SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம்

2018-12-20@ 16:44:26

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழக அளவிலேயே மன நல மருத்துவமனையால் அடையாளம் பெற்ற பகுதி சென்னையிலிருக்கும் கீழ்ப்பாக்கம். கி.பி 17- ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டு, இன்றளவும் சிறப்பாக இயங்கி வரும் இந்த மருத்துவமனைக்குள் ஒரு காலைவேளையில் சுற்றி வந்தோம்.மன நல காப்பகத்தின் இயக்குநரான டாக்டர் பூர்ண சந்திரிகா மருத்துவமனை தொடர்பான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘அயனாவரத்தில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ள மனநல மருத்துவமனை மற்றும் காப்பகம் 225 ஆண்டுகள் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. இந்த மருத்துவமனை மற்றும் மனநல காப்பகம் ஆசியக் கண்டத்திலேயே மிகவும் பெரியதாகும். தமிழகத்திலேயே மனநோயாளிகளுக்கு தகுந்தாற்போல் இயற்கை சூழலையும், அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாத மருத்துவமனையாக இருக்கிறது.

1794-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மனநோயாளிகளுக்கான புகலிடமாக ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 64 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிற இந்தக் காப்பகம், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலேயே 1922-ம் ஆண்டு அரசின் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போது இங்கு சிகிச்சை பெற வந்த பிணியாளர்கள் இந்தியர்கள், இந்தியர்கள் அல்லாதோர்(Non Indian) என பாகுபாடு செய்யப்பட்டனர். அதனடிப்படையில் உணவு முறை மற்றும் சார்ட் இருந்தன.

ஆங்கிலேயர்களிடம் இருந்து, 1947-ம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் பொதுமக்கள் வசதிக்காக, புற நோயாளிகளாக, சிகிச்சை பெறும் வகையில் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. அதன் பிறகு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்ட இந்தக் காப்பகத்தில், 1960-ம் ஆண்டில் இருந்து, இங்கு வருகிற பிணியாளர்களுக்குத் தரமான ஏற்ற சிகிச்சைகளைத் தரும் வகையில், சமூக நலப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1970-ம் ஆண்டிலிருந்து எங்களுடைய காப்பகம் நவீன வசதிகளுடன் வளர்ச்சி அடைய தொடங்கியது. அதன் ஒரு கட்டமாக, முதலில், புற நோயாளிகள் மற்றும் கடுமையான மனநோய் அறிகுறிகளுடன் காணப்படுகிற பிணியாளர்களுக்கான வார்டு (ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக) ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து, 1972-ம் ஆண்டு இங்கு அனுமதிக்கப்படும் பிணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் முறை சிகிச்சை பிரிவு (ITC) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவை விளைவிக்கப்படுகிறது. இந்த பணியில் சிகிச்சை பெறும் மனநோயாளிகளை பங்கெடுக்க வைத்து அவர்களுக்கு தொழில் முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதான் தொழில் முறை சிகிச்சை. மேலும் பேக்கரி தொழில், கேன்டீன் பணி போன்றவை தொழில்வழி சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

Government Mental Hospital என்ற பெயரில் இயங்கி வந்த இந்தக் காப்பகம், 1978-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆரால் Institute Of Mental Health (அரசு மன நல காப்பகம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் காப்பகம், தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் வெறும் 20 நோயாளிகளுடன் மனநல பிணியாளர்களின் புகலிடமாக உருவான  இந்த மனநல மருத்துவமனை, தற்போது 1800 படுக்கை வசதிகள் கொண்டதாக திகழ்ந்து வருகிறது. மேலும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மனநல காப்பகம் என்ற
கூடுதல்  சிறப்பையும் பெற்றிருக்கிறது.

