SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்!

2018-12-17@ 12:42:49

நன்றி குங்குமம் டாக்டர்

‘உடல் பருமன் என்றாலே உணவால் வரும் பிரச்னை என்ற நம்பிக்கை பலரிடமும் உண்டு. எனவே, எடை குறைப்பு முயற்சி என்றதுமே எந்த கேள்வியும் ஆலோசனையும் இல்லாமல் பலரும் உணவு விஷயத்தில்தான் கை வைப்பார்கள். பட்டினி கிடப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது என்று புத்திசாலித்தனமற்ற வழிமுறைகளைக் கையாள்வார்கள்.

இது எடை குறைப்பை தராமல் வேறு பக்க விளைவுகளையே தரும். பட்டினி கிடப்பதால், திடீரென்று அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தோன்றுவது, சத்துக்குறைபாடு ஏற்படுவது, மனநிலையில் சமநிலை இன்மை போன்ற அவதிக்கு ஆளாக நேரிடும்.எனவே, உடல் பருமன் என்றதுமே அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். இவற்றில் ஹார்மோன் மாற்றங்கள் தற்காலத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது’’ என்கிறார் நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர் சிவராஜ்.

‘‘தோற்றத்திற்கு அதி முக்கியம் தரும் பெண்கள், கொஞ்சம் எடை கூடினாலே அதிகம் கவலை கொள்பவர்களாக இருக்கிறார்கள். எடை குறைப்பிற்காக பல முயற்சிகளையும் செய்து பார்த்துவிடுவார்கள். ‘எல்லா வகையான டயட்கள், உடற்பயிற்சி, யோகா, ஸும்பா டான்ஸ் என எல்லாம் செய்தாலும், ‘எனக்கு ஏன் உடல் குறையவே மாட்டேங்குது?’ என்பது பலரின் விடை இல்லாத கேள்வியாக இருக்கும்.

எனவே, உங்களின் எடை பெருக்கத்திற்கு ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகிறது என்ற கோணத்திலும் நீங்கள் சிந்திக்க வேண்டும்நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு ஹார்மோனும் நம்முடைய மெட்டபாலிசத்தை பாதிப்பவை. ஒன்றுக்கொன்றும் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்று சம நிலையில் இல்லாவிட்டாலும், அது மற்ற அனைத்து ஹார்மோன்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவை நம்முடைய பசி உணர்வு, மெட்டபாலிசம் மற்றும் கொழுப்பு பகிர்வு என பல வழிகளிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவராகவும், சாதாரணமாக உணவு எடுத்துக் கொள்பவராகவும் இருந்தாலும் எடை குறையவில்லை என்றால் கண்டிப்பாக நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரையோ அல்லது மகளிர் நல மருத்துவரையோ அணுகுவது கண்டிப்பாக நல்லது.’’
என்னென்ன ஹார்மோன் மாற்றங்கள் எடை அதிகரிப்பில் முக்கியப் பங்காற்றுகிறது?

தைராய்டு ஹார்மோன்

தைராய்டு குறைவாக சுரப்பதால் வரக்கூடிய ஹைப்போ தைராய்டிஸம் என்கிற ஹார்மோன் நோய் சில பெண்களுக்கு வரும். இதனால் ஒழுங்கற்ற
மாதவிடாய் சுழற்சி, முடி கொட்டுதல், தோலில் வறட்சி போன்றவற்றோடு உடல் எடை அதிகரிப்பும் மிக வேகமாக நடக்கும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்


30-35 வயதில் இருக்கும் பெண்களுக்கு வரக்கூடிய Polycystic Ovary Syndrome(PCOD) பிரச்னை. இவர்களுக்கு ஓவரியில் நீர்க்கட்டிகள் உண்டாகி, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகப்படியாக இருக்கும். ஆன்ட்ரோஜன் அதிகமாக உற்பத்தியாவதால், உடல் எடை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பும் உண்டாகிறது. இன்சுலின் எதிர்ப்பு என்பது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை.

இவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு அதிகமாக இருக்கும். கூடவே முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதோடு, மலட்டுத்தன்மையும் உண்டாகக் காரணமாகிறது. மேலும், ஆன்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகி, முகம், உதடுகளின் மேல்புறம் போன்ற இடங்களில் அதிகப்படியான முடி வளரக்கூடும்.

பெரி மெனோபாஸ்

பெண்களின் மெனோபாஸ் நிலைக்கு முந்தைய நிலையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக உடல்எடை கூடி, அடிவயிற்றில் சதை போட ஆரம்பிக்கும். இதற்கு Visceral fat என்று பெயர். இது அடிவயிற்று உள்ளுறுப்புகளில் படிய ஆரம்பிப்பதால் இதயநோய்க்கு வழிவகுக்கும். இவர்களுக்கு இரவில் திடீரென Hot flushes ஏற்படும். சோர்வு, எரிச்சல் போன்றவையும் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவால் ஏற்படக் கூடியவை.

அட்ரினல் சுரப்பிAdrenal gland cortisol எனப்படும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் Cushing Syndrome என்ற குறைபாடு ஏற்படுகிறது. இந்த Cushing Syndrome-ஐ சில நேரங்களில் Hypercortisolism என்றும் குறிப்பிடுவோம். Cushing Syndrome உள்ளவர்களுக்கு முகம், கழுத்தின் பின்புறம், நடுவயிறு போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதை போட ஆரம்பிக்கும்.

மேலும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் வரக்கூடும். இது உடலினுள் ஸ்டீராய்டு ஹார்மோன் சுரப்பின் காரணமாக வருபவை. சிலர் நாள்பட்ட ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருத்துவரை அணுகாமல், தாங்களாகவே ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வார்கள். இப்படி வெளியிலிருந்து அதிகப்படியாக செல்லும் ஸ்டீராய்டு மருந்துகளினாலும் Cushing Syndrome வரக்கூடும்.
Hunger hormone

Leptin என சொல்லப்படும் ஹார்மோன் உடலின் கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக ‘நிறைவு ஹார்மோன்’ அல்லது ‘பட்டினி ஹார்மோன் என்றும் குறிப்பிடப்படுகிறது. லெப்டின் ஹார்மோன், மூளையில் இருக்கும் Hypothalamus என்ற பகுதியோடு தொடர்புடையது. நம் உடலில் போதுமான கொழுப்பு சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மூளைக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் மேற்கொண்டு சாப்பிட வேண்டுமா, சாப்பிட வேண்டாமா என்பதை மூளை முடிவு செய்யும்.

இந்த லெப்டின் அமைப்பு முறையாக செயலாற்றினால்தான் நாம் உணவு உண்பதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். லெப்டின் சுரப்பு அதிகரிப்பதால், இதன் சமிக்ஞைகள் மூளையை சென்றடையாதபோது, மேலும் மேலும் பசியுணர்வைத் தூண்டி உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
இன்சுலின்இன்சுலின் ஹார்மோன் குறைபாட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

இன்சுலின் எதிர்ப்பு இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. இதைத் தவிர, Testosterone ஹார்மோன் சுரப்பு குறைவாலும் உடல் எடை கூடும். எனவே, தைராய்டு, ஆன்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், கார்ட்டிசோல், லெப்டின், இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்களின் சமநிலையின்மையே உடல் பருமனுக்கு காரணமாகிறது.

- இந்துமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்