SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடையை குறைக்க விரும்புகிறவர்களே உஷார்...

2019-02-06@ 16:33:31

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘எனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் திருமணம். என் வருங்காலக் கணவர், நீ குண்டாக இருக்கிறாய், திருமணத்திற்குள் உடல் எடையை குறை என்கிறார். டாக்டர் என்ன செய்யலாம்? என்று டாக்டர்களிடமும் டயட்டீஷியன்களிடமும் கேட்டு வருபவர்கள் அதிகம். இதுபோல ஏராளமான காரணங்களுக்காக உடல் எடையை நினைத்த மாத்திரத்தில் குறைக்க நினைப்பவர்களுக்கு இன்று ஏராளமான டயட் முறைகள் வந்துவிட்டன. அதில் ஒன்று Crash Diet. இது மிகவும் விபரீதமானது’’ என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி கௌதமன்...

Crash Diet என்றால் என்ன?

Crash என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் விபத்து என்று அர்த்தம் தெரியும். பெயரிலேயே ‘விபத்தை’ கொண்டிருக்கும் இந்த உணவுமுறை அத்தகைய ஆபத்தைக் கொண்டதுதான். குறுகிய காலத்தில் துரிதமாக எடையைக் குறைக்க உதவும் உணவுதிட்ட முறை இது என்பதால் இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். தினமும் உணவு மூலம் 700 கலோரிகள் அளவு எடுத்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கம்.

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் இல்லாமல் வெறும் பழச்சாறு, சூப் போன்று திரவ உணவாக எடுத்துக் கொள்வது, ஒரு வாரம் வரை தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றி வரும்போது, உடலில் அதிகப்படியாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றிவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால், நீண்ட கால எடை இழப்புக்கு இந்த கிராஸ் டயட் பயனுடையதல்ல என்பதையும், குறுகிய காலத்திற்கு மட்டும் Crash Diet-ஐ பின்பற்றி தேவையான எடையை குறைக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

பழச்சாறுகள், காய்கறி சாலட் அல்லது சூப் வகைகள், கார்போஹைட்ரேட் அல்லது புரதச்சத்துள்ள உணவுகள் மாமிசம், சோயா பால், மஷ்ரூம் சூப், சிக்கன் சூப், சிக்கன் என இவற்றில் ஏதோ ஒரு உணவை மட்டும் ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக எடுத்துக்
கொள்ளலாம்.

பின் விளைவுகள்...

பொதுவாக ஓர் உணவுக்கட்டுப்பாட்டு முறையை பின்பற்றினால், உடலின் கொழுப்பு மட்டும் கரைய வேண்டுமே தவிர பிற தாதுப்பொருட்கள், புரதம், வைட்டமின்கள் கரையக்கூடாது. Crash Dietட்டில் இருக்கும்போது உடலிலிருந்து தாதுப்பொருட்கள், புரதம், வைட்டமின்கள் அழிவதால் அவர்கள் எப்போதும் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களைச்சுற்றி கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். உடலின் சக்தி குறைந்து, எரிச்சலடைவார்கள்.

அடிக்கடி மனநிலை மாறும் Mood swing பிரச்னை ஏற்படும். Mood Swing பிரச்னை கொண்டவர்கள் இதுபோல் எடை குறைப்புக்காக சரியாக சாப்பிடாதவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இப்படி அதீத கோபம், எரிச்சலோடு இருப்பதால் இவர்களின் அன்றாட வேலைகளும் பாதிக்கப்படும். தன் நண்பர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு நானும் அவர்களைப்போல ஒல்லியாக வேண்டும் என்று பட்டினி கிடந்து சத்துக்களை இழந்து ஆபத்தான நிலையில் மருத்துவரிடம் வருவார்கள். அவர்களுக்கு உடல் எடை வேண்டுமானால் குறைந்திருக்கலாம்.

