SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Medical Trends

2019-02-27@ 14:38:49

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்டெதஸ்கோப்பில் கிருமிகள் அதிகமாம் மருத்துவமனைக்குச் செல்வது ஆரோக்கியம் பெறத்தான் என்றாலும், அங்கும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆமாம்… மருத்துவமனையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டெதஸ்கோப்பில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை ஓர் ஆய்வு கண்டறிந்திருக்கிறது. குறிப்பாக, Staphylococcus என்ற பாக்டீரியா அதிகமாம். நோய்த்தொற்று உள்ளவர்களின் உடலிலோ, உடையிலோ தொடர்ந்து உறவாடும் உபகரணமாக ஸ்டெதஸ்கோப் இருக்கிறது என்பது இதற்கு முக்கிய காரணம். பென்சில்வேனியா பல்கலைக்கழகம் செய்திருக்கும் இந்த ஆய்வு Infection Control - Hospital Epidemiology இதழில் வெளியாகி இருக்கிறது. இதனால் பெரிய பிரச்னை ஒன்றும் வரப் போவதில்லை. சருமம் தொடர்பான சாதாரண பிரச்னைகளே வரக்கூடும் என்பது ஆறுதலான செய்தி.

இரவில் பல் துலக்குவது …

காலை, மாலை இரண்டு வேளையும் பல் துலக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதுண்டு. பெரும்பாலானோர் இரவில் பல் துலக்குவதில்லை. ஆனால், இரவில் பல் துலக்குவதே மிகவும் முக்கியமானது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். காரணம், பற்களில் இருக்கும் நுண்கிருமிகளுக்கு நாம் சாப்பிட்ட பிறகே, அவற்றுக்கும் விருந்து கிடைக்கிறதாம். இரவில் எந்த செயல்பாடும் இல்லாமல் நாம் உறங்குவதால் Plaque என்ற பற்களுக்கு இடையேயான கறையை அதிகம் உருவாக்கி சேதப்படுத்துகிறதாம். சுவாசத்தில் துர்நாற்றம், எகிறுகளில் தொற்று அல்லது ரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். முடியாவிட்டால் உணவுத்துகள்கள் எதுவும் பற்களுக்கிடையில் இல்லாத வகையில் நன்கு வாய் கொப்பளித்துவிட்டாவது தூங்குங்க மக்களே…

அதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோய் இல்லை

உணவு, தூக்கம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் புற்றுநோயை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதில் உறங்கும் பழக்கத்துக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடந்திருக்கிறது. ஸ்காட்லாந்தில் நடைபெற்ற NCRI புற்றுநோய் தொடர்பான கருத்தரங்கில் இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 4 லட்சத்துக்கும் அதிகமான பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. போதுமான உறக்கம் அவசியம் என்பதைப் போலவே, 7 அல்லது 8 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கியவர்களிடமும் மார்பகப் புற்றுநோய் அபாயம் 20 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை.

12 மணி நேர டயட்

‘சாப்பிடும் உணவு முறையை மாற்றாவிட்டாலும், குறைந்தபட்சம் சாப்பிடும் நேரத்தை மாற்றியமைப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்’ என்கிறார் feelglourious.com வெப்தளத்தின் முழுநேர சுகாதாரப் பயிற்சியாளரான ஜுலிஸ் ஆன்டர்சன். நம் உடல் கடிகாரம் தினமும் 24 மணிநேர சுழற்சியில் இயங்குகிறது. இரவு உடல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான், செரிமான மண்டலத்தில், சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல் வேலைகள் நடைபெறும். இந்த வேலைகள் செய்வதற்கு நம் உடலை அனுமதிக்கவில்லை என்றால் தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படாமல், அப்படியே உடலில் தங்கி, அழற்சியில் தொடங்கி, இறுதியில் புற்றுநோய்வரை வரக்கூடும். அதற்கு, குறைந்தபட்சம் வின்டோ பீரியடாக ஒரு 12 மணி நேரம் இடைவெளி கொடுக்க வேண்டும் என அறிவியல் ஆராய்ச்சி வலியுறுத்துகிறது. காலை உணவை 8 மணிக்கு எடுத்துக் கொள்வோமேயானால், இரவு 8 மணிக்கு அடுத்த உணவை உண்ணவேண்டும். இரவு 8 மணிக்குப்பிறகு, எதுவும் சாப்பிடக் கூடாது.