இம்மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்கும். எமர்ஜென்சி மனநல சிகிச்சைப்பிரிவு பகல், இரவென 24 மணி நேரமும் இயங்கும். அதற்கேற்றவாறு, பகல் நேர மருத்துவமனை, இரவுநேர மருத்துவமனை என இது தனித்தனியே செயல்படுகிறது.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு மன நல சிகிச்சைப் பிரிவுகள், எவ்வித தடைகளும் இல்லாமல் செயல்படும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திங்கள் Geriatric & Neuro Psychiatry, செவ்வாய் Child Guidance Clinic / Suicide Prevention Clinic, புதன் De Addiction Clinic, வியாழன் Epilepsy Clinic, வெள்ளி Adolescence Clinic, சனி Neurosis Clinic என ஒவ்வொரு நாளும் தனித்தனியே இயங்கி
வருகின்றன.

இவை தவிர ஆண், பெண் பிணியாளர்களுக்கான பிரிவுகள், மறுவாழ்வு (Rehabilitation), போதை தடுப்பு, மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளி நோயாளர், வலிப்பு நோயாளிகள், மனநலம் குன்றியோர், முதியோர் வார்டு, தீவிர மனநோய் சிகிச்சை, பல் மருத்துவம், முட நீக்கியல் பிரிவு என பல்வேறு பிரிவுகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

எங்களிடம் சிகிச்சை பெற வருபவர்களுக்கு, அவர்களுடைய உடல் மற்றும் மன நலத்தை மட்டும் பேணுவது எங்களுடைய குறிக்கோள் அல்ல. இங்கு வரும் பிணியாளர்களைக் குணமாக்கி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதத்தில், இங்குள்ள  மனநல மருத்துவர்கள் (30 பேர்), உளவியல் நிபுணர்கள் (3 பேர்), நர்ஸ் மற்றும் அட்டெண்டர்(ஆண்-90 பேர், பெண்-20 பேர்-24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மேற்பார்வையில், இப்பிணியாளர்களுக்கு மறுவாழ்வு மைய சிகிச்சை முறைகளில், பிரெட் தயாரித்தல், தோட்டக்கலை, டெய்லரிங், பொம்மை தயாரித்தல், தச்சு தொழில் போன்ற துறைகளில் அவர்களுக்குப் பயிற்சி தருகிறோம். இதன் காரணமாக, வெளியுலகத்தினரோடு, சமூகத்தினரோடு பின்னிப் பிணைந்து, அவர்களுக்கும்,  மற்றவர்களுக்கும் பயன்கள் கிட்டுகிற வகையில் வாழ்கிற சூழல் ஏற்படுகிறது.

இந்த மனநல காப்பகத்தின் கதவுகள், ஒருமுறை திறந்தபிறகு மூடிய கதவாக இல்லாமல், எந்நேரமும் திறந்து மூடக்கூடிய கதவாக இருக்க வேண்டும். அப்போதுதான், சிகிச்சை பெறுவதற்காக உள்ளே வருகிறவர்கள் மற்றொரு வழியாக வெளியே செல்ல முடியும். இதனால்தான் இங்கு சிகிச்சை பெறும் மனநோயாளிகளை மாதத்திற்கு ஒரு முறை அவர்களை அவர்களின் வீட்டுக்கு அழைத்து செல்கிறோம். மேலும் வெளி இடங்களுக்கு அழைத்து செல்கிறோம். மன நோயாளிகள் என்றால் ஒரு இடத்தில் அவர்களை கட்டிப்போடும் முறை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மனநோயாளிகளை வெளிவுலகத்தோடு அனுப்பி வைக்கும்போதுதான் அவர்கள் எளிதில் குணமடைய முடியும் என்பதை உணர்ந்து இதை செய்கிறோம்.

இந்த மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 1000-க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெறுகிறார்கள்’’ என்கிறார். பேராசிரியர் மற்றும் மன நல மருத்துவருமான வெங்கடேஷ் மதன்குமாரிடம் பேசினோம்...‘‘மனநல காப்பகம் என்பது பற்றி நிறைய பேருக்குச் சரியாக தெரியவில்லை. இதற்கு மனம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனம் என்பது நம்முடைய உடலைப் போன்றதுதான். ஆனால், இதற்கு உடல் உறுப்புகள் மாதிரி அமைப்புகள் கிடையாது. மூளையினுடைய வேலையின் கூட்டுத்தொகைதான் மனம் என குறிப்பிடப்படுகிறது.