ஆனால், ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்து, வெள்ளை அணுக்கள் அதிகமாகி, உடல் ஆற்றல் எல்லாம் அழிந்து கேன்சருக்கான அறிகுறி தோன்ற ஆரம்பித்துவிடும். இந்த நிலையை சரி செய்ய கிட்டத்தட்ட ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடும். ஏற்கனவே உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்கள் Crash Diet இருக்கும்போது நிலைமை மேலும் மோசமாகிவிடும். சிலருக்கு முடிகள் கொட்டத் தொடங்கிவிடும். இதெல்லாம் தேவையில்லாத ஒன்றுதானே.

எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி படிப்படியாக எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் 1200 கலோரி உணவு எடுத்துக் கொள்கிறார் என்றால், 1 வாரத்திற்கு 200 கலோரி குறைத்து, 1000 கலோரியாகவும், அடுத்தவாரம் 200 கலோரி குறைக்குமாறு திட்டமிட வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை குறைக்கும்போது உடல் அதற்கேற்ப பிரதிபலிக்கும். ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை கேட்டு உணவு கட்டுப்பாட்டு முறையை தொடங்கினால், அவர் நார்ச்சத்து மிகுந்த, ஊட்டச்சத்து குறையாத முறையை அறிவுறுத்துவார்.

பொதுவாக பருமனாக இருப்பவர்களுக்குப் பார்த்தால் கழுத்து, கழுத்தின் பின்பகுதி, முகவாய்க்கு கீழ், அடிவயிறு போன்ற பகுதிகளில் கொழுப்பு சதை சேர்ந்து மடிப்புகள் நிறைந்து இருக்கும். இவர்கள் தானாகவே, Crash Diet இருப்பதால் உடல் எடை குறைந்தாலும், இந்த பகுதியில் இருக்கும் சதைகள் தொங்க ஆரம்பித்து இருக்கும். முகம் வறண்டு போய் பொலிவிழந்து விடும்.

எனவே, ஊட்டச்சத்து நிபணர் பரிந்துரைப்படி எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால், கொழுப்பு மட்டுமே குறையும். முகம் பொலிவிழக்காமல், சதைகள் தொய்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்போடும், ஆற்றலோடும் செயல்பட முடியும். அப்படியே Crash Diet இருந்து 5, 6 கிலோ எடையை குறைத்தாலும், மறுபடியும் வழக்கமாக சாப்பிட ஆரம்பிக்கும்போது இதைவிட 7 கிலோ வரை எடை அதிகரிக்கும். இது மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிடும். எனவே, திரும்பவும் கட்டுப்பாட்டில் இருக்க ஆரம்பிப்பார்கள்.

இப்படி மாற்றி மாற்றி செய்வதால் உடலின் வளர்சிதை மாற்றம் மோசமடைந்துவிடும். எடை இழப்பு முயற்சியில் வெற்றியைத் தீர்மானிப்பது வளர்சிதை மாற்றம்தான். நெகிழ்வு, சராசரி கடினம் என மூன்றுவகையான வளர்சிதை மாற்றம் இருக்கிறது. ஒருவரின் வளர்சிதை மாற்றம் நெகிழ்வாக இருந்தால், அவர்கள் எளிதில் எடையை குறைத்துவிடலாம். சராசரியாக இருப்பவர்கள் கொஞ்சம் முயற்சிக்க வேண்டும். அதுவே வளர்சிதைமாற்றம் கடினமாக இருப்பவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும்.

இதுபோன்று உணவுக்கட்டுப்பாட்டை அடிக்கடி மாற்றி கடைபிடிப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அதன்பின், என்ன உடற்பயிற்சி செய்தாலும், உணவுக்கட்டுப்பாடு இருந்தாலும், உடல் எடையை குறைக்கவே முடியாது என்ற ஆபத்தான நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

சாதாரணமாக செய்யும் வேலைகளோடு 20 நிமிட வாக்கிங், வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். உணவுக்கட்டுப்பாட்டிலும் இருந்து கொண்டு, ஜிம்மில் சென்று கடினமான உடற்பயிற்சிகளும் செய்தால் உடல் பலவீனமடைந்துவிடும். 2 மாதத்திற்குள் எடை குறைக்க வேண்டும் என விரும்புபவர்களும் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையோடு படிப்படியாக தாங்கள் விரும்பும் உடல் மெலிவை பெற்று விடமுடியும்.

- என்.ஹரிஹரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்