SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரிடர் மேலாண்மை

2018-12-18@ 12:31:06

நன்றி குங்குமம் டாக்டர்

கவுன்சிலிங்

இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலங்களில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பெரியளவில் பொது மக்களின் உடைமைகள், பொதுச் சொத்துக்கள் சேதமடைவதோடு உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி மற்றும் அங்குள்ள கடற்கரை பகுதி மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது கஜா புயல்.

அப்பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் சுகாதார உதவிகளை உடனடியாக கிடைக்கச் செய்வது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குரிய பணிகளை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது. இன்னும் டிசம்பர் மாத இறுதி வரைக்கும் பருவமழைக் காலம் இருப்பதால் இதுபோன்ற மேலும் சில புயல்கள் உருவாவதற்கும் வாய்ப்பு இருக்கலாம். எனவே புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள நாம் நம்மை எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, இயற்கைப் பேரிடர் காலங்களில் நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது, அதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.

பேரிடர்களைப் பொறுத்தவரை, வரும் முன் தடுக்கும் Pro-active management, வந்த பிறகு நிலைமையை சீராக்க மேற்கொள்ளும் Reactive management என்று இரு வகைகள் உண்டு. முக்கியமாக, எதிர்பாராத பேரிடர்கள் வரும்போது அவற்றைச் சமாளிக்கும் பேரிடர் மேலாண்மையை (Disaster management) மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

வெள்ளம்

வெள்ளத்தைப் பொறுத்தவரை உடனடியாக திடீரென்று அதிகமாகி விடாது என்பது சாதகமான அம்சம். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெள்ளம் மேலே ஏறும். அதனால் அதிகாரிகள் வரட்டும் என்று காத்திருக்காமல், கூடிய வரை தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை மடைமாற்றும் வேலைகளை தங்கள் பகுதிகளில்  இருப்பவர்களே செய்து தற்காத்துக் கொள்ளலாம்.

பூகம்பம் வந்தால் கீழே வர வேண்டும் என்பது போல, மழை வெள்ளம் வரும்போது உயரமான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும். நீச்சலை ஒரு தற்காப்புப் பயிற்சியாக எல்லோருமே கற்றுக்கொள்வது நல்லது. பள்ளியிலேயே இதை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அப்போதுதான்  எளிதாக கற்றுக்கொள்கிற அளவு உடலும் மனதும் ஒத்துழைக்கும்.

மக்கள் பொதுவாக மழை வெள்ள காலங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது. அவசர உதவிக்கான எண்களை போனிலும் டைரியிலும் குறித்து வைக்க வேண்டும். சரியான நேரத்துக்குத் தகவல் கொடுத்தால்தான் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய முடியும். தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து இருந்தால் வீட்டின் மின் இணைப்பை துண்டிப்பது அவசியம். ஏனெனில் மின்சாரமானது தண்ணீரில் கசிந்து தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கிவிடும்.

இயற்கைப் பேரிடர்கள் நேரிடுகிற போது, வீட்டில் இருக்கும் பொருட்களை விட்டு வெளியேற மனமில்லாமல் பலரும் வீட்டுக்கு உள்ளே இருக்கிறார்கள். முந்தைய வெள்ள காலங்களில் நடந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் இந்த மனநிலையும் காரணமாக இருக்கிறது.

இக்கட்டான நேரத்தில் உயிர்தான் முக்கியம் என்பதை உணர்ந்து உடனடியாக வெளியேற வேண்டும். அதிகபட்சம் 6 அல்லது 8 அடிக்கு மேல் வெள்ளம் வரப்போவதில்லை என்பதால் முடிந்த வரை பொருட்களை உயரமான இடத்தில் வைத்துவிட்டு, விரைந்து வெளியேறிவிட வேண்டும்.

நிலநடுக்கம்

நிலநடுக்கம் வரும்போது கட்டிடங்களை விட்டு திறந்தவெளிக்கு வந்துவிட வேண்டும். லிஃப்ட்டை பயன்படுத்துவதை விட, படிகளில் வெளியேறுவது நல்லது. கட்டிடத்துக்கு வெளியே இருக்கிற சன்ஷேட், பைப் போன்றவற்றின் மூலமாகவும் வெளியேறலாம். உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்கிற அளவு உயரத்தில் இருக்கும்பட்சத்தில் குதிப்பதிலும் தவறு இல்லை.

இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பயம், பதற்றம் வருவது இயல்பானதுதான். ஆனால் கடந்த கால இழப்புகளைப் பார்க்கும்போது பயமும் பதற்றமும்தான் இழப்புகளைப் பெரிதாக்கி இருக்கின்றன. அதனால் ஒரு நிமிடம் பிரச்னை என்ன, நிலைமை என்ன, குழந்தைகள், பெரியவர்கள், பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்று நிலைமைகளுக்கு ஏற்ப யோசித்து, விரைந்து செயல்பட வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படும்போதும், பாறைகள் உருண்டு விழுகிறபோதும், பெரும்பாலும் நேராக கீழ்நோக்கித்தான் மண்ணும் பாறைகளும் வரும். அதனால் இடது அல்லது வலது பக்கமாக பக்கவாட்டில் ஓடி தப்பித்து விடவேண்டும்.