புற்றுநோய், மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை பரிசோதித்து கண்டுபிடிப்பதுபோல, மனநோயைக் கண்டுபிடிக்க முடியாது. அதே சமயத்தில், மனநோயை சில நடத்தைகள் மூலம் அடையாளம் காணலாம். மனநோயும் உடலில் ஏற்படுகிற நோயைப் போன்றதுதான். உடலில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பிப்பதுபோல்.

ஒருவருக்கு மனதில் என்ன மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துப்போவது நெருங்கிய உறவினர்களின் பொறுப்பு. ஏனென்றால், மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களுக்கு என்ன பிரச்னை வந்துள்ளது என்பது புரியாது. ஆகவே, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை எந்தக் காரணத்துக்காகவும் ஒதுக்கிவிட கூடாது.

மனநோய் என்பது ஒரேயொரு காரணத்தால் வருவது கிடையாது. எனவேதான் இதனை, மனநல மருத்துவர்கள் விரிவாக, Bio-Psycho-Social-Cultural Model எனக் குறிப்பிடுகின்றனர். அதாவது, உடலமைப்பில் பிரச்னை; வளர்ந்த விதத்தில் பிரச்னை; சுற்றுச்சூழலில் பிரச்னை; கலாசாரத்தில் பிரச்னை என இதைச் சொல்லலாம்.

மனநல மருத்துவமனை என்றால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு இருப்பார்கள்; ஆடையில்லாமல் திரிவார்கள் என்றெல்லாம் பலர் கற்பனை செய்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான எண்ணம். இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். போலியோ போன்ற நோய்களுக்கு இருக்கிற மாதிரி இதற்கு தடுப்பு மருந்து கிடையாது. முறையான தூக்கம், மது, சிகரெட் போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல், ஆரோக்கியமான உணவு முறைகள், யோகா போன்ற உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தல் போன்றவற்றை முறையாக கடைப்பிடித்தால், காலம் முழுவதும் மனநோய்க்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நோயின் தீவிரத்தைப் பொறுத்து இது மாறுபடும்’’ என்றார்.

‘‘மன நோயாளிகளைக் குணப்படுத்துவதில் எங்களுக்கு உள்ள பெரிய சிக்கலே அவர்களுடைய உறவினர்கள்தான். ஏனென்றால், இவர்கள் மனநலம் பாதித்தவர் யாராக இருந்தாலும், தங்களுடன் வைத்து கொள்ள முன் வருவது இல்லை. வீட்டைவிட்டு அனுப்பி விடுகின்றனர் அல்லது சித்தம் கலங்கியவர்கள் தாங்களாகவே வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர்.

இவ்வாறு ஆதரவின்றி விடப்படுபவர்களைக் காவல் துறையினர், தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்டு, முழுமையாகக் குணப்படுத்துகிறோம். அதன் பின்னர், குணமடைந்த நபர் தருகிற முகவரியில் விசாரித்தால், அவர்கள் வேறு இடத்துக்குச் சென்று இருப்பார்கள்.

ஒரு வழியாக அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தால் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுவார்கள். அதுமாதிரியான சமயங்களில், அந்த நபருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தருவதுதான் சிக்கலான வேலை. என்னுடைய சர்வீஸில் நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடந்து இருக்கின்றன.

எங்களிடம் வருகிற பிணியாளர்கள் நன்றாக குணமாகி, நெருங்கிய உறவினர்களுடன் கண்ணீர் மல்க செல்லும்போது, அவர்கள் முகத்தில்  தென்படுகின்ற மகிழ்ச்சி ரேகைகளும் மனநல பாதிப்பில் இருந்து முழுவதும் மீண்டவர்கள், ‘சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டோம்; வேலைக்குச் சென்று கைநிறைய பணம் சம்பாதிக்கிறோம்’ என ஸ்வீட் தருவதும்தான் எங்களுக்கு நெகிழ்ச்சி தருகின்ற சம்பவங்கள்’’ என்றார்.

