SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜலதோஷமா?!

2019-03-08@ 12:32:19

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகளுக்கு சராசரியாக வருடத்தில் 6 முறையும், பெரியவர்களுக்கு குறைந்தது 3 முறையும் ஜலதோஷம் உண்டாவது சாதாரணமானது என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் ஆரோக்கியமான நபராக இருந்தாலும் அவருக்கும் வருடத்தில் ஒன்றிரண்டு முறையாவது ஜலதோஷம் வந்துவிடுகிறது.
ஜலதோஷம் வருவது சாதாரணமானது என்கிற மருத்துவ விளக்கம் எல்லாம் சரிதான். வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொண்டு விரட்டிவிடலாமா என்ற சந்தேகங்களுக்கான பதிலையும் மருத்துவர்கள் வைத்திருக்கிறார்கள். ஜலதோஷத்திற்கான காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் பொதுவான அறிகுறிகளை இப்படி வகைப்படுத்தலாம்.

* தும்மல் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல்

* கண்கள் சிவந்து போவது

* தொண்டை கரகரப்பு

* இருமல்

* தலைவலி மற்றும் உடல்வலி

ஜலதோஷம் பெரும்பாலும் ஒரு வாரம் நீடிக்கும். பெரும்பான்மையான ஜலதோஷத்துக்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை. எல்லா ஜலதோஷத்திற்கும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தீர்வாகாது. அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் அதன் தன்மையை கவனியுங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்கு வருடத்தின் பல நாட்கள் ஜலதோஷம் இருப்பது போலவும், அதன் அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேலாகவும் தொடர்வது போலவும் உணர்ந்தால் அலர்ஜி காரணமாக இருக்கலாம். சைனஸ் பிரச்னையும் காரணமாகலாம். இவை இரண்டும் முறையான மற்றும் தொடர் சிகிச்சைக்கு மட்டுமே கட்டுப்படும். சில நேரங்களில் ஜலதோஷம் நிமோனியா போன்ற மோசமான நோய்களை உண்டாக்கலாம். எனவே, அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

ஜலதோஷம் பிடித்தால் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் இவை...


முதல் வேலையாக போதுமான அளவு ஓய்வெடுங்கள். உங்கள் வழக்கமான வேலைகளின் வேகத்தை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். அதற்காக படுத்த படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வழக்கமான வேலைகளில் அதே வேகத்துடன் ஈடுபட்டு மற்றவர்களுக்கும் உங்கள் ஜலதோஷத்தை பரப்பி விட வேண்டாம்.

ஜலதோஷம் பிடித்தால் திரவ உணவுகளின் அளவை அதிகப்படுத்துங்கள். வெந்நீர், மூலிகை டீ, சூப் போன்றவற்றை அடிக்கடி குடிப்பது அடைத்துக் கொண்ட மூக்குக்கும், தலைவலிக்கும் நிவாரணம் தரும்.

தலைவலி மற்றும் உடல் வலி அதிகமாக இருந்தால் பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்பிரின் மாத்திரையை மருத்துவ ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஜலதோஷம் பிடித்தால் சிலர் குளிப்பதையே தவிர்ப்பார்கள். அது மிகவும் தவறு. ஜலதோஷம் இருக்கும்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வெந்நீரில் குளிப்பது மூக்கடைப்பு மற்றும் தலைவலியின் தீவிரத்தை குறைக்கும்.

தொண்டையில் சளி அடைப்பது போல உணர்ந்தால் அடிக்கடி வெந்நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்கலாம்.

ஜலதோஷம் இருக்கும்போது பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கைக்குட்டைகளை தனியே துவைக்க வேண்டும். அப்போதுதான் ஜலதோஷம் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும்.

ஜலதோஷத்தின் காரணமாக சிலருக்கு மூக்குப் பகுதி சிவந்து புண்ணாகி விடும். அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி தடவுவது இதம் தரும்.

2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஜலதோஷத்தை விரட்டும் மருந்துகளை நீங்களாகவே கொடுக்கக்கூடாது. மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் தரும் Nasal Spray போன்றவற்றை மூன்று நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஜலதோஷத்தின் தீவிரத்தில் இருந்து தப்பித்ததாக நினைத்துக்கொண்டு சிலர் தூக்க மருந்து எடுத்துக் கொள்வார்கள். அதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஜலதோஷம் வராமல் தவிர்க்க...

* அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். குறிப்பாக குளிர்காலத்திலும் உங்களுக்கு அருகில் உள்ள யாருக்காவது ஜலதோஷம் பிடித்திருந்தாலும் உங்களைப் பார்த்துக் கொள்வதில் கூடுதல் அக்கறை தேவை.

* மூக்கு, கண்கள் மற்றும் வாய்ப்பகுதியில் கைகளை வைப்பதைத் தவிர்க்கவும். ஜலதோஷத்துக்கு காரணமான கிருமிகள் இந்தப் பகுதிகளின் வழியே எளிதாக உடலுக்குள் புகுந்துவிடும்.

* தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். ஜலதோஷம் இருக்கும் போதும் உடற்பயிற்சி செய்தால் அதன் தீவிரம் குறையும்.

* புகைப்பழக்கத்தைத் தவிர்க்கவும்.

ராஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்