மொபைல் வேண்டாம்... மூளையை நம்புங்கள்

பிறந்தநாள், திருமணம் போன்ற முக்கிய தேதிகள், அலுவலகம் சம்பந்தமான நாட்கள், செல்லவேண்டிய இடத்திற்கான வழி, வேண்டியவர்கள் அல்லது முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்கள் என எல்லாவற்றுக்கும் போன் மெமரியில் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இவற்றை உங்கள் நினைவில் தேட பழகுங்கள். அப்படி செய்தால் ஞாபகமறதி நோய் (Dementia) வருவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் குறையும்.

5 முறை சோதனை அவசியம்

உடல் எடை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவு போன்றவை அடிக்கடி ஏற்றத்தாழ்வுடன் மாறுபட்ட அளவுகளில் ஒருவருக்கு இருந்தால், அவர் ஆரோக்கியமானவர் என்றாலும், அவருக்கு மாரடைப்பு வரக்கூடும்’ என்கிறது தென்கொரிய பல்கலைக்கழக ஆய்வு. ரத்த சர்க்கரை அளவு, உயர்ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், உடல் எடையையும் ஒரே சீரான அளவில் பராமரித்து வருவது அவசியம். என்பதால், ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 5 முறையாவது இவற்றை சோதனை செய்துகொள்வது நல்லது.

தயிர் சாதத்துல இவ்ளோ விஷயமா?!

மூளையில் சுரக்கக்கூடிய டிரிப்டோபன்(Tryptophan) என்ற ரசாயனம் தயிர்சாதத்தில் இருப்பதாகப் பெருமை கூறுகிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். டிரிப்டோபன் மூளையை அமைதிப்படுத்தி, சாந்தமான சிந்தனையை உண்டாக்குகிறது. நரம்பணுக்களை மிதமான ஓய்வுடன் ரீசார்ஜும் செய்கிறது. மேற்கத்திய நாடுகளில் தயிருக்குப் பதிலாக இனிப்பு சேர்ந்த யோகர்ட்டை உபயோகிக்கிறார்கள். அதிலிருக்கும் இனிப்பு, நரம்பு செயல்பாடு சமநிலைக்கு ஆபத்தானது என்பதோடு, உயர்செயல்திறனை(Hyperactivity) தூண்டுகிறது. தயிர் சாதம் வெப்ப மண்டல காலநிலைக்குத் தகுந்தவாறு இந்தியர்களின் மூளையை செயல்படுத்துகிறது’ என்கிறது ஓர் ஆய்வு.

கவனம் தேவை

சிறு குழந்தைகள் விளையாடும் போது பொம்மைகளின் கண், மூக்கு பகுதிகளையோ அல்லது குட்டியான ரப்பர், பென்சில் போன்றவற்றையோ காது, மூக்குகளில் போட்டுக் கொள்வார்கள். சில நேரங்களில் சமையலறையில் சிந்தியிருக்கும் பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு போன்ற சிறு பொருட்களைக்கூட போட்டுக் கொள்ளலாம். அப்போது பெற்றோர் தாங்களாகவே கூரிய பொருட்களைக் கொண்டு எடுக்க முயற்சி செய்வது அல்லது காது, மூக்கிற்குள் தண்ணீர், எண்ணெய் விடுவது போன்ற செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. சில நேரங்களில் மூச்சுக்குழாய், நுரையீரலுக்குள் சென்று அழற்சியை ஏற்படுத்திவிடும். அது மிகவும் அபாயமானது. எப்போதும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் விளையாடும்போது எந்த பொருளாவது காணவில்லையென்றாலோ அல்லது குழந்தைக்கு இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தெரிந்தாலோ உடனே மருத்துவரிடம் கூட்டிச் செல்ல
வேண்டும்.