மேலும் அவர் கூறும்போது இந்த மருத்துவமனையில் மனநோயாளிகளின் தற்கொலைகள் மற்றும் அவர்களின் உடல்நலத்தை கருதி அடுக்குமாடிகள் அமைக்கப்படவில்லை எல்லாமும் தரை தளங்களாக இருப்பது தமிழ்நாட்டிலேயே  இதுதான். ஏனெனில், மன நோயாளிகளுக்கான மருத்துவமனை காப்பகம் இப்படிதான் இருக்க வேண்டும். மேலும் அரசிடம் வைத்த சில கோரிக்கைகளை நம்மிடம் சொன்னார்.

‘‘மன நோயாளிகளுக்கான மனமகிழ் மன்றம் என்ற வளாகம் இந்த மருத்துவமனையில் இருக்கிறது. இதில் மனநோயாளிகளின் பொழுதுபோக்கு அவசியங்களை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டது. இது அவர்களுக்கு தெரபியாகவும் இருந்தது. அதில் இசை வாத்தியங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, விளையாட்டுப் பொருட்கள் போன்றவை இருந்தது.

அது தற்போது பாழடைந்து கிடக்கிறது அதை அரசு உடனடியாக சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுபோன்ற மனமகிழ் மன்றம் மனநோயாளிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று. மேலும், சிகிச்சை அளிக்கப்படுகிற கட்டிடங்களும், மனநோயாளிகள் தங்கும் காப்பகமும் பாழடைந்து கிடக்கிறது. அதையும் அரசு புதுப்பித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதுபோல மனநலம் பொறுத்தளவு மாவட்டம் தோறும் இந்த மருத்துவமனை போல இயற்கை சூழல் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். இதனால் மனநோயாளிகள் எளிதில் குணமடையவும், தனியார் மருத்துவமனைகளை கட்டுபடுத்தவும் முடியும்’’ என்கிறார்.

காஞ்சிபுரத்தில் இருந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடிபோதைக்கு அடிமையான மனநோயாளியின் மனைவியை விசாரித்தோம். அவர் தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் போட வேண்டாம் என கேட்டுக் கொண்டு பேசத் தொடங்கினார்.

‘‘என்னுடைய கணவர் குடிபோதையால் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழந்து இருந்தார். நிறைய தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் பார்த்தோம். பணம்தான் செலவழிந்தது. பிறகுதான் இந்த மருத்துவமனைக்கு வந்தோம். தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள். என்னுடைய கணவர் தற்போது கொஞ்சம் தேறி வருகிறார். இங்கு கழிவறை வசதி நன்றாக இருக்கிறது. குடிநீர் வசதியும் இருக்கிறது. மூன்று வேளை உணவும் நன்றாக இருக்கிறது’’ என்கிறார்.

புறநோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றுவரும் 45 வயது நபரின் உறவினர் பேசும்போது…‘‘எனக்கு திருவள்ளூர் மாவட்டம். இவர் என்னுடைய கணவருடைய சகோதரர். சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இங்கு வைத்து பார்த்து வருகிறோம். இவருடைய மனைவியும், குழந்தைகளும் இவரை விட்டு போய்விட்டதால் நாங்கள் பார்த்து வருகிறோம். இங்கு வாரம் வாரம் அழைத்து வந்து சிகிச்சை பெறுகிறோம். நல்லபடியாக பார்த்து வருகிறார்கள்.’’என்றார்.

பேராசிரியர் மற்றும் மருத்துவர் வாணியிடம் பேசும்போது...‘‘பொதுவாகவே தன் குடும்பத்தில் யாருக்காவது மனநோய் ஏற்பட்டால் அதை கௌரவம் சார்ந்த பிரச்னையாக பார்க்கிறார்கள். மனமும் உடலைப் போல பாதிக்ககூடிய ஒன்றுதான். அதற்குத்தான் இந்த மருத்துவமனை இருக்கிறது. மனநோயாளிகளும் நம்மைப் போலதான். அவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சை அளித்தால் அவர்கள் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

மனநோயின் தாக்கத்தைப் பொறுத்து புறநோயாளியாகவோ அல்லது இங்கு தங்க வைக்கப்பட்டோ மருந்து, மாத்திரைகள், ஊசி மூலம் சிகிச்சை அளிக்கிறோம். தேவைப்பட்டால் மட்டும் கரன்ட் ஷாக் தெரபி மூலம் சிசை அளிக்கப்படுகிறது.