தீ விபத்துகள்

பேரிடர்களில் தீ விபத்து முக்கியமானது. பெரும்பாலான தீ விபத்துகளுக்குக் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. மின்சார சாதனங்களை தவறாக பயன்படுத்துவதாலும் தீ விபத்து ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கும் மின் கசிவே காரணமாக இருக்கிறது. மின்சார சாதனங்களுக்கு பக்கத்தில் தேவையற்ற பொருட்களை அடுக்கி வைத்திருப்பதும் இந்த அபாயத்தை அதிகப்படுத்துகிறது.

தீ விபத்து ஏற்படும்போது தீ உடலில் பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும். ஓடினால் தீ அதிகமாக பரவும். அடுத்தவர் மீது தீ பரவினால் அவர்களை கீழே தள்ளி உருளச் செய்ய வேண்டும். முடிந்தால் அவர்கள் மீது ஈரச் சாக்கைப் போட்டு தீயை அணைக்க வேண்டும். தீ பரவும் இடங்களில் நிற்கக்கூடாது. தீ பெரிய அளவில் பரவி அணைக்க முடியாத அளவில் இருந்தால் 101 மற்றும் 102 என்ற எண்களுக்கு போன் செய்து தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடவேண்டும்.

மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்

நோய்வாய்ப்பட்ட மக்களுக்காக ஆங்காங்கே நடத்தப்படும் மருத்துவ முகாம் மற்றும் தனியார் மருத்துவர்கள் ஊசி போட பயன்படுத்தும் சிரிஞ்சுகள், ரத்தங்கள், உறைந்த பஞ்சுகள் போன்றவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். சானிட்டரி நாப்கின்கள், டயாபர்கள் போன்ற பயோமெடிக்கல் குப்பைகளால் உண்டாகும் மாசுபாட்டால் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இதனால் அவற்றை கண்டகண்ட இடங்களில் எறியாமல் உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

பாதையோரக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சமைக்கும்போது நன்றாக நீரில் சுத்தம் செய்துவிட்டு உபயோகிப்பது நல்லது. சிறு குழந்தைகள் அடிக்கடி கைகளை வாய்க்குக் கொண்டு செல்பவர்களாக இருப்பதால், இந்த நேரங்களில் அவர்களை மிகவும் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.

நீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயச் சூழலில் ஒவ்வொருவரும் இருப்பதால் வெறும் காலோடு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன் கை, கால்களை நன்றாக நாம் சுத்தம் செய்து கொள்வதோடு, குழந்தைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கஅறிவுறுத்துவதும் நல்லது.

பேரிடர் காலங்களில் உயிர்க்கொல்லி நோய்களைத் தடுப்பது மற்றும் முதலுதவி சிகிச்சைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர் மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் ஆபத்தை உண்டாக்கக்கூடிய எலி, கொசு போன்றவற்றால் காலரா, டைபாய்டு, டெங்கு, மஞ்சள் காமாலை, வாந்திபேதி, எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இவற்றை வரும்முன் காப்பதுதான் சிறந்த வழி.

இயற்கை பேரழிவின்போது, தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கு சுகாதாரமாக இருப்பது அவசியம். சமைப்பதற்கு முன்னும், உணவு பரிமாறும் முன்னரும், சாப்பிடும் முன்னரும் நம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இயற்கை உபாதைகளுக்கு சென்றுவந்த பின்னும் கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பொதுவாக, நாய், பூனை ஆகிய வளர்ப்புப் பிராணிகளின் எச்சில், முடி போன்றவற்றால் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புகள் இந்த பேரிடர் காலத்தில் அதிகம். அத்தகைய நேரங்களில் வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவழித்தால் கிருமி நாசினிகளைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவிவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பண்டங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பிஸ்கெட், பிரெட், ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காப்பீடு அவசியம்


வீடுகளில் இருக்கிற பொருட்களை மழை, தீ விபத்து, திருடு போவது போன்ற அசம்பாவிதங்களில் இழந்தால் நஷ்டஈடு பெறும் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து காப்பீடு செய்துகொள்ளலாம்.

பொருட்களுக்கே  இன்ஸ்யூரன்ஸ் அவசியம் என்கிறபோது, மனிதர்களுக்கு எத்தனை அவசியம் என்பதையும் நாம் புரிந்துகொள்வது முக்கியம். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், எந்த மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பொருளாதார ரீதியாக நம்மை பாதிக்காத வகையில் தப்பித்துக் கொள்ளலாம்.

 தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-05-2019

  22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்