள் வழியாக உள்ளே செல்லும் தண்ணீரை உள்ளே தக்க வைத்துக் கொள்ளும். இதனால் 1 கிலோவாக இருக்கும் மீனின் எடை 1 கிலோ 400 கிராம் வரை கூடும்.

இதைத்தவிர இறக்குமதி செய்வதற்கு முன் ப்ரசர்வேஷன் கட்டத்தில் சிட்ரிக் ஆசிட், ஹைட்ரஜன் பெராக்சைட், பென்டா பாஸ்பேட், சோடியம் ட்ரை பாலி பாஸ்பேட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள். இதெல்லாம் உடலில் புற்றுநோய் உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மீனில் விஷத்தன்மை இல்லை என்றாலும், ஏற்றுமதி செய்யும் போது பேக்கிங்கிற்காக சேர்க்கப்படும் பாஸ்பேட் ரசாயனங்களாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் கலந்துள்ள 2A குரூப்பிற்கு கீழ் வரும் கார்சினோஜென்(Carcinogen) மனிதனுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக இந்த மீனை சாப்பிட்டவர்களிடம் நிறைய ஆய்வுகளை  மேற்கொண்டு கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நம் இந்தியாவில் இருப்பதாக ஆதாரம் இல்லை என்று வாதிடலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை எப்போது தெரிய வரும் என்றால், இந்த மீனை அளவிற்கதிகமாக சாப்பிட்டு பல பேர் உயிரிழந்த பின்புதான், இதனால் புற்றுநோய் வந்து இறந்திருக்கிறார்கள் என்பதை காலம் கடந்து அறிந்துகொள்வோம். 8 மாதம் வரை வளர்க்க வேண்டிய மீனை ஹார்மோன் ஊசிகள் போட்டு 4 மாதங்களுக்குள்ளாகவே வளர்த்தெடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். மீன்களுக்கு போடும் ஹார்மோன் ஊசி, மனிதர்களிடத்திலும் பக்க விளைவை ஏற்படுத்தும்.

 இது குறைந்த ஆக்ஸிஜனிலேயே எந்தவிதமான சூழலிலும் வளரக்கூடிய மீன் என்பதால், கோழியின் கழிவுகள், இறந்துபோன ஆடு, மாடு இறைச்சி என எதை வேண்டுமானாலும் போட்டு வளர்க்கிறார்கள். வளர்க்கும் நிலையில் ஆன்ட்டிபயாட்டிக் ஊசி, ஹார்மோன் ஊசி, பதப்படுத்தும்போது கலக்கும் ரசாயனம், பேக்கிங்கில் சேர்க்கப்படும் ரசாயனம் என எல்லா நிலைகளிலுமே மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில்தான் பாஸா மீனில் சேர்க்கிறார்கள். மீனில் ஒமேகா 3  ஒமேகா 6 இரண்டும் 1:1 விகிதத்தில் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவு என்று சொல்லப்படுகிறது. ஆனால், பாஸா மீனில் அப்படியில்லை.

எந்த விதத்திலும பயன் கிடையாது என்கிறபோது அது எந்த வகையில் ஆரோக்கியமானதாக இருக்க முடியும்? மீன் என்று சொல்லி ஒரு பொருளை விற்கிறார்களே தவிர அது மீனே இல்லை. உண்மையில் சத்துள்ள மீன் சாப்பிட வேண்டும் என்றால் நமக்கு அருகில் கிடைக்கக்கூடிய மீனை வாங்கி சோம்பல் இல்லாமல் முள்ளை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டுமே தவிர, இதுபோல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக பாஸா மீனின் பாதுகாப்புத் தன்மையை மத்திய மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகள்தான் உறுதி செய்ய வேண்டும்’’ என்கிறார்.

உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனின் கருத்து இதிலிருந்து சற்று மாறுபடுகிறது. ‘‘மற்ற மீன்களைப்போலவே பாஸா மீன் வகைகளிலும் கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டீன் மற்று கார்போஹைட்ரேட் என அனைத்து ஊட்டச்சத்துக்களும் மிகுந்துள்ளது. இதில் கலோரி அளவு குறைவு என்பதால் வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் இருக்கும். முள் இல்லாத, சதைப்பகுதி நிறைந்த இந்த மீனை சமைப்பதற்கும் எளிது.

இது வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் நம் நாட்டிற்கு வந்து சேரும் இடைப்பட்ட நாட்களில் கெடாமல் பாதுகாக்க ப்ரசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியாது. வியட்நாம் நம் நாட்டைவிட ஏழை நாடாக இருந்தாலும், அவர்களைப் பொறுத்தவரை தங்கள் நாட்டின் மீது அதிக பற்றும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். தூய்மையை கடுமையாக பின்பற்றுபவர்கள்.

வியட்நாம் நாடு சுற்றுலாத்துறையையும், கடல்சார் உணவு உற்பத்தியையும் மட்டுமே நம்பியிருப்பதால் தங்கள் நாட்டை மிகத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். மீன் வளர்ப்பு பண்ணைகளில் இருக்கும் குளங்களில் தண்ணீரை கண்ணாடி மாதிரி வைத்திருப்பார்கள். நானே 15 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன் என்பதால் இதை அனுபவத்தில் சொல்கிறேன்.

வியட்நாம் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மீன் உணவு ஏற்றுமதி மட்டுமே என்பதால் உற்பத்தியிலிருந்து பேக்கிங் செய்வது வரை ஒவ்வொரு விஷயத்திலும் சுத்தத்தை கடைபிடிக்கிறார்கள். நம்மூரில் வளர்க்கப்படும் மீன்களில் வேண்டுமானால், ரசாயனங்கள், ப்ரசர்வேடிவ்ஸ் எல்லாம் கலக்கப்படலாம். எந்த அளவிற்கு உணவு விஷயத்தில் அக்கறையோடு இருந்தோமோ எல்லாம் போய் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகி, வணிகமயமாகிவிட்டது’’ என்கிறார்.

இதுகுறித்து சென்னை மாநகரின் சில முக்கிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் சிலவற்றையும் தொடர்பு  கொண்டோம். ‘பாஸா மீன் உபயோகத்தை இப்போது நிறுத்திவிட்டோம். விரும்பி கேட்கிறவர்களுக்குத்தான் அந்த மீனைக்கொண்டு டிஷ் தயார் செய்து கொடுக்கிறோம்’ என்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, பிராய்லர் மீனை நேரடியாக வாங்கி உபயோகிப்பது சாதாரண மக்கள்தான் என்பது உறுதியாகிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் விருப்பமான உணவாக இருக்கும் மீனின் தரத்தை அரசுதான் உறுதி செய்ய வேண்டும் என்பதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

- உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்