SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்

2019-01-23@ 16:12:16

நன்றி குங்குமம் டாக்டர்

எலும்பே நலம்தானா?!

எலும்புகளில் வெளிப்படையாக ஏற்படுகிற விரிசல்களைத் தாண்டி, நுண்ணிய விரிசல்களும் ஏற்படுவதுண்டு. இதனை ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் (Stress fracture) என்கிறோம். இது நம்முடைய அதீத உடற்பயிற்சியின் ஆர்வத்தாலேயே வரலாம் என்பது வினோதமான உண்மை. உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை நாம் அறிவோம். விளையாட்டு, உடற்பயிற்சி என உடலுக்கு தினமும் ஏதேனும் வேலைகள் கொடுப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் என்பது உண்மைதான். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உடற்பயிற்சி விஷயத்திற்கும் பொருந்தும்.

ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை காட்டுவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கு மீறி உடலை வருத்திக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது நீண்ட தூரம் ஓடுவது அளவுக்கதிகமாக குதிப்பது அளவுக்கதிகமான எடைகளை தூக்குவது போன்றவற்றால் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பிரச்னை வரலாம். அது மட்டுமின்றி ஏற்கனவே எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு (உதாரணத்துக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும்) இந்த பாதிப்பு வரலாம். புதிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஆர்வக்கோளாறில் அளவுக்கதிகமாக செய்தாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

ஸ்ட்ரெஸ் ஃபிராக்சரின் அறிகுறிகள்

முதல் கட்டமாக எலும்பு களில் வலியை உணர்வார்கள். காலப்போக்கில் அது அதிகமாகும். குறிப்பிட்ட சில பகுதிகள் மென்மையாக மாறுவது போன்று உணர்வார்கள். ஓய்வெடுக்கும்போது அது குறையும். தவிர வலியுள்ள பகுதியை சுற்றி வீக்கம் காணப்படும்.

காரணங்கள்

உடற்பயிற்சி அல்லது ஏதேனும் செயலை அளவுக்கு அதிகமாகவும், மிக வேகமாகவும் செய்வதுதான் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் வருவதற்கான முதல் காரணம். இப்படி செய்யும்போது அல்லது அதிக எடையை தூக்கும்போது எலும்புகள் அதற்கேற்ப தன்னை ரீ மாடல் செய்து கொள்ளும். அப்போது எலும்பின் திசுக்கள் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாகும். அழிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் உருவாக தேவைப்படுகிற வழக்கமான கால அவகாசம் கொடுக்கப்படாததே இந்த பிரச்னையின் முக்கியமான காரணம்.

பாதிப்பை அதிகரிக்கக்கூடிய காரணிகள்

* கூடைப்பந்து, டென்னிஸ், நடனம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.  வருடக்கணக்கில் உடலுக்கு வேலையே கொடுக்காமல் திடீரென தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கும் வரலாம்.
* குறிப்பாக, ஒரு வேலையை செய்வதில் அதிக தீவிரமும், அதிக வேகமும் காட்டுபவர்களுக்கு வரும்.
* ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் அசாதாரண நிலை உள்ளவர்களுக்கு வரக்கூடும்.
* தட்டை பாதம் மற்றும் குதிகால் வளைவு பிரச்னை  உள்ளவர்களுக்கு ஸ்ட்ரெஸ்  ஃபிராக்சர் பாதிப்பு வரலாம்.
* ஆஸ்டியோபோரோசிஸ் போன்று எலும்புகளை பலவீனப்படுத்தும் பிரச்னைகளும் இதற்கு காரணமாகலாம்.
* ஏற்கனவே ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு அது மீண்டும் தாக்கக்கூடும்.
* வைட்டமின் டி மற்றும் கால்சியம் பற்றாக்குறையும் ஒரு காரணமாகலாம்.இந்த பாதிப்பு சிலருக்கு முழுமையாக சரியாகாது. கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே, பிரச்னைக்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

ஸ்ட்ரெஸ் ஃபிராக்சரைத் தவிர்க்கும் வழிகள்

* புதிதாக எந்த ஒரு கடினமான வேலையை தொடங்கினாலும், புதிதாக உடற்பயிற்சி ஆரம்பித்தாலும் மிதமான வேகத்தில் செய்வது சிறந்தது. உடற்பயிற்சி செய்கிற நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்க வேண்டும்.
* எப்போதும் உங்கள் கால்களுக்கு பொருத்தமான, வசதியான காலணிகளை அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மாதக்கணக்கில் காலணிகளை மாற்றாமல் உபயோகிப்பவர்களுக்கும் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் வரக்கூடும்.
* பாதங்களில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரத்யேக காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
* உடற்பயிற்சி செய்யும்போது உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அதிகம் இயக்குகிற பயிற்சிகளை கவனத்துடன் செய்ய வேண்டும்.
* இவை எல்லாவற்றையும் விட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பரிசோதனைகள்

* எக்ஸ்ரே முதலில் பரிந்துரைக்கப்படும் பரிசோதனையாகும். ஆனால், அத்தனை துல்லியமாக பாதிப்பை கண்டுபிடிக்க முடியாது. பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மட்டுமே எக்ஸ்ரே உதவும்.

* இரண்டாவதாக எலும்புகளுக்கான ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ. பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் இந்த 2 சோதனைகளையும் பரிந்துரைப்பார்.

சிகிச்சைகள் என்ன?

பிரச்னையின் தீவிரம் குறையும் வரை எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்படாத வகையில் பிரத்யேக காலணிகள் மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கை முறை மாற்றங்கள்

* மருத்துவர் சொல்லும்வரை வலியுள்ள பகுதிக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.
* வலி மற்றும் வீக்கமுள்ள பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
* இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என மருத்துவர் சொன்ன பிறகு மிகமிக மெதுவாகவே உடல் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.
* எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்றாத உடற்பயிற்சிகளை மெதுவாக செய்ய தொடங்கலாம்.

(விசாரிப்போம்)


எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china23

  சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்