SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Medical Trends

2019-02-11@ 14:38:02

நன்றி குங்குமம் டாக்டர்

ரைவ் & டிரைவ்


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும் 6 மடங்கு அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் ஸ்மார்ட்போனால் ஏற்படும் கவனச் சிதறலால் ஏற்படுகிறது. இதை தடுத்து உங்களது பயணம் பாதுகாப்பாக அமைய உதவுகிறது ரைவ் என்கிற சாதனம். எனவே, காரில் செல்லும்போது உங்கள் ஸ்மார்ட்போனுடன் ரைவ் சாதனத்தை இணைத்துவிட்டால் அந்த நேரத்தில் வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு ரைவ் பதில் அனுப்பிவிடும்.

பயணம் முடிந்த பிறகு, அதாவது காரிலிருந்து இறங்கிய பிறகு நீங்கள் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கோ திரும்பிய பிறகு நிதானமாக சம்பந்தப்பட்ட நபருடன் பேசலாம். இந்த சாதனமானது சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தக் கருவியை  ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

தொப்பி... தொப்பி...

இரவு நேரங்களில் நெடுந்தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் தூக்கக் கலக்கத்தில் விபத்து ஏற்படுத்தி விடாமல் இருக்க ஒரு பாதுகாப்பு தொப்பியை உருவாக்கியுள்ளது போர்ட் மோட்டார்ஸ் நிறுவனம். பெரும்பாலும் இரவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லாரி மற்றும் டிரக் ஓட்டுநர்களை மனதில் கொண்டே இதனை தயாரித்துள்ளனர். இந்த தொப்பியில் ஒரு சூழல்காட்டி (Gyroscope) மற்றும் துரிதப்படுத்தி (Accelarator) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு தொப்பியை அணிந்து கொண்டு வண்டி ஓட்டும்போது ஓட்டுநர் சிறிது தலை அசைந்து தூக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது அவரது கழுத்து அசைவில் மாறுதல் ஏற்பட்டாலோ உடனடியாக அலாரம் அடிக்க  ஆரம்பித்துவிடும். அதை கவனிக்கவில்லை என்றால் கண்ணை கூசக்கூடிய அளவு அதிகமான வெளிச்சத்தை கண்ணில் அடித்து எழுப்பிவிடும். விரைவில் இந்த Safe Cap உலகமெங்கும் விற்பனைக்கு வரப்போகிறதாம்.  

ஃப்யூரி ஃபையர் பாட்டில்


நாம் செல்கிற இடமெல்லாம் பாதுகாப்பான குடிநீரைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. இந்தக் குறையைப் போக்க உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது லைஃப்ஸ்டிரா பாட்டில். பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணமே தண்ணீர்தான். குடிதண்ணீரில் கலக்கும் பல்வேறு காரணிகள் நமக்கு  உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாட்டிலில் எத்தகைய குடிநீரை பிடித்தாலும், அதை தூய்மையானதாக மாற்றுகிறது இந்த பாட்டில். இதனால் சுகாதாரமில்லாத குடிநீரால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வோர், மலையேற்ற வீரர்கள், சைக்கிளில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வோர்  ஆகியோருக்கு இந்த பாட்டில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பாட்டிலில் உள்ள சுத்திகரிப்பான் நீரில் பரவும் 99.99 சதவிகித புரோடோஸோனை தடுத்துவிடுகிறது. இந்த பாட்டில் அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்றுள்ளது. மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் எடை 168 கிராம் மட்டுமே. இதை செயல்படுத்த மின்சாரமோ,  பேட்டரியோ தேவையில்லை. ஆயிரம் லிட்டர் வரை சுத்தப்படுத்தும் இந்த பாட்டிலின் விலை ரூ. 1,790.

ஜிகா தடுப்பு மருந்து!

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஜிகா வைரஸ் தடுப்பு மருந்தின் பரிசோதனை விரைவில் நடத்தப்பட இருப்பதாக இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் ஜிகா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பாகவே, கடந்த 2016-ல் இதற்கான தடுப்பு மருந்தை  ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்து சாதனை படைத்தது.

தற்போது இந்த மருந்து  மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிய ஜிகா வைரஸ் தொற்று மட்டுமின்றி, ஆப்பிரிக்க ஜிகா வைரஸ் தொற்றிலிருந்தும் பாதுகாக்க முடியும் என்று அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதன் பரிசோதனை முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நல்ல கிருமி

கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து  சத்துக்களை பிரித்தெடுக்க நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது. அதேபோலத்தான் மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ஃப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கவலை வேண்டாம்

தினமும் தவறாமல் கடினமான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்ற  கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அவ்வப்போது, கடினமில்லாத உடற்பயிற்சிகளை செய்தாலேகூட பலன் கிடைக்கும் என்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலில் மெலானோகார்டின் என்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன.

இந்த ஹார்மோன்கள் நாம் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்கும், குளுகோசை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.  உடற்பயிற்சி செய்பவருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ஹார்மோனின் சுரப்பு நீடிப்பதால் உடலுக்கு நல்லவிதமான  தாக்கம் ஏற்படும் என இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுண்ணுயிரி பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் பல பிரச்னைகள் உண்டாகிறது. ஆனால், அதே கடலில் உள்ள நுண்ணுயிரியைக்  கொண்டு இயற்கையான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய முடியும் என்று டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  விஞ்ஞானிகள் கடலில் வளரும் இலைக் கோசு தாவரத்தை ஒருவகை நுண்ணுயிரிக்கு உணவாக அளித்தனர்.