வலியையும் அளக்கலாம்

ஒவ்வொன்றையும் அளப்பதற்கான அளவுகோல்களும், கருவிகளும் நம்மிடையே இருக்கின்றன. அதுபோல், இப்போது வலியையும் அளவிட முடியும் என்கிறார்கள். ‘வலியை அளவிட முடியவில்லை என்றால், அதைச் சரி செய்ய முடியாது’ என்று சொல்லும் வாஷிங்டனைச் சார்ந்த சில்ட்ரன்ஸ் நேஷனல் மெடிக்கல் சென்டரின்  குழந்தை மயக்க மருந்து நிபுணரான டாக்டர் ஜுலியா ஃபிங்க்கல், வலி பரிசோதனை கண் கண்காணிப்பு சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். வலியில் இருக்கும் நோயாளி ஒருவரின் கண் கருவிழி அசைவை வைத்து அவரின் வலியை அளவிடும் மீட்டர் இது. இதைக் கொண்டு அழும் சிறு குழந்தைகளின் கருவிழி மூலம் வலியை அளவிட்டு அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சையை எளிதாக தொடர முடியும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கண்டுபிடித்துள்ள மற்றொரு கருவியான PainoMeter மூலம் வலியின் அளவை மட்டுமல்லாது வலிக்கான காரணம் மற்றும் என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பனவற்றையும் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார் அதன் டைரக்டரான டாக்டர் ஃப்ரான்சிஸ் கோலிஸ்.

சாப்பிட்டவுடன் டீயா?!

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும், சாப்பிட்ட பின்னும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது, செரிமானத்தில் ஈடுபடும் குடல்பகுதிகளின் செயல்பாடுகளை தடை செய்து வயிற்று தொல்லைகள், அசிடிட்டி, வீக்கத்தை உண்டாக்குகிறது. பெருங்குடல் மற்றும் செரிமான பாதையையும் பாதிக்கிறது.

விவாகரத்து வாங்குபவர்களே உஷார்…

விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்கிறவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. குறிப்பாக, விவாகரத்து பெறும் தம்பதிகளில் பெண்களுக்கு அதிகம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இதில் சம்மந்தமில்லாத இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? ஹனிமூன் செல்லும் தம்பதிகளுக்குள் விவாகரத்து ஆவதற்கான வாய்ப்பு குறைகிறதாம்.

ஹெல்த் ரெசிபி கிளப்

இப்போதெல்லாம் ட்ரீட், கொண்டாட்டம் என்கிற வார்த்தைகள் சாதாரணமாகிவிட்டது. கொண்டாடுவதற்கு சின்ன காரணம் கிடைத்தாலும் பிரியாணி, சிக்கன், மட்டன், குளிர்பானங்கள் என்று அதிக கலோரிகளும், கொழுப்புகளும் கொண்ட உணவை வெளுத்துக் கட்டுகிறோம். இப்படி ஆரோக்கியக் கேடாக கொண்டாட்டம் நிகழ்த்துவதை விட ஆரோக்கியமான விருந்தை மேற்கொள்ளலாமே என்று ஆலோசனை சொல்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். வாக்கர்ஸ் கிளப், ஹ்யூமர் கிளப் எது எதற்கோ கிளப் இருக்கிறதே... அதுபோலவே நண்பர்களோடு இணைந்து இந்த ஹெல்த் ரெசிபி கிளப் ஆரம்பியுங்கள். ஆர்கானிக் மற்றும் வேக வைக்காத பச்சைக்காய்கறிகள், க்ளூட்டன் ஃப்ரி, வீகன் என வெவ்வேறு உணவு வகைகளை அதே போல் சுவையாக உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள்.

முகர்ந்தாலே போதும்

உடல் எடை குறைப்பதற்கோ அல்லது வேறு காரணங்களுக்காக உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், கலோரி மிகுந்த ரிச்சான உணவின் மணத்தை முகர்ந்து பார்த்தாலே பசி குறைந்து, அந்த உணவை அளவாக உண்ண முடியும் என்கிறார் சௌத் ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளரான தீபயன் பிஸ்வாஸ். ‘குழந்தைகளையோ, நோயாளிகளையோ குறிப்பிட்ட உணவை சாப்பிட, ஸ்ட்ரிக்ட்டாக ‘நோ’ சொல்வதற்கு பதில் இதுபோல செய்வதால் அவர்கள் அந்த உணவை குறைவாக எடுக்கச் செய்யலாம்’ என்றும் ஆலோசனை சொல்கிறார்.

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்