SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

HCG டயட்

2019-02-25@ 17:17:46

நன்றி குங்குமம் டாக்டர்

உலகம் முழுவதும், உடல் பருமன் சிகிச்சைக்காக விதவிதமான உணவுத்திட்டங்கள், உடற்பயிற்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இருந்தபோதும் அதற்கான சரியான தீர்வை இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்றாக, கடந்த சில வருடங்களாக, உடல் பருமன் சிகிச்சையில் உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் புதிய திட்டமாக HCG டயட் உள்ளது. உணவுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் எடைக் குறைப்பிலிருந்து HCG டயட் பெரிதும் மாறுபட்டது. குறிப்பாக, ஹார்மோனை அடிப்படையாகக் கொண்டது. கருவுற்ற பெண்ணின் முதல் மூன்று மாத கர்ப்பத்தின் நஞ்சுக்கொடியில் Human Chorionic Gonadotropin என்றழைக்கப்படும் இயற்கையாக உற்பத்தியாகும் ஹார்மோன் உள்ளது. பெண்கள் வீட்டிலேயே சுயமாக மேற்கொள்ளும் கர்ப்ப சோதனைகளில் இந்த ஹார்மோன் ஒரு கருவுற்றிருப்பதை அடையாளம் காட்டும் மார்க்கராக வேலை செய்கிறது.

இன்னும் சொல்லப் போனால், ஆண், பெண் இரு பாலரிடத்திலும் உள்ள கருவுறுதல் சிக்கல்களுக்கான (Fertility) சிகிச்சையிலும் இந்த HCG ஹார்மோனை உபயோகிக்கிறார்கள். இந்த ஹார்மோனை உடலினுள் செலுத்துவதன் மூலம் எடை இழப்பை ஏற்படுத்த முடியும். இந்த உத்தியே HCG உணவு திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. முதல் மூன்று மாத கர்ப்பத்தில் இந்த Human Chorionic Gonadotropin ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கும். ஜெர்மனியைச் சார்ந்த, நாளமில்லாச்சுரப்பி சிறப்பு மருத்துவரான டாக்டர் ஆல்பர்ட் சிமியோன்ஸ் இதனை வடிவமைத்துள்ளார். HCG உணவு திட்டத்தைப்பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு, உடல் பருமன் சிகிச்சையில் இது சிறந்த எடை இழப்பு சிகிச்சை என்றும் பரிந்துரைக்கிறார். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றி Pounds and Inches என்ற நூலில் HCG உணவுதிட்டத்தின் விரிவான மெனுவையும் இவர் விளக்கியுள்ளார்…

HCG உணவுத்திட்டத்தில் உள்ள கிளைகோப்ரோடைன் ஹார்மோன், உடலில் சேர்ந்திருக்கும் அசாதாரண கொழுப்புகளை கண்டுபிடிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. 10 முதல் 15 HCG துளிகளை தினமும் 3 வேளை 500 கலோரிகள் உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது கைகள், அடிவயிறு, தொடை, பிட்டம் மற்றும் இரட்டைத்தாடைகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடலாம். தற்போது இந்த HCG மருந்து வாய்வழி உபயோகிக்கும் ட்ராப்ஸ், ஸ்ப்ரே, ஊசி  என பலவடிவங்களில் சந்தையில் கிடைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதோடு, பசி உணர்வே இல்லாமல் அதிக அளவில் கொழுப்பை எரிக்க முடிவதால், உலகம் முழுவதும் HCG டயட்டுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகிறார்கள். டாக்டர் சிமியோன்ஸ் HCG உணவு திட்டத்தை மூன்று
கட்டமாக பிரிக்கிறார்.

Loading Phase

முதல் கட்டத்தில் HCG ட்ராப்ஸுடன் உயர்கொழுப்பு, உயர்கலோரிகள் உள்ள உணவை முதல் 2 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டத்தில் காலை உணவை அளவு கட்டுப்பாடின்றி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Weight Loss Phase

முக்கியமான இந்த 2வது கட்டத்தில், HCG உடன் 500 கலோரி உணவை 3 முதல் 6 வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும். இப்படி அதிரடியாக கலோரி அளவை குறைப்பதால் வெகு சீக்கிரத்திலேயே உடல் எடையை இழக்க முடியும். காஃபி, டீயோடு அன்றைய நாளை தொடங்கும் நீங்கள் காலை உணவை தவிர்த்து, மதிய நேர உணவில் கொழுப்பில்லாத மீன், இறைச்சி, சிக்கன் இவற்றில் ஏதாவது ஒன்று 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு நீர்க் காய்களான வெள்ளரி, முட்டைக்கோஸ், செலரி, தக்காளி, முள்ளங்கி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இடையிடையே ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களையும் சாப்பிடலாம். தேவைப்பட்டால் எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு நாளைக்கு மதியம், இரவு என இரண்டு நேரம் மட்டுமே முழு உணவாக உண்ண வேண்டும்.

Maintenance Phase

இந்த கட்டத்தில் HCG உள்ளுக்கு செலுத்துவதை நிறுத்தி விடலாம். 3 வாரங்களுக்கு, சர்க்கரை, மாவுப்பொருள் இல்லாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். இந்த 3 கட்டங்களை அவரவர் தேவைக்கேற்ப பின்பற்றலாம். உதாரணத்திற்கு ஒருவர் குறைந்த எடையே குறைக்க வேண்டியிருந்தால், அவர் நடு கட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை ஒரு 3 வாரங்கள் மட்டும் பின்பற்றலாம். அதுவே அதிக எடை குறைக்கும் தேவை இருப்பவர் இதே கட்டத்தை 6 வாரங்கள் வரையிலும், அதோடு 3 கட்டங்களையும் மாறி, மாறி பல முறை பின்பற்றுவதன் மூலம் தன்னுடைய லட்சிய எடையிழப்பை அடையலாம். இந்த புதிய HCG உணவுமுறைக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழாமலில்லை. குறிப்பாக, FDA அங்கீகாரம் இதற்கு இல்லை என்பது முக்கியமான விஷயம். HCG தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் பக்கவிளைவுகள் குறித்து, அதிகாரப்பூர்வ முகவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கடுமையான தலைவலி, மயக்கம், மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை அவர்கள் முன் வைக்கிறார்கள். எடை குறைப்புக்காக உணவுத்திட்ட முறைகள், ஆராய்ச்சிகள் என பல டயட் வந்தாலும், இயற்கையான உணவுத்திட்டத்தை பின்பற்றி உடல் எடையை குறைக்கும் முயற்சியே பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்