அந்த நுண்ணுயிரிகள் வெளியேற்றும் கழிவில் பி.எச்.ஏ. என்ற உயிரி பிளாஸ்டிக் பாலிமர் இருந்தது. அதைக் கொண்டு தயாரிக்கப்படும் உயிரி பிளாஸ்டிக் விரைவில் சிதைந்து மட்கிப் போகும் தன்மையுடன் இருக்கிறது. மேலும் இந்த வகை  உயிரி பிளாஸ்டிக்கால் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவித நச்சுத் தன்மையும் ஏற்படுவதில்லையாம்.

வைட்டமின் டியும் மனச்சோர்வும்

வைட்டமின் டி சத்துக்குறைவுடன் பிறக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் Schizophrenia எனப்படும் மனச்சிதைவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். குழந்தைக்கு வைட்டமின் டி சத்து கிடைப்பது தாயின் உடலிலிருந்துதான். எனவே, பேறுகாலத்தில் கர்ப்பிணிகள் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாத வண்ணம் சரிவிகித உணவுமுறையுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா சோதனை

பஞ்சு வைத்த குச்சியை மூக்கில் ஒற்றி எடுத்து சோதித்தாலே ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லிவிட முடியும் என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இந்த எளிமையான மூக்கு சோதனை முறையை மேலும் பலரிடம் நடத்தி அதன் துல்லியத்தை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தால் மெல்லிய ஆஸ்துமா இருப்போர்கூட கடுமையான பி.டி.எப். போன்ற சோதனைகளை செய்யாமலேயே ஆஸ்துமா இருப்பதைக் கண்டறியலாம்.

வண்ண வண்ண உணவு

நாம் பார்க்கிற பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் பல்வேறு வண்ணங்களுடன், அழகாக இருப்பதோடு நமக்கு பயனுள்ள வழிகாட்டியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நிற காய்கறிகளும் பழங்களும் ஒவ்வொரு விதமான  ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைவாக கிடைப்பதற்கு அனைத்து வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகரிப்பது நல்லது.

புதிய கருத்தடை மருந்து!

திட்டமிட்ட பிள்ளைப்பேறு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றின் பொறுப்பு பெண் மீதே சுமத்தப்படுகிறது. ஆகவேதான் தற்போது ஆண் கருத்தடை பற்றிய ஆராய்ச்சி மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் புதிய ஜெல் ஒன்றை ஆண் கருத்தடைக்காக உருவாக்கி இருக்கின்றனர்.

NES/T என்ற இந்த புதிய மருந்தை குழந்தைப் பேறை தள்ளிப்போட நினைக்கும் ஆண்கள் தங்கள் கைகள் மற்றும் தோள் பட்டைகளில் ஸ்பிரே செய்து தடவிக் கொள்ளலாம். நெஸ்/டி மருந்தில் உள்ள நெஸ்ட்ரோன் என்ற வேதிப் பொருள் விந்தணு உற்பத்தியை குறைத்து விடுகிறது. அதே சமயம் உடலுறவு சுகத்தை குறைக்காமல் இருக்க நெஸ்/டியில் குறைந்த  அளவுக்கு டெஸ்டரோசோன் என்ற ஹார்மோனும் கலந்திருக்கிறது.

இந்த மருந்தைப் பூசுவதை நிறுத்தினால் மீண்டும் விந்தணு உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பிவரும். முதல் கட்ட  வெள்ளோட்டம் முடிந்து, தற்போது இரண்டாம் கட்டமாக 400 ஆண்களுக்கு நெஸ்/டி ஜெல் ஸ்பிரேயை தந்து ஒரு ஆண்டுக்கு  சோதனை செய்ய விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர். 3-ஆவது கட்ட சோதனையும் செய்த பின் 2022-ல்தான் இந்த மருந்து  கடைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரபணு மாற்றம்

தாவரங்களில் ரூபிஸ்கோ என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம் ஒளிச்சேர்க்கை நிகழும்போது, கார்பன் டையாக்சைடு மூலக்கூறுகளை ஈர்த்து பச்சையம் தயாரிக்கிறது. ஆனால், அவ்வப்போது ஆக்சிஜன் மூலக்கூறுகளையும் அது ஈர்த்து விடுகிறது. இதனால் தாவரங்களின் உடலில் நச்சுகள் சேர்ந்து விடுகின்றன.

இந்த நச்சை ஒளி சுவாசம் - போட்டோ ரெஸ்பைரேஷன் என்ற வேதிவினை மூலம் தாவரங்கள் அகற்ற வேண்டியிருக்கிறது. இந்த வேதிவினைக்காக ஒரு தாவரம் சேகரிக்கும் ஆற்றலில் கணிசமான ஆற்றல் வீணாகிறது. இந்த ஆற்றல் செடியின் வளர்ச்சிக்கு மடைமாற்றப்பட்டால் செடியின் வளர்ச்சியும், அதன் காய், கனி, பூக்கள் போன்றவற்றின் விளைச்சலும் கணிசமாக அதிகரிக்கும். இதற்காக தாவரங்களின் மரபணுவில் எளிய மாற்றத்தை செய்ததன் மூலம் செடிகளின் வளர்ச்சியும், மகசூலும் 40 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்