அதுபோல இங்கு உள்ள மனநோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, காசநோய் போன்ற தொந்தரவுகள் இருக்கிறதா என பரிசோதித்து அதற்கேற்பவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது இருக்கிற தலைமுறையினரிடம் மனம் சார்ந்த நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். அதற்கு மரபு ரீதியாகவும், குடிபோதை பழக்கங்களும் காரணமாக இருக்கிறது. எந்த வகையான மனநோய் என கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மோசமான நிலையில்தான் அழைத்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கிறது. மனநலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களை குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இங்கு கொண்டுவந்து சிகிச்சை பெற வேண்டும்’’ என்கிறார்.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பற்றி டயட்டீஷியன் மீனாவிடம் பேசினோம்...‘‘இங்கு 900 நோயாளிகளுக்கு உணவு தயாராகிறது. இங்கு உள்ள நோயாளிகள் மனநோயாளிகளாக இருப்பதால் அவர்களுக்கு எளிதில் செரிமானம் அடைகிற வகையில் நன்றாக குழைய வேக வைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, கீரைகள், தானியங்கள் போன்ற உணவுகள் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. காலை மாலை டீ, காபியும் வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.’’‘‘நான் இந்த மருத்துவமனையில் 36 ஆண்டுகளுக்கு மேலாக செவிலியராக பணியாற்றி வருகிறேன். மற்ற மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கும், இங்கு மன நோயாளிகளுக்கிடையே செவிலியராக பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

இந்த வேலை இன்னும் கூடுதல் கவனத்தோடு செய்ய வேண்டிய வேலையாக இருக்கும். மனநல மருத்துவமனையில் சேவை மனப்பான்மையோடும், மன தைரியத்தோடும் பணியாற்ற வேண்டும். நோயாளிகளை இன்னும் கூடுதல் அன்பாகவும், அரவணைப்போடும் குழந்தைகளைப் போல கையாள வேண்டும். அப்படி இருந்தால்தான் இங்கு பணியாற்ற முடியும்.

மனநோயாளிகளை சிகிச்சை பெறுவதற்கு தயார் படுத்த வேண்டும் அவர்களை உணவருந்த வைக்க வேண்டும். அவர்களுக்கு மருந்து, ஊசி போன்ற சிகிச்சை அளிக்க வேண்டும். மன நோயாளிகளை நோயாளிகளின் குடும்பத்தாரால் கூட கவனிக்க முடியாது. இங்கு மனநோயாளிகளுக்காக செவிலியர்களுக்கு கூடுதல் பயிற்சி கொடுக்கப்பட்டு பணியாற்றுகிறோம். இங்கு 80 பெண் செவிலியர்களும் 40 ஆண் செவிலியர்களும் பணியில்  இருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் ஆண் செவிலியர்கள் பங்கு இன்னும் தேவைப்படுகிறது’’ என்கிறார் மருத்துவமனையின் செவிலியரான அருணாச்சலம் சாந்தி.

துறைகள் மற்றும் பரிசோதனை மையங்கள்உணவகம், அடுமனை பொம்மைகள் தயாரிப்பு நிலையம், தையல் பிரிவு, புத்தகம் பைண்டிங், இரும்பு வெல்டிங் பிரிவு, வண்ணம் தீட்டுதல் பிரிவு, தச்சு வேலை பிரிவு, தோட்ட வேலை, கூடை முடைதல், கைத்தறி நெசவுப்பிரிவு போன்ற பிரிவுகள் உள்ளன. ரத்தப் பரிசோதனை மையம் மற்றும் ஊடுகதிர் பரிசோதனை. இது தவிர மின்னணு மூளை செயல்பாடு பதிவு (EEG) பரிசோதனை, மன உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் திறன் சார்ந்த பரிசோதனைகள், இதற்கென M.Phil Clinical Psychology Course ஆரம்பிக்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டுள்ளது.

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்